அகஸ்தியனுடன் ஐக்கியமாவது தான் நம் வேலையே…!

cosmos-galaxy

அகஸ்தியனுடன் ஐக்கியமாவது தான் நம் வேலையே…! 

 

நமது குருநாதர் சாதாரணமாக… “ஒரு பைத்தியக்காரர்…!” போலத்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொடுப்பார்.
1.நம்மையும் ஒரு பைத்தியக்காரனாக ஆக்கிவிடுவார்.
2.கடைசியில் அதைத் தெளிய வைப்பார்.

ஆரம்பத்தில் என்னை (ஞானகுரு) வீட்டுப் பக்கம் உள்ள சாக்கடை அருகில் அமரச் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து கொண்டு காப்பி வாங்கிட்டு வரச் சொல்லி அந்தக் காப்பியில் சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்டார். “இதைக் குடிடா…! என்கிறார்.

அன்றைய காலத்தில் கழிவு அறை கிடையாது. எல்லாம் சாக்கடைக்குள் தான் வரும் .அதை எடுத்துப் போட்டுச் சாப்பிடுடா…! என்கிறார். நான் எப்படிச் சாப்பிடுவது…?

தெருவில் நடந்து போகும் தெரிந்தவர்கள் அனைவரும் நல்லய்ய நாயக்கர் மருமகனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது நல்லய்ய நாயக்கர் ஒரு பிள்ளையை வைத்து இருந்தார். அதைக் கட்டிக் கொடுத்தார். அது பைத்தியத்துடன் சேர்ந்து “பைத்தியமாக இருக்கிறது…!” என்று என் காதில கேட்கிற மாதிரி பேசிக் கொண்டு போகிறார்கள்.

என் மனைவியின் அம்மாவோ எம்மைக் கண்டபடி பேசுவார்கள் காதில் கேட்கும்படியாகப் பயங்கரமாக பேசுவார். இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டும். அத்தனை தாக்குதலுக்கு எல்லாரையும் பேச வைத்து அதில் என் மனம் நொறுங்காதபடி இத்தனை வேலைகளையும் செய்கிறார் குருநாதர்.

குருநாதர் திடீரென்று என்ன செய்வார்…? அப்பொழுது ஊருக்குள் டவுன் பஸ் போகும்.
1.நடு ரோட்டில் உட்கார்ந்து கொண்டு “கோடு போடுடா…!” என்பார்.
2.இந்தப் பக்கம் பஸ் போகக்கூடாது என்று எழுது… என்பார். “எழுதுடா…!” என்பார்.

அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அட என்னய்யா…? இது மாதிரிச் செய்கிறாய்… நல்லைய்ய நாயக்கர் மருமகன் இப்படியா..? கடை வீதியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும்.

குருநாதரைப் பார்த்து “சாமி……!” என்றேன் நான்,

நான் சொன்னதைச் செய்டா… நான் சொல்வதை எல்லாம் சரி செய்கிறேன் என்று சொன்னாய்….! அல்லவா. அதன்படிச் செய்… என்கிறார்.

ஏனென்றால் ஆரம்பத்தில் என் மனைவி இறக்கும் தருவாயிலிருந்து காத்து அந்த அம்மாவை எழுப்பிய பின் “சொன்னதைச் செய்கிறாய் அல்லவா…” என்று வாக்கை வாங்கிய பின்னாடி இத்தனை பழி வாங்குகிறார் குருநாதர்.

அப்புறம் என்ன செய்கிறார்…? மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகள் எல்லாம் சாகக்கூடாது என்று டாக்டரிடம் போய் நீ இந்த சீட்டைக் கொடுத்து விட்டு வா…! என்றார்.
1.அதாவது நோயாளிகள் யாரும் சாகக்கூடாது.
2.இல்லை என்றால் “சொர்க்கலோகத்திற்கு” அனுப்பி வைத்து விடுவேன் என்று சொல்லுடா…! என்கிறார்.

நான் அங்கே போய் இதைச் சொன்னால் சும்மாவா இருப்பார்கள். அங்கே சீட்டையும் கொடுக்கவில்லை. நான் ஒன்றும் சொல்லவும் இல்லை. ஏனென்றால் குருநாதர் சொன்னபடி எழுதிச் சீட்டைக் கொடுத்தால் “பைத்தியக்காரன்…” என்று என்னைச் சொல்வார்கள்.

