இருண்ட நிலைகளைப் பேரொளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானத்தின் தத்துவம்…!

Fore most God

இருண்ட நிலைகளைப் பேரொளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானத்தின் தத்துவம்…!

 

இந்த உடல் வாழ்க்கையில் மீறி மீறிப் போனால் நாம் எதைக் கொண்டு போகப்போகிறோம்…? ஒன்றுமே இல்லை…! இந்த உடலையே கொண்டு போக முடிவதில்லை…!

அழகான ஆடையைத் தைப்போம். அழகான வீட்டைக் கட்டுவோம். ஆனால் தலை வலி… மேல் வலி… காய்ச்சல்…! என்று உடல் சுருங்கும் போது என்ன செய்கிறோம்…?
1.நல்ல சட்டையைப் போடுங்கள்…
2.நல்ல உணவை உட்கொள்ளுங்கள்…
3.அந்த இடத்திற்குப் போகலாம்… இங்கே போகலாம்…! என்று உங்களிடம் யாராவது சொன்னால் என்ன சொல்வீர்கள்…?

என்னை என்ன கிண்டல் செய்கிறீர்களா..? என்று தான் கோபப்படுவீர்கள். நல்ல ஆடையைப் போட வேண்டும்… நல்ல உணவை உட்கொள்ள வேண்டும்…! என்று நினைத்தாலும் அப்பொழுது அது முடிவதில்லை,

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் அகண்ட அண்டத்திலிருந்து பெற்று அந்தச் சூரிய குடும்பங்கள் வளர்ந்து அது கவர்ந்த உணர்வின் சக்தியை நமது பிரபஞ்சம் கவர்ந்து நமது பிரபஞ்சத்தில் உயிரின் தன்மையை உருவாக்குகின்றது.

அகண்ட அண்டத்தின் உணர்வின் தன்மை மனிதனுக்குள் சிந்தனையை உருவாக்கி இருளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் பெற்று அந்தப் பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்.

அகண்ட அண்டத்திலிருந்து முதல் அவதாரமாக சூரியன் நாராயணனாக உருவாகிறது, மறு அவதாரம் உணர்வின் அணுக்களாக மாற்றும் திறன் பெற்றது நமது உயிர் விஷ்ணு.

சூரியன் தன்னுடைய சுழற்சியால் வெப்பமானாலும் உயிரின் துடிப்பினால் இரண்டவதாக ஏற்படும் வெப்பம் விஷ்ணு. நம் உயிர் விஷ்ணுவாக இருப்பினும் உயிரால் கவரப்பட்ட உணர்வுகள் அதை நுகர்ப்படும் பொழுது உயிரைப் போன்று எந்தக் குணத்தின் மணத்தைச் சுவாசித்தோமோ அதன் மறு அவதாரமாக சீதாராமனாக எண்ணங்கள் தோன்றுகிறது.

எந்த உணர்வின் தன்மை அணுவானதோ அந்த விஷ்ணுவின் மறு அவதாரமாகச் சீதா ராமனாகத் தோன்றி அதாவது
1.நுகர்ந்து கொண்ட சத்தின் தன்மை உயிரிலே பட்ட பின்
2.அதற்குத் தக்க உணர்ச்சிகளக எண்ணங்களாக இயக்குகிறது
3.அதாவது மூன்றாவது நிலை கொண்டு எண்ணத்தால் உருவாக்கும் நிலைகள்.

நாராயணன் சூரியனாக இருந்தாலும் அது விஷ்ணுவின் தன்மையாக வரப்போகும் பொழுது உணர்வின் அணுக்களை ஒளியின் சிகரமாக மாற்றும் மனித உடலில் பெற்ற பின் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை மாற்றும் திறன் பெற்றது. ஆகவே முழு முதற் கடவுள்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பகைமையை நீக்கி உணர்வை ஒன்றாக்கி ஒளியின் உடல் பெற்று மகிழச் செய்யும் உணர்வை நமக்குள் எடுக்கும் போது உடலுக்குள் அது விளையத் தொடங்குகிறது.

1.அப்படி விளையும் பொழுது அந்த இயக்கம் “ஈசன்” என்றும்
2.அதிலே ஏற்படும் வெப்பம் “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தம் “லட்சுமி” என்ற நிலையில்
3.எல்லோருக்கும் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் “பிரம்மமாகின்றது…!”

