இருளை ஒளியாக மாற்றும் “அகஸ்தியனின் ஆற்றல்…!” – மெய் ஞானப் பாடம்

Sage Agatheeswaran

இருளை ஒளியாக மாற்றும் “அகஸ்தியனின் ஆற்றல்…!” – மெய் ஞானப் பாடம்

 

இருளை போக்கிப் பொருளை காணும் சக்தி பெற வேண்டும். இருள் என்பது எது…? ஒளியான உணர்வுகள் எது…? இருளை நீக்கிய ஒளியான மெய் ஞானி யார்…?

இப்போது நல்ல மனிதர்களாக இருக்கின்றோம். ஒரு விஷம் தீண்டி விட்டது என்றால் நமக்கு நினைவு இருக்கிறதோ…? இல்லை. ஒருவர் வேதனையால் அவஸ்தைப்படுகின்றார். அவருடைய உணர்வுகளை நுகர்ந்தவுடனே நம்மிடம் இருள் சூழ்ந்து விடுகிறது. இதைப் போக்குவதற்கு வழி…?

தொழில் செய்து கொண்டிருக்கின்றோம். கடன் வாங்கியவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
1.நாளைக்குக் கொடுக்க வேண்டுமே… கொடுக்க முடியவில்லை என்றால் என்ன சொல்வது…?
2.நாம் வேறு பதில் சொன்னால் திட்டுவானே…! என்று வேதனைப்படுவோம்.
3.அந்த விஷம் நம்மை அடைத்து விடுகிறது. எது…?
4.அப்பொழுது இருள் சூழ்ந்து விடுகிறது.
5.சிந்தித்துச் செயல்படும் சக்தி இல்லை. இதை நீக்குவதற்கு வழி…?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வை எடுத்து வாழ்க்கையில் வரும் இருளை மாய்க்க வேண்டும். இல்லை என்றால் அது வளர்ச்சி அடைந்தது என்றால் நம்மை மீண்டும் இருளுக்குக் கொண்டு சென்று விடும்.

ஏனென்றால் இருளில் இருந்து வந்தது தான் ஒளி…!

ஆதியிலே இந்தப் பேரண்டமே இருண்ட குகை போன்று இருந்தது. எங்கேயுமே இருண்ட நிலை தான். ஒளியைக் காண முடியாது. \

ஒளி இல்லாத இடத்தில் அகண்ட நிலையாக இருந்தாலும் அதற்குள் சிறிது வெப்பம் உண்டாகிறது. அந்த வெப்பத்தினால் வரும் சில நிலைகள் ஆவியாக மாறுகிறது. அப்பொழுது அந்த ஆவியின் தன்மை அடர்த்தி ஆகிறது.

அடர்த்தி நாளாக நாளாக அது விஷத் தன்மை அடைகிறது. விஷத் தன்மை அடைந்த பின் அதற்குப் பின்னாடி வரக்கூடிய விஷமற்ற நிலைகள் உருவாகும் போது அதை இது தாக்குகிறது.

தாக்கும் போது மீண்டும் வெப்பமாகின்றது. ஏனென்றால்
1.வெப்பத்தின் தன்மை உருவாக்கப்படும் போது இந்த விஷத்தின் தன்மையே வலிமையாகின்றது.
2.அது வலிமையான பின் தாக்குகின்றது. தாக்கிய பின் என்ன செய்கிறது…?
3.இது உடனே அணுக்களாக மாறுகிறது.
4.நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் சக்தி வருகிறது.
5.அப்பொழுது தான் ஆதிபராசக்தி… ஆதிலெட்சுமி… ஆதிசக்தி…! இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்த்து உலக இயக்கத்தின் ஆரம்ப நிலையே வருகிறது.
6.ஆக விஷத்தால் இயக்கப்பட்டது தான் எல்லாமே…!

அதாவது கோள்களாகி… கோள்கள் நட்சத்திரமாகி… நடத்திரம் அது சூரியன் ஆகப்போகும் போது அந்தத் தொடர்ச்சியின் தன்மையில் நட்சத்திரங்கள் எல்லாம் விஷத்திற்குள் அடக்கம்.

விஷத்தின் தன்மை தான் கதிர் இயக்கம். கதிர் இயக்க தன்மை வரப்போகும் போது தான் அண்டத்தின் நிலைகளை இது அடக்குகின்றது.

