ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

va;i ugriva

ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட வாலி என்ன செய்கிறான்…?

நம்முடைய சகஜ வாழ்க்கையில் நாம் நோயாளியைப் பார்க்கிறோம்… கோபப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்… வேதனைப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்…!

ஏனென்றால் அந்த உணர்வுகள் அவர்களிடமிருந்து வெளி வரப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்தந்தச் சுவைக்கொப்ப சீதா லட்சுமியாக மாறுகிறது.

1.சீதா லட்சுமியாகச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
2.அந்த வேதனைப்படுவோரின் உணர்வலைகளை நாம் நுகர்ந்தறிந்தால் சீதா ராமன்.
3.அதாவது அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ
4.அந்த வேதனைப்படும் எண்ணங்களை நமக்குள்ளும் உருவாக்குகின்றது.

ஆனால் வேதனைப்படும் எண்ணங்கள் வரப்போகும் போது இது வாலியாகி விடுகின்றது. நம் எண்ணங்கள் சோர்வடைகின்றது. ஏனென்றால் வாலி எவரைப் பார்த்தாலும் அவன் வலிமையைச் சரி பகுதி பெற்று விடுவான்.

உயர்ந்த குணம் கொண்டு வேதனைப்படுவோர்களைப் பார்க்கின்றீர்கள். அதை நுகர்ந்தபின் சீதாராமா… அந்த எண்ணங்கள் என்ன செய்யும்…? வாலியாகி விடும். உங்கள் வலு இழக்கப்படுகின்றது.

அப்போது இதை எப்படி மாற்ற வேண்டும்…?

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகக் கவர்ந்து வரும் பொழுது அது “சுக்ரீவன்…”

இராமன் என்ன செய்கின்றான்…? சுக்ரீவன் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவனின் துணை என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்கிற போது
3.விஷத்தின் தன்மையை ஒடுக்கிய அந்த சுக்ரீவன் துணை கொண்டு அடக்குகின்றான்.
4.ஆனால் வாலியின் சகோதரன் தான் சுக்ரீவன். இவன் இளையவன். அவன் மூத்தவன்.

புழுவிலிருந்து விஷத்தின் வலு கொண்டு தான் பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்தோம். மனிதனான பின் இந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கும் மார்க்கங்களைத் தான் தெளிவாகக் காவியங்களாகக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

இராமயாணம் எது…? என்றாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இராமன் கடவுள் என்றால் நம் எண்ணங்கள் நமக்குள் கடவுளாகின்றது.
1.எதன் உணர்வு நமக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறதோ
2.அதுவே கடவுளாக வந்து இயக்குகின்றது.

ஆனால் இராமன் தனித்து ஒரு கடவுள் இல்லை. நம்முடைய எண்ணங்கள் தான் கடவுள் என்ற நிலைகளை வான்மீகி அன்று சொன்னார். உள் நின்று அது இயக்குகின்றது.

நம் எண்ணத்தின் நிலைகளை ஈசனாக இருந்து உருவாக்குவது நம் உயிரே…! அந்த உணர்வின் எண்ணங்கள் வரப்போகும் போது உள் நின்று அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

அதனின் குணத்தைச் “சக்தி…” என்றும் உணர்வின் தன்மை உறைவதை உடல் “சிவம்…” என்றும் சிவத்திற்குள் உள் நின்றே நம்மை இயக்குகிறான் என்றும் மீண்டும் எண்ணப்படும் போது அதன் வழி கொண்டு “குருவாக…” நம்மை இயக்குகின்றான் என்ற நிலையை இவ்வளவு தெளிவாக நம் காவியங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கொஞ்சமாவது நாம் அதைச் சிந்திக்கிறோமா….?

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் குறைகளைக் கண்டாலோ கோபப்படுவோரைக் கண்டாலோ வேதனைப்படுவோரைக் கண்டாலோ “ஈஸ்வரா…!” என்று உயிரான ஈசனிடம் முதலில் எண்ணத்தைச் செலுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
1.நுகர்ந்த தீமைகளை வலுவாக்காதபடி
2.அருள் உணர்வுகளை வலுவாக்குங்கள்.

Leave a Reply