அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

Agastyan kamandalam

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காடுகளிலே அவன் வாழ்ந்து வந்தாலும் அவன் சந்தர்ப்பம் தன் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறும் தகுதி பெற்றான்.

அதன் மூலம் தீமைகளை அகற்றிடும் வல்லமையையும் இருள் சூழும் நஞ்சினை அடக்கி அதை அவனுக்குள் ஒளியின் தன்மையாகவும் பெருக்கிக் கொண்டான்.
1.அது மட்டுமல்ல…!
2.இந்த பூமியின் இயல்பான நிலைகளில் அதை உருவாக்கவும்
3.அதற்குள் மாற்றம் செய்யக்கூடிய வல்லமையும் அவனுக்கே உண்டு.

அதை வைத்துத்தான் இந்தப் பூமியையே அவன் வாழ்ந்த காலத்தில் சமப்படுத்தினான். அது எவ்வாறு என்பதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குக் காவியப் படைப்புகளும் உண்டு.

நம் பூமி சுழலும் போது துருவப் பகுதியின் வழியாக விண்வெளியில் இருக்கும் ஆற்றலைக் கவர்கின்றது. அது தான் பார்வதி…! – தன் பார்வையில் கவரும் சக்திகள். அவ்வாறு பூமி கவரும் அந்தச் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் உறைந்து சிவமாகின்றது.

1.அதாவது பூமி சுழலும் சக்தி பார்வதி
2.அப்படிக் கவர்ந்த சக்திகளின் உறைவிடமாக அங்கே வருகின்றது துருவப் பகுதியில்
3.ஆகவே சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி. அதன் சுழற்சியின் வேக சக்தியால் விண்ணிலிருந்து வரும் சக்திகளைக் கவரப்படும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம். கவர்ந்த உணர்வின் தன்மை சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

ஆனால் பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்

ஏனென்றால் பூமி கவர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் அணுக்களாகப் பெருகி
1.அந்தச் சக்தியின் தன்மை அகண்டு செல்லப்படும் போது
2.ஒரு பக்கம் எடை கூடி பூமி கவிழும் நிலை வரும்.

அதனால் பூமி திசை மாறி எடையற்ற பகுதிகள் மீண்டும் சக்திகளைக் கவர்ந்து அங்கே உறைந்து முதலில் உருவானது மீண்டும் கரைய இது வளரும்.

இப்படி பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் ஆவதிலிருந்து அதை ஆகாதபடி அன்று அகஸ்தியன் இதைக் காத்தான். அதைத்தான் சிவன் “அகஸ்தியா… நீ தெற்கே செல்…!” என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள்.

கல்யாணக் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகமாகிவிட்டால் எல்லாம் அதிர்ந்து விடும். அப்பொழுது பூமியின் நிலை தடுமாறி விடும். ஆகவே நீ தெற்கில் சென்று பூமியினைச் சமப்படுத்து..! என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அந்தக் காவியம் உண்டு.

அகஸ்தியின் தெற்கிலே சென்று சமமான பகுதியில் நின்று சூரியனின் காந்தப்புலனை அவன் எடுத்து இந்த பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
1.வடக்கில் கவரும் சக்திகள் பனியாக உறைந்தாலும்
2.தெற்கிலே நேராகக் கவரப்படும் சூரியனின் ஒளிக்கதிரால் அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து
3.இந்தப் பூமியின் தன்மைகள் சமமாக ஆனது.

இதைத் தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே சென்று இந்த உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நீ பூமியைச் சமப்படுத்து…! என்று சொன்னதன் மூலக் கருத்து. அதனால் தான் அகஸ்தியனின் கையிலே கமண்டலம் கொடுத்திருப்பார்கள். அதற்குள் நீர்…!

ஏனென்றால் பூமியிலிருந்து விண் சென்ற அந்த முதல் மனிதன் அகஸ்தியன் தென் பகுதியிலே வெப்பத் தணல்களை ஈர்க்கும்படியாகப் பூமியைத் திருப்பிப் பனிப்பாறைகளை நீராகக் கரையச் செய்து இந்தப் பூமியைக் காத்தான்…! என்று அவனுக்குப் பின் வந்த ஞானிகள் அதை உணர்த்தினார்கள்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஒவ்வொருவரும் தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் விஞ்ஞானத்தால் விளைந்த நஞ்சுகள் அதிகரித்து இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்துவிடும் நிலையாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

அழிவை மாற்ற வேண்டும் என்றால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுத்துப் பரவச் செய்தால்தான் இந்தப் பூமியின் நிலையை மீண்டும் சமப்படுத்த முடியும்…!

Leave a Reply