ஒரு தொண்ணூறு வயதுக் கிழவி உடலுக்குள் புகுந்த ஆன்மாவின் வீரியச் செயல்கள் – நடந்த நிகழ்ச்சி

sudalai madan

ஒரு தொண்ணூறு வயதுக் கிழவி உடலுக்குள் புகுந்த ஆன்மாவின் வீரியச் செயல்கள் – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் நான் சித்தான (ஞானகுரு) புதிதில் ஒரு அம்மாவை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த அம்மாவிற்குத் தொண்ணூறு வயது இருக்கும்.

எனக்கு வரும் இம்சைகளைத் தாங்க முடியவில்லை ஐயா…! என்று தன்னுடைய குறையைச் சொல்கின்றது. சொன்ன உடனே உஹ்ஹூ.. ஹ்ஹூ…! என்று அது ஆட ஆரம்பித்து விட்டது.

கூடக் கூப்பிட்டு வந்தவர்கள் என்ன செய்து விட்டார்கள்…? எல்லாம் அரண்டு ஓடுகிறார்கள். என்னடா…! இந்த மாதிரி இப்படி ஆடுகிறது என்று…!

பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அந்தக் கல்லை அப்படியே தூக்குகிறது. அப்படியே தூக்கிப் போட்டு விடுவேன்…! என்று ஆட்டம் ஆடுகிறது.

இந்த மாதிரி எல்லாம் ஏதாவது சேஷ்டை செய்து விடும் என்று தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுது அந்த அம்மா கண்களைப் பார்த்தோம் என்றால் தொண்ணூறு வயதுக் கிழவி என்று சொல்ல முடியாது. அவ்வளவு கொடூரமாக இருக்கிறது.

அப்பொழுது குருநாதர் இது எப்படி…? என்று அங்கே எனக்குக் காண்பிக்கிறார். எனக்குச் சாப்பாடு கொடு… சாப்பாடு கொடு…! என்று சப்தம் போடுகிறது.

மாடசாமி… அந்த சாமி… இந்த சாமி… என்று சில கோயில்களில் “மண்ணில் சுட்ட குதிரைகளைச் செய்து வைத்திருப்பார்கள்….!” அந்த ஓடு (மண்னால் செய்த ஓடு) தான் இதற்குச் சாப்பாடு.

அந்த அம்மாவிற்குப் பல்லே இல்லை. எனக்கு அதைக் கொடுடா…! என்று கேட்கிறது. ஏற்கனவே ஒரு கூடையில் அதைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கொண்டு வந்து போட்டவுடனே நறு…மொறு…! நறு…மொறு…! என்று அப்படியே எடுத்துச் சாப்பிடுகிறது.

சாப்பிட்டு முடித்தவுடனே அப்பா… கொஞ்சம் தண்ணீர் கொடுடா சாமி…! என்கிறது. தண்ணீரைக் குடித்தவுடனே அந்த ஆவி ஒடுங்கிவிட்டது. அந்த அம்மா தன் கதையைச் சொல்கிறது.

இப்படித் தான் சாமி…! என்னுடைய நாற்பது வயதிலிருந்து இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது. என்னை வாழவே விடவில்லை. என் புருஷன் இரத்தத்தைக் குடித்துக் கொன்று விட்டது, வெளியில் தெரியவில்லை. நான் இந்த மாதிரி இதில் சிக்கிக் கொண்டிருக்கின்றேன். என்னைக் காப்பாற்றுங்கள் சாமி…! என்று கேட்கிறது.

அந்த அம்மாவுக்குத் தொண்ணூறு வயது. கொடூரமான உணர்வுகள் கொண்டு காட்சி கொடுப்பதும் தன்னை அறியாமல் இயக்கக் கூடியதும் பல்லே இல்லாமல் அந்த ஓடுகளைத் தின்பதுவும் ஆக இருக்கிறது.
1.அந்த உரலை அப்படியே தூக்குகிறது என்றால்
2.அதற்கு எவ்வளவு வீரியம் இருக்கும்…! என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓடுகளைத் தின்ற பிற்பாடு ஆடுகள் பல வெட்ட வேண்டுமாம். என்னமோ… இங்கு ஆடு இல்லாமல் போய்விட்டது. ஒன்றும் வெட்டச் சொல்லவில்லை….!

ரோட்டில் ஏதாவது போனது என்றால் அதைக் கொல்லும். பல்லைக் கொண்டு கடிக்கும். யாராலேயும் பிடித்து நிறுத்த முடியாது. ஒன்றும் சிக்கவில்லை என்றால் நம்மையே பிடித்துக் கடித்துவிடும்… இரத்தத்தையே உறிஞ்சிவிடும் என்று சொல்லித்தான் நாங்கள் ஓடிப் போய்விட்டோம் என்று கூட வந்தவர்கள் சொன்னார்கள்.

