அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

asdadik balagarkal

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

 

ஆற்றிலே வெள்ளம் செல்கிறதென்றால் அந்த வெள்ளத்தை நாம் விவசாயம் செய்யும் வயல்களிலே பாய்ச்சினால் என்னவாகும்…? வயல்களிலுள்ள பயிர் பச்சைகளை அழித்துச் சென்று விடும்.

அதைப் போல் தான் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆசைகளை நாம் வெள்ளமாகக் கொண்டு சென்றால் அது என்ன செய்யும்…?

நீரினால் ஏற்படும் வெள்ளம் மற்றதை அடித்துச் செல்வது போல்
1.மற்ற எந்தச் சிந்தனைகளும் சீராக வராதபடி
2.எந்த ஆசையை முன்னாடி வைத்தோமோ அந்த வழிக்கே நம்மை
3.மீண்டும் மீண்டும் அதிலேயே ஒரு நிலைப்படுத்திக் கொண்டு போகும்.
4.மற்ற எதையும் சீராக அறியவிடாது தள்ளிவிடும்.

ஆனால் அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் இச்சைப்பட்டு நமக்குள் பெருக்கிக் கொண்டு வந்தால் நம்மை அறியாது சேர்த்த தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

உதாரணமாக ஓர் வெளிச்சத்தை நாம் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கி மறைந்த பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

அது போல் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைப்போமென்றால் நமக்குள் அது பெருகி நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி விடும். மெய்ப் பொருளைக் காணச் செய்யும்.

ஆகவே
1.மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி
2.நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
3.மெய் உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் பெருக்கிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரின் துணை கொண்டு பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது மனிதனாக உருப்பெற்ற நம்முடைய இந்தத் தருணம்.

அஷ்ட திக்கையும் எட்டிப் பிடித்து… அதை உணரும் தகுதி பெற்றவன் தான் மனிதன்…! அஷ்ட திக்கும் என்றால் எந்தத் திசையிலிருந்து எது வந்தாலும் அது அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவன் ஆறாவது அறிவு பெற்ற இந்த மனிதன்.

எந்தத் திக்கிலிருந்து எது வந்தாலும் அஷ்ட திக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது சப்தரிஷி மண்டலம். தீமைகள் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் அது எல்லாவற்றையும் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகின்றது.

அதே போன்று தான் துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது. இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் வெள்ளமாகப் பெருக்கி
2.அஷ்ட திக்கிலிருந்து வரும் இருள்களை எல்லாம் மாய்த்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக பத்தாவது நிலையை அடைவதே பதினெட்டாம் பெருக்கு,..!

Leave a Reply