குருநாதர் என்னிடம் கேட்கிறார்… நான் சொல்லச் சொன்னதைச் சொன்னாயா…? திருடன்டா நீ…! சொல்லவே இல்லை. என்னையே நீ ஏமாற்றுகிறாய்…! அப்படி என்றால் எத்தனை பேரை நீ ஏமாற்றுவாய்…? என்று இப்படிக் கேட்கிறார். இந்த மாதிரிப் பல வேலைகளைச் செய்தார்.

அதே மாதிரித்தான் சாக்கடைக்குள் இருக்கக்கூடியதை எடுத்துப் போட்டுக் காபியைக் குடி என்று சொல்கிறார். எனக்குப் பார்த்ததுமே வாந்தி வருகிறது. (அவர் போடுவதைப் பார்த்தாலே)

ஆனால் அவர் ஜம்,.. என்று குடிக்கிறார். பாருடா…! எப்படி அற்புதமாக இருக்கிறது…! தேவாமிர்தமாக இருக்கிறது…….! என்கிறார்.

எப்படியோ நம்மைக் குடிக்க வைத்துவிடுவாரோ…! என்ற எண்ணத்தில் எனக்கு அப்படியே உமட்டலாகிறது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய நண்பர்கள் வருகிறார்கள். அதிலே ஒருவன் நான் மேஸ்திரியாக வேலை பார்க்கும் பொழுது என்னிடம் வேலை செய்தவன்.

மேஸ்திரிக்கு இப்படி ஒரு புத்தி வந்து விட்டது பார்…! என்று சொல்லிக் கொண்டு வருகிறான். என்னா… மேஸ்திரி…! கொஞ்சம் இங்கே ஒரு ஜோலி இருக்கிறது. இங்கே வாருங்கள்…! என்று அவன் என்னைக் கூப்பிடுகிறான்.

அவன் கூப்பிட்டால் நீ ஏன்டா போகிறாய்…? உட்காருடா என்கிறார். அவனைப் போகச் சொல்கிறார் குருநாதர். நான் காபியைக் குடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

காபி டம்ளரைக் கொடுத்தால் அந்த டீக்கடைக்காரன்.. ஐயா இந்த டம்ளரை உன் வீட்டுக்கே எடுத்துக் கொண்டு போ. காசைக் கொடுத்துவிடு. சாக்கடையை அள்ளிப் போட்டது என்று தெரிந்தால் யாரும் காபி குடிக்க வர மாட்டார்கள்…! என்று சொல்லிவிட்டார்.

முறுக்கு கடலைப் பருப்பு பொட்டுக் கடலை மூன்றையும் வாங்கி வரச் சொன்னார் குருநாதர். வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடைக்குள் “கொடு போடு..!” என்று சொன்னார்.

போட்ட பின்னாடி முருக்கு கடலை பொட்டுக் கடலை எல்லாவற்றையும் பொட்டலமாகக் கட்டி வாசனை வருகிற மாதிரி தனித் தனியாகச் சாக்கடைக்குள் அமுக்கி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து ஒரு பன்றி நுகர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறது. முதலில் பொட்டுக் கடலையை ஒன்றும் தொடவில்லை. நிலக்கடலைப் பருப்பைப் போய் எடுக்கிறது. இரண்டாவது முறுக்கைப் போய் எடுத்து வருகிறது. மூன்றாவது பொட்டுக்கடலையை எடுக்கின்றது.

பார்த்தாயாடா… அதற்குப் புத்தி எப்படி இருக்கிறது என்று…?

சாக்கடைக்குள் இருக்கும் நல்லதைத் தான் அந்தப் பன்றி எடுக்கிறது. நீயும் நல்லதை எடு. நல்லதை நீ ஏன் எடுக்கக் கூடாது…?
1.நான் நல்லதை எடுத்தேன்… எனக்கு ருசியாக இருக்கிறது.
2.கெட்டதெல்லாம் போய்விட்டதடா…! என்கிறார்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தை அப்படியே காட்டுகின்றார். உன் உயிர் கடவுள். பன்றியாக இருந்து தீமையை நீக்கித்தான் நீ மனிதனாக வந்திருக்கின்றாய்.

இப்பொழுது நீ தீமையை நீக்கவில்லை என்றால் மறுபடியும் அங்கே தான் போவாய். ஆகவே தீமையை நீக்குவதற்கு வழி என்ன…? அந்த இடத்தில் அமரச் செய்து கேள்வியைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கேட்டு பதில் சொல்கிறார் குருநாதர்.