அப்புறம் அந்த அம்மாவிற்குச் சில விபரங்களைச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உன் உயிரை எண்ணு…!
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணு…
3.என் உடலில் இருக்கும் இந்த ஆன்மா “பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்…! என்று சொல்லிக் கொண்டே இரு…!” என்றேன்.
4.அப்புறம் ஆசிர்வாதம் கொடுத்து நீ இந்த மாதிரிச் செய்து கொண்டே வா அம்மா என்று சொன்னேன்.

அதற்கப்புறம் நான் குருநாதர் சொன்ன வழியில் உலக அனுபவம் பெறுவதற்காக வெளியிலே போய்விட்டேன். மீண்டும் திரும்ப வந்த பின் அந்த அமமாவைப் பற்றி விசாரித்தேன்.

நீங்கள் சொல்லிவிட்டுப் போன பிறகு அந்த அம்மாவிடம் ஆட்டம் வரவில்லை. அது பாட்டுக்கு “ஈஸ்வரா… ஈஸ்வரா…! என்று சொல்லிக் கொண்டே கடைசியில் தன் உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்று சொன்னார்கள். இது நடந்த நிகழ்ச்சி.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருப்பணச்சாமிக்கு ஆடு கோழி பலி கொடுக்கிறார்கள் என்ற நிலையில் அந்த உணர்வை எடுத்து வளர்த்துக் கொள்கிறார்கள். அத்தகைய உணர்வு கொண்டவர்கள் உடலை விட்டுப் போன பின் இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் அருளாடத் தொடங்கும்.
1.ஆடு கொண்டடா…! என்று கேட்கும்.
2.கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தையே நாசம் செய்து விடுவேன்டா…! என்று சொல்லும்.
3.இந்த மனித உடலில் ஏற்பட்டது தான் இந்தத் தெய்வங்களாக வருவது.
4.அதில் எவ்வளவு கொடூரப் பற்களைக் காண்பித்து இருக்கிறார்களோ அதே மாதிரிக் கண்களில் வரும்.

சில இடங்களில் ராட்சஷ பொம்மைகளைப் போட்டுக் காட்டுகிறார்கள். அதன் வழி வணங்கி அவர்கள் இறந்து விட்டார் என்றால் அதே உணர்வு இந்த அலைகளாக வந்து பாயும்.

இவர்கள் இறந்த பிற்பாடு இவர்கள் உடலில் சேர்த்த அலைகள் தான் பரவுகின்றது. அதை இன்னொருவன் நுகர்ந்தவுடனே குவித்து அந்த ரூபத்தை அங்கே காட்டும்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் விளைய வைத்த உணர்வின் அணுக்கள் தான்….
1.பேயைப் பார்க்கிறதும்
2.முருகனைப் பார்க்கிறதும்
3.காளியைப் பார்க்கிறதும்
4.மாடனைப் பார்க்கிறதும்.. இப்படி எல்லாமே…!

இதுகளெல்லாம் அன்றைய அரசர்கள் மற்ற உயிர்களைப் பலியிடப்பட்டு காவல் தெய்வமாக வைத்தனர். இது போன்ற நிலைகள் நம் நாட்டில் மட்டும் என்று இல்லை. உலகம் முழுவதும் இதைப் போன்ற காவல் தெய்வங்களை வைத்து இருப்பார்கள்.

கிறிஸ்தவர்களை எடுத்துக் கொண்டால் நாட்டை ஆட்சி புரிவதற்காகவும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் வேண்டி பிறந்த கன்றுகளை பலி கொடுப்பார்கள்.
இதே போன்ற நிலைகள் முஸ்லீம் நிலைகளிலும் உண்டு. ஏனென்றால் இவை எல்லாம் அந்த யூத வம்சத்திலிருந்து பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது தான்.

அதர்வண வேதம் என்ற நிலையில் ஒன்றை அழித்து ஒன்றின் நிலைகள் வந்தது தான் எல்லாமே. மனிதன் திரிபு செய்து வேதங்களை மந்திர ஒலிகளாக மாற்றப்பட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமாக வந்தது. இது மனித உடலுக்குள் எடுத்து சில வேலைகளைச் செய்யும் .

1.நம் நாட்டில் தோன்றிய பெரும் பகுதி ஞானிகள் அனைவருமே
2.விண்ணுலக ஆற்றலை வைத்து அகஸ்தியன் வழியிலே விண் சென்றவர்கள்.
3.இருந்தாலும் காலத்தால் அந்த நிலைகள் மறைந்தது.

அந்த மறைந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக அந்த மெய் ஞானத்தின் உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே வருகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

Leave a Reply