நட்சத்திரங்கள் தன்னுடைய கதிரியக்கச் சக்திகளை வைத்து அகண்ட அண்டத்திலிருந்து வருவதை அடக்கித் தன்னுடைய பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது. அது மிகவும் எடைகூடியது.

அந்த உணர்வின் தன்மை துகள்களாகத் தூசியாகப் போகும் போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த அமிலத்தின் தன்மை குறைகிறது. அந்த அமிலத்தின் தன்மை குறையப்படும் போது பாதரசமாக மாறுகிறது. அப்பொழுது அது குளிர்ச்சியின் தன்மை அடையும்.

பாதரசத்தின் தன்மைகளை எடுத்து வீசி மற்றதுடன் மோதப்படும் பொழுது தான் சூரியன் விஷத் தன்மைகளைப் பிரிக்கிறது. விஷத்தைப் பிரித்தாலும் அது பிரிந்து நகர்ந்து ஓடப்படும் போது சூரியனின் காந்தப் புலனறிவுகள் அந்த விஷத்தையும் கவர்ந்து கொள்கின்றது.

ஆக அந்த ஈர்க்கும் சக்தி என்ற நிலையில் மூன்று நிலை கொண்டு இந்த உலகம் உருவாகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…! (வெப்பம் காந்தம் விஷம்)

ஏனென்றால் முதலில் விஷத்தால் தான் நெருப்பானது. நெருப்பைக் கண்ட பின் என்ன செய்கிறது…? இது விலகிச் செல்கின்றது.
1.இந்த உண்மையைத் தெரிந்து கொண்டவர்கள் மகரிஷிகள்.
2.அந்த மூலத்தைத் தெரியாதபடி விண் செல்ல முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த முழு உண்மைகளை உணர்த்தியபின் தான்
1.அதனுடைய சாரங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) தெரிந்து கொள்ள முடிந்தது.
2.அதை எனக்குள் விளைய வைக்க முடிந்தது.
3.அந்த ஆற்றல்களை உங்களுக்கும் இப்பொழுது கொடுக்க முடிகிறது.
4.சும்மா இதை நோட்டுப் புஸ்தகத்தில் எழுதிக் கொடுத்துப் படிக்கின்ற மாதிரி போக முடியாது.

மேரு மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற்கடலிலே கடைந்தார் நாராயணன் என்று சொல்வார்கள். ஆனால் இது என்ன…? என்று தெரியாது.

வியாசகர் அன்று சொன்ன உணர்வை உருவமாக்கிக் காட்டும் போது மேரு போல மலையை வைத்து நீ அர்ச்சனை செய்தால் உனக்கு சக்தி நிறையக் கூடும் என்று அடுக்கடுக்காகச் செய்து வைத்திருப்பார்கள்.

பல எண்ணிலடங்காத அணுக்களின் தன்மையால் அடுக்கடுக்காகத் தான் நம் பூமி உருவானது. ஆனால் அந்த விஷத்தின் தன்மை தாக்குதலால் தான் பூமியே சுழற்சி ஆகின்றது.

பாற்கடல் என்றால் பிற மண்டலத்திலிருந்து வருவதை இது இழுத்து அதைத் தனக்குள் தாவர இனங்களாக மாற்றுகின்றது.
1.அந்தத் தாவர இனங்களை எந்த எந்த அணுக்கள் எடுத்து விழுங்குகிறதோ
2.அந்தந்த உணர்விற்குத் தக்க பல விதமான ரூபங்களாக
3.உயிரினங்களின் உடல் உருவானது என்று வியாசகர் தெளிவாகக் காட்டுகிறார்.

இந்த விபரங்கள் எதுவும் சொல்லாதபடி இந்தத் தத்துவத்தைக் கேட்டால் விளக்கம் தெரியாது, வேதங்கள் படித்தவர்களிடமே நீங்கள் கேட்டாலும் தெரியாது. யானையைப் போல மாட்டைப் போல ஏனைய மிருகங்களைப் போல போட்டு வைத்திருப்பார்கள். ஆனல் ஏன் என்று தெரியாது.

சிவன் ஏனோ ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி கொண்டான் என்பார்கள். அதனின் விளக்கம் என்ன..? நம் பூமியே சிவமாகின்றது. (சிவம் என்றால் திடப் பொருள்). இவனுக்குள் உருவானது தான் இவை அனைத்தும்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. நம் பூமி துருவத்தின் வழியாகத்தான் விண்ணிலிருந்து (பாற்கடல்) எல்லா சக்திகளையும் நுகர்கின்றது. விஷத்தின் தன்மைகளை எல்லாம் அடக்கி வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகிறது.

அந்த உணர்வின் தன்மை மற்றொன்றோடு சேர்த்து அது திரளுகிறது. வெண்ணெய் ஆகிறது. இப்படி விளைந்தது தான் “பூமிக்குள் எல்லாமே…!” என்று இவ்வளவு தெளிவாக வியாசகர் கொடுத்திருக்கின்றார்.

1.மேரு என்ற மலை மத்து – அதாவது பூமி சுற்றுகிறது
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து – அதாவது விஷத்தின் தாக்குதல் தொடர்ந்து வரப்படும் பொழுது தான் பூமியே சுழல்கின்றது.

அப்படி அந்தத் துருவப் பகுதியில் நுகரப்படும் போது அது சிவம்… பார்வதி…! தன்னுடைய பார்வையில் பட்ட உணர்வுகள் பூமிக்குள் வந்து சேரும் பொழுது பார்வதிக்கும் சிவனுக்கும் கல்யாணம்.

துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்திகள் உறைந்து அது நீளமாக வளரும். அப்படி வளர்ச்சி ஆனால் தலைகுப்புற. கவிழ்ந்து விடும். அப்படி ஆகும் நிலையைத் தடுத்தவன் அகஸ்தியன். அகஸ்தியனால் ஒரு தடவை மாற்றப்பட்டது.

அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தியதனால் தான் அவனுக்குப் பின் வந்த ஞானியர்கள் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவனைப் பாடினார்கள்.

அந்த அகஸ்தியரைப் போன்ற பலர் தோன்றினால் தான் இன்றிருக்கும் பூமியின் விஷத் தன்மையைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஏனென்றால் பல விதமான விஷ குண்டுகளையும் அணுக் கதிரியக்கங்களையும் ஒவ்வொரு நாட்டிலும் பூமிக்குள் பதுக்கி வைத்திருக்கின்றார்கள்.

அது எல்லாம் வெளிப்படும் பொழுது அதனால் வெளிப்படும் புகை மண்டலங்கள் மேகக் கூட்டங்களாகி சூரியனின் ஒளிக் கதிர்களைத் தடுக்கும் பொழுது பூமி உறை பனியாகி தலை குப்புறக் கவிழ்ந்து விடும். அதற்குப் பின் இங்கே உயிரினங்கள் வாழும் தகுதி இழக்கப்படுகின்றது.

ஆனால் அன்று துருவத்தின் எடை கூடிய இதே பூமியின் திசையைச் சூரியனுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய எண்ணத்தால் குறுக்காட்டி அதைத் திசை திருப்பினான் அகஸ்தியன்.

சூரியன் பாகம் திருப்பப்படும் பொழுது அந்தப் பனிகள் கரைந்து இந்தப் பூமி சமமானது. அவன் சமப்படுத்திய நிலைகள் கொண்டு தான் இந்தப் பூமி இன்று வரை ஒரு சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தால் கடும் விஷத் தன்மைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதிலிருந்து நாம் தப்பித்தோம் என்றால் நல்லது. அத்தகைய நிலைக்காகத் தான் மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றோம்.

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி கருவில் வளரும் சிசுவிடத்தில் விளைய வேண்டும். அந்த அகஸ்திய மாமகரிஷி அருள் சக்தி பெற வேண்டும். சப்தரிஷிகளின் அருள் சக்தி விளைய வேண்டும்.

என் குழந்தை அகஸ்தியனைப் போன்ற உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவில் உள்ள குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டினால் குழந்தை வெளி வந்த பிற்பாடு அந்த அகஸ்தியனின் சக்தியை பெறக்கூடிய தகுதி இருக்கிறது. ஆகவே
1.இப்படிக் குறைந்த பட்சம் அந்த அகஸ்தியனின் உணர்வுகளை
2.கருவில் விளையும் குழந்தைகளுக்குப் பெறச் செய்தால்
3.அந்த குழந்தைகள் மூலமாக அந்த உணர்வுகள் படரப்பட்டு
4.இங்கே சிறிதேனும் மக்களைக் காக்க முடியும்.

Leave a Reply