தங்கம் செய்யும் வித்தைக் காட்டிவிட்டு அதன் பின் உன் மனதைத் தங்கமாக்குடா போடா…! என்றார் குருநாதர்

Golden heart

தங்கம் செய்யும் வித்தைக் காட்டிவிட்டு அதன் பின் உன் மனதைத் தங்கமாக்குடா போடா…! என்றார் குருநாதர்

 

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் என்னைத் தங்கம் செய்யச் சொன்னார் குருநாதர். பாதரசம் ஈயம் காரீயம் இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புக் கரண்டியையும் கொண்டு வரச் சொன்னார்.

எல்லாம் போட்டு அதிலே அதிலே பாஷாணக் கல்களைப் போட்டவுடனே தண்ணீராகக் கரைகிறது. ரசமாக மாறி குழம்பு மாதிரி ஆகிவிடுகிறது.

அது குழம்பு மாதிரி ஆன பிற்பாடு அங்கே இருக்கிற குப்பை செத்தை எல்லாவற்றையும் போட்டு எரிக்கச் சொன்னார். அது எரித்தவுடனே அதிலே இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் ஆவியாகப் போய்விடுகிறது.

அதிலே பாதரசம் மாதிரி மிஞ்சுகிறது, பல பொருள்களும் அது வேக வேக இந்த உணர்வுகள் அதிகமாகிறது. கடைசியில் “இது எப்படிடா இருக்கிறது…?” என்று கேட்டார் குருநாதர்.

நெருப்பிலே இருந்தால் எப்படி இருக்கும்..? அது பளீர்…! என இந்த நெருப்பு மாதிரியே தெரிந்தது.

எப்படிடா இருக்கிறது…? என்றார்.

தக…தக…! என்று இருக்கிறது என்று சொன்னேன்.

என்னடா…! தக…தக…? என்று சொல்லி எனக்கு இரண்டு அடி கொடுத்தார். அவர் எப்படி இருக்கிறது என்று கேட்கக் கேட்க நான் தக…தக…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

தக…தக…! என்றால் என்ன…? என்றார்.

தங்கம் மாதிரி இருக்கிறது….! என்றேன்.

தூ……! என்று துப்புடா… போட்டு விட்டார். தூ…! என்று அவர் துப்பினார். இது எனக்குத் தெரியாது. தூ…! என்று உமிழ் நீரைத் துப்பி அதாவது
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லச் சொல்லி விட்டு
2.அந்த உணர்வை எடுத்து அது மேலே துப்புகின்றார்.

மூடுடா…! என்றார். அப்புறம் பார்த்தால் தங்கக் கட்டியாக இருக்கிறது. இதிலே இத்தனை வேலை இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லி அந்த உணர்வை எல்லாம் எனக்குள் ஊட்டி ஒவ்வொரு அறிவையும் கொடுக்கிறார்.

தங்கத்தைக் கொண்டு போய் கடையில் விற்று வா என்றார் குருநாதர். நகைக் கடை ஆசாரி ஒருவரிடம் கொடுத்ததும் அவர் உரசிப் பார்த்தார்.

அட… அட… அடா…! நைனா… கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டது…! அவருக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் இதை எதிலே செய்தீர்கள்…? எப்படிச் செய்தீர்கள்…! என்று கொஞ்சம் சொல்ல வேண்டும். பெரிய கட்டிடமாகவே கட்டிவிடலாம் என்று சொல்கிறார்.

நீ கிழவனுடன் (ஈஸ்வரபட்டருடன்) சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும் என்று சொல்கிறார் அந்த ஆசாரி. இன்னும் கொஞ்சம் செம்பை அதிலே சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதை விற்று வந்துவிட்டேன்.

ஏனென்றால் குருநாதர் தங்கம் செய்ய என்னென்ன வேலை செய்தார்…? என்று
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லி
2.அந்த உணர்வுக்குண்டான கலவைகள் என்னென்ன…?
3.அதைச் சொல்லும் பொழுது என்னென்ன உமிழ்நீர்கள் சுரக்கிறது…? எனக்கு அந்த உணர்வை ஊட்டுகிறார்.

ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களையும் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக வந்து இருக்கிறோம். அதில் எதை எதைக் கலக்க வேண்டும்…? என்று உணர்த்தி அந்த உமிழ்நீரை அதில் துப்பும்படிச் சொல்லி அதில் பட்டவுடனே எப்படித் திரவகத்தை ஊற்றியதும் நிறங்கள் மாறுமோ அது மாதிரி அங்கே உயர்ந்த தஙகமாகிறது.

இப்படி அனுபவபூர்வமாகச் செய்து காட்டினார் குருநாதர்.

(ஆனால் மற்றவர்கள் தங்கம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பாதரசத்தையும் பச்சிலைகளையும் உருட்டிப் பிரட்டி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். கடைசியில தங்கத்தையும் கலக்கின்றார்கள். எல்லாம் முடிந்ததும் பார்த்தால் போட்ட தங்கம் மட்டும் இருக்கிறது மற்ற எல்லாம் கரைந்து போய்விடுகிறது. தங்கம் செய்வதைக் கொஞ்சம் காட்டிக் கொடுங்கள். உங்களுக்குக் கோவிலையே கட்டிவிடலாம் என்று எமக்குப் (ஞானகுரு) பின்னாடி சுற்றியவர்கள் ஏராளம் பேர்)

அப்புறம் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதே போல் நானும் முயற்சி செய்தேன். அவர் எங்கெங்கே போய் குப்பை செத்தை எல்லாம் அள்ளச் சொன்னாரோ மறுபடியும் நான் அதை எடுத்தேன்.
1.எல்லாம் செய்து அவர் சொன்ன மாதிரி அந்த உணர்வு கொண்டு தூ……! என்று துப்பினேன்.
2.இரண்டாவது தரம் தங்கமாகிப் போனது…!

நகைக் கடைக்குக் கொண்டு போனவுடனே அந்தக் கட்டியைப் பார்த்தவுடனே துள்ளுகிறார்கள். அடடா…! தினம் இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தால் போதும்…! என்கிறார்கள்.

அப்புறம் என்னை விரட்டி விரட்டிப் பிடித்தார் குருநாதர்.
1.அவன் ஆசையை ஊட்டி விட்டு உனக்கு யோசனை சொல்கிறான்.
2.”நீ உன் மனதை தங்கமாக்க வேண்டும்…!” என்று நான் சொன்னால்
3.நீ இதைப் போய்த் தங்கமாக்குகிறாயே…!
4.அவன் ஆசையை ஊட்ட நீ தங்கத்தைச் செய்ய எங்கேடா போகிறாய்…?
5.உன்னுடைய ஒவ்வொரு உணர்வும் அது மங்காத நிலைகளுக்கு
6.அந்தத் தங்கம் போல் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்யச் சொன்னேன்..! என்று தெளிவாக்கினார் குருநாதர்.

சாதாரணமாக நான் கற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றிலேயும் அடி வாங்கித் தான் கற்று வந்தேன். சொல்வது அர்த்தம் ஆனதா…?

முதலில் தங்கத்தை விற்றதற்கு ஒன்றரை ரூபாய் கொடுத்தார். இரண்டாவது கொடுக்கும் போது… சுத்தமாகவே நீ பொய் பேசினாய்… ஏமாற்றினாய் அதனால் உனக்குக் காசில்லை… போ…! என்று விற்ற காசு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு விட்டார்.

அது மட்டுமல்ல. அடி வேறு கொடுத்தார்.
1.நீ திருடன்டா…! என்கிறார்.
2.தங்கம் செய்துவிட்டு ஏமாற்றித் தப்பி ஓடலாம் என்று பார்க்கிறயா…?
3.நீ உன் மனதைத் தங்கமாக்குடா… போடா…….!

Leave a Reply