பிரம்மவின் மனைவி ஞானம் சக்தி – சரஸ்வதி. அந்த உணர்வின் தன்மை வரும் போது நம் உடலுக்குள் அனைத்தையும் ஐக்கியமாக்கும் உணர்வின் தன்மை பெறுகின்றது.

நமது சொல்லின் தன்மை நாம் வெளிப்படுத்தும் போது இருளை அகற்றிடும் நிலையும் அனைவரையும் ஒளிமயமாக மாற்றும் நிலையும் அறிவின் தன்மையை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகிறது.

ஆகையினால் கடவுளின் அவதாரம் என்றாலும் மறு அவதாரம் விஷ்ணு (உயிரின் நிலைகள்) என்று தான் இதிலே முக்கியமாகின்றது, நாம் சொல்லும் (சுவாசிக்கும்) உணர்வுகள் நம் உயிரிலே (விஷ்ணு) மோதும் பொழுது அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது. உணர்ச்சிகள் நம் உடலிலே படர்கின்றது. எந்த உணர்வோ அதன் வழி நம்மை வழி நடத்துகின்றது உயிர்.

நம்மை வழி நடத்தும் அந்த உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு அருள் ஒளியை எவர் நுகர்கின்றரோ அவருக்குள் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வுகள் பெறச் செய்யும்.

1.ஆதியிலே இருண்ட நிலையாகத்தான் எங்குமே இருந்தது. (சூனியப் பிரதேசம்)
2.இருண்ட நிலைக்குள் விஷத்தின் தன்மை (DARK MATTER) தான் கலந்திருந்தது.
3.ஆங்காங்கு இருக்கும் அந்த விஷத்தின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் உணர்வுகள் வரப்போகும் போது சிறிது வெப்பம் உருவாகின்றது.
4.வெப்பமான பின் ஆவியாகின்றது.
5.ஆவி என்ற நிலைகள் வரப்போகும் போது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகின்றது.
6.நெருப்பாகும் பொழுது நகர்ந்து சென்று ஒன்றை உருவாக்கும் நிலை பெறுகின்றது,

நகர்ந்து செல்லும் நிலையில் அந்த ஈர்க்கும் சக்தி காந்தமாகவும்… விஷம் இயக்கச் சக்தியாகவும்… வெப்பம் உருவாகும் சக்தியாகவும்… காந்தம் அரவணைக்கும் சக்தியாகப் பெறுகின்றது.

காந்தம் அரவணைத்துத் தன்னுடன் மோதப்படும் போது மோதிய உணர்வின் சத்து எதுவோ அதன் வழி “பிரம்மம்…!” உருவாக்கும் சக்தி பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.எதன் உணர்வு பெற்றதோ அந்த உணர்ச்சிக்கொப்ப
2.உருவாக்கும் அதன் இயக்க சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3.அதனால் தான் மனிதனான பின் இந்த இருளை அகற்றி எதனையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் நிலைகள்.
4.மற்றது சந்தர்ப்பத்தால் மோதும் தன்மைகள் தான்…!

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு நம் வாழ்க்கையை அமைத்து விடுகிறது. ஆனால் அதைப் போன்ற சந்தர்ப்பத்தை மாற்றி அருள் உணர்வு என்ற நிலையைப் பெற்று அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

சந்தர்ப்பத்தால் தீமைகளை நுகரும் போது அதன் வழிக்கே அது நம்மை அழைத்துச் சொல்லாதபடி அடக்கும் உணர்வாக நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த அகஸ்தியன் தீமைய மாற்றிய அதே உணர்வைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடல் சாப்பிடும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றும் வலிமை கொண்டது போல்
1.கார்த்திகேயா என்ற நிலையில் அந்தத் தெரிந்து செயல்படும் வலிமையான உணர்வு கொண்டு
2.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உள் செலுத்தி தீமைகளை அடக்கிப் பழகுதல் வேண்டும்.
3.அப்பொழுது நம் உடலில் உள்ள தீமையான அணுக்களை நாம் ஒளியாக மாற்றுகின்றோம்.

இப்படி வாழ்க்கையில் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத் தான் இப்போது உங்களுக்கு இதைத் தெளிவாக்கியது. ஆகவே அருள் ஞானத்தை வளர்த்து கொள்வோம்.

குரு அருளைப் பெறுவோம். பேரருளை நமக்குள் பெறுவோம். உலக இருளை நீக்குவோம் என்ற உணர்வுடன் நாம் உறுதி கொள்வோம்.

Leave a Reply