தியானத்தின் மூலம் பெறும் சக்தியைப் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது

power of meditation

தியானத்தின் மூலம் பெறும் சக்தியைப் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது

 

நான் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் சுழல்கிறது. எப்படி…? அதாவது
1.நாம் எடுக்கும் சுவாசம் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே பட்ட பின் ஒலிகளை (எண்ணங்கள்) எழுப்புகிறது.
2.பின் அந்த உணர்வின் தன்மை உடல் முழுவதும் சுழலுகின்றது.
3.சுழலும் போது தான் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உடலையே இயக்குகின்றது.
4.அதனால் தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று ஞானிகள் அழைக்கின்றார்கள்.

உயிருக்குள் உணர்வுகள் பட்டபின் ஒலி அலைகளைச் சுழலச் செய்கின்றது. நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலேயும் சுழலும் போது மோதி அதையும் இயக்குகின்றது.

நம் உயிர் (விஷ்ணு) எப்படி இயக்குகின்றது என்பதையும் நாரயணன் (சூரியன்) எப்படி மற்ற தாவர இனங்களை இயக்குகின்றது என்பதையும் ரூபத்தைப் போட்டுக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் எழும்பி என்ன செய்கிறது…? அந்த உணர்ச்சியின் தன்மையாக் நம்முடைய நிலையும் வேதனைப்படும்படியாக இயக்குகிறது.

புலி வருகிறது என்றால் “அது நம்மைத் தாக்கிவிடும்…!” என்று எண்ணியவுடனே அந்த ஒலியை எழுப்பி இந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி சுழற்சியான பின் என்ன செய்கிறது…?

இந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றது.
1.எதை உற்றுப் பார்த்தோமோ
2.நாம் பாதுகாக்கும் உணர்வுகளை எண்ணும் போது
3.நம் கண்கள் அந்தப் பாதுகாப்பான இடத்தை நாடி அங்கே அழைத்துச் செல்கின்றது.
4.அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆகவே ஒரு நோயாளியைப் பார்த்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்து அதை அடக்க வேண்டும். அடங்கவில்லை என்றால் கூடக் கொஞ்சம் நேரம் சேர்த்து எடுத்து அடக்க வேண்டும்.

இந்த உணர்வை வலுவாக்கிய பின் வலுவான இந்த எண்ணம் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் (நோயாளியின்) உடலிலே படர வேண்டும். அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர் அருள் ஞானம் பெற வேண்டும். அருள் வழியில் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி நுகர்ந்து இதைக் கூட்டிக் கொண்டோம் என்றால் ருசி இங்கே வந்து விடுகிறது. நோயாளியின் வேதனை நமக்குள் புகாதபடி அந்த மகரிஷிகளின் உணர்வினைக் கலந்து இப்படிச் சுவைமிக்கதாக உருவாக்க வேண்டும். அதற்குத் தான் உபாயத்தைக் கொடுக்கின்றோம்.

ஆகவே பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வராதபடி
2.சேனாதிபதியான முருகன் ஆயுதங்களை வைத்து
3.முன் நின்று தடுத்து நிறுத்துகின்றான் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அத்தகைய பாதுகாப்பின் தன்மை கொண்டு அந்தத் தீமை தனக்குள் வராதபடி ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை எடுத்து உருவாக்குதல் வேண்டும்… அது தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன்.

ஆறாவது அறிவை இப்படி உபயோகிக்கத் தவறினால் எதைச் சமைக்கின்றமோ அதன் வழி தான் நம் வாழ்க்கையின் ருசியும் இருக்கும்.

ஏனென்றால். கார்த்திகேயா…! நோயாளி வேதனைப்படுகிறான் என்று அறிய முடிகின்றது. வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் தான் அவனைக் காக்கவும் முடியும்… காக்க வேண்டும் என்ற எண்ணங்களும் வரும். இருந்தாலும்
1.அந்த வேதனையை தனக்குள் வராதபடி பாதுகாத்து
2.அருள் ஒளியின் சுடரைத் தனக்குள் உருவாக்கி அந்த ஒளியின் சுடராக நமக்குள் உருவாக்கிய உணர்வு கொண்டு
3.அந்த எண்ணங்களால் மீண்டும் அவனைப் பார்க்கப்படும் போது நலமாக வேண்டும் என்ற உணர்வைக் கூட்டப்படும் போது
4.அந்த வேதனைகளை இது அங்கே உந்தித் தள்ளுகிறது…!
5.அதாவது ரிமோட் கன்ட்ரோல் போல் அவன் உணர்வை நமக்குள் வராதபடி இந்த உணர்ச்சியின் தன்மை பாதுகாப்பு கவசமாக அமைகின்றது.

நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது.

இதை விடுத்து விட்டு நாம் எந்த நோயாளியின் வேதனையை எடுத்தோமோ அவர்களின் எண்ணத்தைத் தான் வளர்த்து கொள்கின்றோமே தவிர இதை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற நிலை இல்லை… தெரியவில்லை…!

1.ஆகவே தியானத்திற்கு வந்தால் பத்தாது.
2.வெறும் தியானத்தைச் செய்தால் பயனில்லாதது.
3.எடுத்துக் கொண்ட சக்தியைப் பயன்படுத்தும் முறைகளில் தான் தியானத்தின் வலுவை நீங்கள் அனுபவிக்க முடியும்.

சாமி காப்பாற்றுவார்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோசியம் காப்பாற்றும்… மந்திரம் காப்பாற்றும்… என்கிற முறையில் நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
1.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய
2.அந்த அவசியமான துப்பாக்கியை உங்கள் கையில் கொடுக்கிறேன்.
3.தீமைகள் வரும் போது எடுத்துச் சுட்டு விட்டீர்கள் என்றால் அது வீழ்ந்து விடும்.

அத்தகைய அருள் ஞானத்தை உங்களுக்குள் எடுத்துக் கொண்டால் தான் அந்தத் தீமை என்ற உணர்வை உங்களால் எளிதில் வீழ்த்த முடியும். இது ஒன்றும் கஷ்டமில்லை. இந்த நம்பிக்கையைத்தான் உங்களிடம் கொடுக்கிறேன்.

ஆனால் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…? என்றால் தனக்குக் கஷ்டம் வந்தது என்றால் கஷ்டம் உள்ளவர்களை எல்லாம் கலந்து இன்னும் ஜாஸ்தியாக வருத்தப்படுவார்கள்.

ஒருவர் கஷ்டத்தைச் சொன்னால் அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அதற்குண்டான உபாயங்களைச் சொல்லி அவர்கள் நிலைமையை நல்லதாக மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் சொன்ன கஷ்டத்தை வளர்த்து இவர்களும் கஷ்டம்… கஷ்டம்…! என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

பாலில் பாதாமைப் போட்டு அப்படியே கொஞ்சம் விஷத்தைக் கலந்து கொடுத்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? இவர்களும் சாப்பிட்டு விட்டு ஆமாம்… நானும் சாப்பிட்டேன்… எனக்கும் இப்படித்தான் மயக்கமாக வருகிறது…! என்பார்கள்.

சாமி (ஞானகுரு) என்னத்தைக் கொடுத்தார்…? என்ற நிலையில் விஷத்தைக் கலந்து கொடுத்தால் அதை ஒதுக்கி வைப்பதற்குப் பதில் அப்படியே சாப்பிட்டால் எப்படிச் சரியாக இருக்கும்….!

ஆக மொத்தம் தான் வளர்வதைக் காட்டிலும் மற்றவர்களையும் வளர விடாமல் செய்வது தான் இந்தக் குணம்.
1.தான் வளர்வதும் இல்லை.
2.மற்றவர்களை வளரவிடுவதும் இல்லை.

களை முளைத்து விட்டால் அது மற்ற நல்ல வித்துகளை உருவாக்க விடுவதில்லை. ஆனால் களைகளை நீக்கினால் தான் நல்ல வித்திற்கு நல்ல உரம் கிடைக்கும்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டபின் அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து எடுத்துப் பாதுகாப்பாக உடலுக்குள் சொருகிக் கொண்டே வர வேண்டும்.

இதைக் கலக்கக் கலக்க அந்த விஷம் தணியும். விஷம் தணியும் பொழுது தெளிவான சிந்தனைகள் வரும். தெளிவான சிந்தனைகள் வரும் பொழுது நம் செயல்கள் அனைத்தும் நல்லதாக அமையும்.
1.நமக்கும் நல்லதாகும்…
2.மற்றவர்களுக்கும் நல்லதாகும்…
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து இப்படிப் பயன்படுத்திய அனுபவங்கள் நிச்சயம் நமக்கு வேண்டும். (இது தான் முக்கியம்)

Leave a Reply