அவர் பேசுவதைக் காதிலேயே கேட்க முடியாது. அந்த அளவுக்கு அசிங்கமாகத் திட்டுவார். மேற் கொண்டு அடிப்பார். டொம்.. டொம்.. என்று அடி விழுகும்.
1.சகித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
2.விரட்டுவதற்கு என்ன வேலையோ… அதைத் தான் பார்ப்பார்

உன் மனைவியைக் காப்பாற்றினேன். நான் சொல்வதைச் செய்கிறேன் என்று நீ சொன்னாய். அதனால் நீ என்னிடமிருந்து தப்ப முடியாது…! என்று சொல்கிறார்,

இப்படித்தான் என்னைக் கொக்கி போட்டு மாட்டிப் பல வகைகளிலும் இம்சை செய்தார். எங்கேயும் போக முடியவில்லை… வர முடியவில்லை…!

இது எதற்கு நமக்கு இந்தச் சிரமம்…? என்று விலக முடியுமா என்றால் முடியாது. குரு அருளினுடைய உணர்வுகள் எங்கயுமே தப்ப முடியாது.
1.தப்பு செய்யவும் முடியாது.
2.தப்பு செய்தால் நிச்சயம் அப்பொழுதே தண்டனை கிடைக்கும்.

ஏனென்றால் அந்த அளவுக்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் கொண்டு வந்திருக்கின்றார்.
1.நீ தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பம் எப்படித் தவறு செய்யச் செய்கிறது என்று
3.இயற்கையின் உண்மைகளை அறியும்படிச் செய்தார்.

கடவுளின் அவதாரம் என்ற நிலையில் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றிய பின் பல கோடி உடல்கள் பெறுவதற்குண்டான காரணங்களையும் பன்றியாக ஆன பிற்பாடு மனிதனாகி மனிதனான பின் ஆசையின் உணர்வுகள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்று சாக்கடையில் உட்கார வைத்து இந்த உபதேசம் கொடுக்கிறார்.

1.அப்படியே அகண்ட அண்டத்தையும் காட்டுகின்றார்.
2.இந்த பிரபஞ்சத்தையும் காட்டுகிறார்.
3.இந்தப் பூமியையும் காட்டுகிறார்.
4.ந்த பூமிக்குள் எத்தனையோ வினைகள் இருககிறது
5.அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு தீமைகளை நீக்கி விண்ணுலகம் சென்றவன் அகஸ்தியன்.
6.”அவனுடன் ஐக்கியமாவது தான் உனக்கு வேலையே…!” என்று சொல்லி இத்தனையும் காட்டுகிறார்.

ஏனென்றால் குருநாதரிடம் பழகியவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்…? அவர் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தார் என்றால் கோயிலைக் கட்டுவேன். அதைக் கட்டுவேன். இதைக் கட்டுவேன்…! என்று நிறையப் பேர் வந்தார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் கட்டியதிலும் எத்தனையோ அதிசயங்கள் தான் நடந்தது. யாரிடமும் பணம் கேட்டு வாங்கிக் கட்டவில்லை. குருநாதர் தான் கட்டுகிறார்.
1.நான் கட்டியதாக நினைத்தால் எனக்கு என்ன தெரியும்…?
2.நான் இதைச் செய்வேன்.. அதைச் செய்வேன்… என்று என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.
3.அவருடைய உணர்வுகள் தான் அங்கே இயக்கிக் கொண்டு வருகிறதே தவிர வேறு எதுவும் இல்லை.
4.அவர் செயல் தான்…! அதனால் தான் குருநாதர் பெயரை வைத்து விட்டேன்.

நீங்கள் தபோவனத்தில் உள்ள குரு பீடத்தை எண்ணுங்கள். உங்கள் சக்தி சக்தி எல்லாம் இங்கே இருக்கிறது. அதை எண்ணுங்கள்…! என்னை விட்டு விடுங்கள்,

1.சாமி (ஞானகுரு) சொன்னார்…. அந்த வழியில் நான் பெறுகிறேன்…! என்று அதை எண்ணினால் போதும்.
2.சாமி செய்வார்…! என்ற நிலைக்கு மாறாக
3.சாமி காட்டிய அருள் வழியில் அந்தக் குருபீடத்தின் அருள் ஒளியைப் பெற வேண்டும்.
4.வாழ்க்கையில் வந்த இருளை நீக்க முடியும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

அப்படி வந்துவிட்டீர்கள் என்றால் நாளைக்கு வரக்கூடிய விஷத் தன்மையிலிருந்து நமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் ஈர்ப்பு வட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும். நாம் இரத்தத்தில் இருந்து நம் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் அத்தனை அணுக்களுக்கும் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக ஒவ்வொருவரும் பெருக்கிக் கொள்ள வேண்டும்

இப்படி ஒரு தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.

Leave a Reply