அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

Mathaji Kali

அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

 

“ஆனந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்…!” என்று இருக்கின்றார்கள். அதில் சேர்ந்தால் தவறு ஏதாவது செய்தால் கொலை செய்து விடுகிறார்கள். இப்படிக் கடவுளின் பேரைச் சொல்லிக் கொண்டு தன் மதம் என்ற நிலையில் இது ஒரு மார்க்கம் என்று தவறான வழியில் செயல்படுகிறார்கள்.

நான் (ஞானகுரு) காசிக்குப் போகும் போது அந்த அகோரிகள் மனிதப் பிணத்தை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னேன். யாருமே இதை நம்பவில்லை…!

அப்புறம் ரொம்ப நாள் கழித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் வந்த பின் நம்பினார்கள். அதில் ஒரு மாநில கவர்னரின் மகனும் இருந்தான். நர மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு வந்து அறுத்துப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள் என்று போட்டிருந்தார்கள்.

ஏனென்றால் நான் அங்கே நடப்பதை நேரடியாகப் கண்ணில் பார்த்தேன். அதைத்தான் சொன்னேன்.
1.இப்படி எல்லாம் உலகத்தில் இருக்குமா…!
2.அது எப்படிங்க அறுத்துச் சாப்பிட அரசு (GOVERNMENT) அனுமதிக்கும் என்றார்கள்…?

ஏனென்றால் என்னையே (ஞனாகுரு) அந்த அகோரிகள் கொன்று சாப்பிட வந்தார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி காசி கங்கைக் கரையில் நாற்பத்தெட்டு நாள் தியானம் இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஓ…ஹோ… ஓ…ஹூ…! ஓ…ஹோ…ஹோ…ஹோ…! மாதாஜி…! என்று சப்தம் போட்டுக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

நான் இங்கே கங்கை மணல் திட்டில் வருவதற்கு முன் நாதுராம் என்ற ஒருவனிடம் பணத்தையும் கொடுத்து விலாசத்தையும் கொடுத்திருந்தேன். ஒரு டெலஸ்கோப்பையும் கொடுத்துவிட்டு இங்கே ஏதாவது வித்தியாசமாக ஆனால் நேராக மங்களூருக்குத் தந்தி கொடுத்துவிடு…! என்று சொல்லி இருந்தேன்.

நான் சொன்ன மாதிரி அவன் அங்கே கங்கைக் கரையிலிருந்து இங்கே என்ன நடக்கிறது…? என்பதை டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இங்கே அகோரிகள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். திடீரென்று அவர்கள் முன்னாடி காளி ரூபம் கிடைத்தவுடனே “மாதாஜி… மாப் கரோஜி…! மாதாஜி… மாப் கரோஜி…! என்று தாளத்தை மாற்றி எல்லாம் ரவுண்டு அடித்தார்கள்.

1.“என் தாய் காளியை…
2.அதாவது கல்கத்தா காளியை… அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்…!”
3.அந்த ரூபத்தில் வந்தவுடனே அப்படியே அரண்டு போய் “மாதாஜி மாப் கரோஜி…!” என்றார்கள்.

அப்புறம் அந்த நேரத்தில் நாதுராம் படகை அனுப்பி வைத்தான். நான் அங்கிருந்து திரும்ப வந்துவிட்டேன்.

அதே சமயத்தில் காசியில் பண்டாக்கள் என்று இருப்பார்கள். ஒவ்வொரு மடத்திற்கும் ஐம்பது பேர் நூறு பேர் என்று இருப்பார்கள். ஏதாவது என்றால் உடனே சண்டைக்குப் போவார்கள். கையில் துப்பாக்கி கத்தி எல்லாமே வைத்திருப்பார்கள். இப்படி இந்தப் போக்கிரிகள் வாழக்கூடிய இடம் காசி.

விவரம் தெரியாமல் அங்கே படகில் போனால் போதும். கங்கையிலே குதிப்பார்கள். உள்ளே சென்று போகின்ற படகை அப்படியே கவிழ்த்தி விடுவார்கள்.

தண்ணீருக்குள் போனவுடனே அப்படியே போட்டிருக்கும் நகை எல்லாம் அத்து எடுத்துக் கொண்டு போய்விடுவான். காசியில் இப்படி எல்லாம் காரியங்கள் நடக்கிறது. அங்கே தான் புனித நீராடுகிறார்கள்.

ஏனென்றால் இந்த ரகசியம் எல்லாம் அறிவதற்காக வேண்டித்தான் 48 நாட்கள் குருநாதர் என்னை (ஞானகுரு) அங்கே இருக்கச் சொன்னார்.
1.இங்கே என்ன நடக்கிறது…?
2.காசி விஸ்வநாதர் என்ன எல்லாம் செய்கிறார்…?
3.என்னென்ன பாவத்தை எல்லாம் போக்குகிறான் பார்…! என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் கங்கையிலே “நீர் சமாதி…!” என்று வைப்பார்கள். அங்கே இருக்கும் போக்கிரிகள் அவர்களுக்கு ஆகாதவர்களைக் கொன்று இங்கே தண்ணீரில் தள்ளி விட்டுப் போய்விடுவார்கள். தண்ணீரில் போய்விட்டது என்றால் யார் அடித்தார்கள்…? எவர் அடித்தார்கள்…? என்ற கேள்வி இல்லை.

