தியானிக்க வேண்டிய முறை – Meditating Method

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

2.“முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்து, பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால், திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.
ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).
இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.
ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர்” என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.
இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.
அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.
திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.
கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்

தியானம் செய்யவேண்டிய முறை:-

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது, துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.
இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.
நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.
இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. அந்த உருவான அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.
ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.
இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.
உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.
எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ, அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி, அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.
அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.
இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும்.
எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

 

Leave a Reply