காலையில் கங்கைக் கரையில் பார்த்தோம் என்றால் தலை கை கால் முண்டமெல்லாம் நாய் இழுத்துக் கொண்டு வந்து தின்று கொண்டிருக்கும். காசியில் அங்கே என்னென்ன நிலைகள் நடக்கிறது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்தேன்.

அதே மாதிரி “அரிச்சந்திரா காட்..!” (இடுகாடு) என்று உண்டு. அங்கே வைத்து இறந்தவர்களை எரிப்பார்கள். பிரேதம் வேகும் பொழுதே இந்த அகோரிகள் வந்து விடுவார்கள்.

அது நல்ல சரீரமாக இருந்தது என்றால் உடனே “நிறுத்து…!” என்பார்கள். சரீரம் வெந்திருந்தது என்றால் அதற்குள் இருக்கும் ஈரலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அமாவாசை அன்றைக்கு இந்த வேடிக்கை எல்லாம் நடக்கும்.

நல்ல பிரேதமாக இருந்தால் அகோரிகள் பார்த்தவுடனே சலோ…! சலோ…! என்பான். உடனே விலகிக் கொள்வார்கள். விலகவில்லை என்றால் முழித்துப் பார்ப்பான். சாபமிடுவான்…! இதற்குப் பயந்தே விட்டு விலகிவிடுவார்கள். அந்தக் காட்டில் எல்லாம் அவர்களுடைய இராஜாங்கம் தான். அவர்களிடம் கப்பம் கட்டிவிட்டுத்தான் ஏரிக்க வேண்டும்.

அன்றைக்கு அரிச்சந்திரன் எப்படி இருந்தானோ அதே மாதிரித்தான் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு போய் அதனின் நெற்றியில் சூடத்தைப் பொருத்தி வைத்து ஜெபத்தைப் பண்ணுவான்.

இந்தச் சரீரம் நகரும். நகர ஆரம்பித்தவுடனே அறுத்து அப்படியே பச்சையாகவே தின்பார்கள். அதாவது ஆண்டவனுக்காக வேண்டி அர்ப்பணிக்கிறோம் என்று செய்கிறார்கள்.

புதிதாக யாராவது போனாலும் இதை எல்லாம் பார்த்துப் பயந்தான் என்றால் அவனையும் கொன்று சாப்பிட்டு விடுவார்கள். ஏனென்றால் ஆண்டவனை அடைய வந்தான், அவனுக்காக வேண்டி உடலைக் கொடுத்தாலும் இந்த உயிர் ஆண்டவனிடம் போய்ச் சேருகிறது அதனால் பயப்படாமல் இதைச் செய்…! என்று இப்படி ஒரு தத்துவத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆண்டவனை அடைய வேண்டும் என்றால் அவன் உடலிலிருக்கக் கூடிய எதையும் கழிக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுகின்றார்கள், ஆக ஆண்டவனுடன் ஐக்கியமாகின்றான் என்று இப்படி ஒரு தத்துவம்.

நான் (ஞானகுரு) இதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து இங்கே சொன்னால் யாருமே நம்பவில்லை. சாமி “டூப்” விடுகிறார்… சரியான “கப்சா” விடுகிறார்…! என்றே சொன்னார்கள்.

அப்புறம் பல வருடம் கழித்துப் பத்திரிக்கையில் வந்ததும் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து “சாமி…! நீங்கள் ஏற்கனவே சொன்னீர்கள்.. அது நிஜமாகவே நடக்கிறது….! அன்றைக்கு டூப் விடுகிறீர்கள் என்று சொன்னேன்… என்னை மன்னித்து விடுங்கள்…! என்று சொன்னார்.

ஏனென்றால் இது எல்லாம் உலகில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.
1.உலகம் எப்படி இருக்கிறது…?
2.மதங்கள் எப்படி இயக்குகின்றது…? என்று இதெல்லாம்
3.முழுமையாகப் பார்த்துவிட்டு வந்து தான் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்… சும்மா இல்லை…!

மனிதன் மதத்தின் நிலைகள் கொண்டு செல்லும் பொழுது சாகாக்கலையாகிறது. இறந்தால் இந்த உடலில் எதைச் செய்தோமோ மீண்டும் அந்தக் கலையாக மீண்டும் உடலாக உருவாகும்.

ஆனால் மகரிஷிகள் அனைவருமே வேகா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெற்றவர்கள். நாம் அதை அடைய வேண்டும். அந்தப் பக்குவம் வேண்டும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் சில குறைகளைக் காண நேரினும் அதை அகற்றும் இந்த ஞாபக சக்தியும் அந்த ஞானமும் பெற வேண்டும் என்பதற்கு தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.
1.உங்கள் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரும் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசித்தது.

ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவதற்கு நம் உடலிலுள்ள ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் முகப்புகளிலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் செருகேற்றிக் கொள்வோம்.

அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் நம்மைப் பற்றாது ஆத்ம சுத்தி என்ற ஆயுத்தைப் பயன்படுத்தி எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply