நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

Good is blissful

நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் நாம் தவறு செய்யாமலேயே நாம் ரோட்டிலே செல்லப்படும் போது நம்மை அறியாமல் எத்தனையோ நிலைகள் ஏற்படுகின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே மகிழ்ச்சியாக நடந்து செல்கின்றோம். நாம் போவதற்கு முன்னாடி ஒரு சிறு பையன் அவன் வீட்டிற்குத் தேவையான எண்ணெயைப் (கண்ணாடி) பாட்டிலில் வாங்கியவன் அவன் எதிர்பாராது கை நழுவிக் கீழே போட்டு உடைத்து விடுகின்றான்.

அப்பொழுது அவனுடைய எண்ணம் என்ன ஆகின்றது…? இந்த பாட்டில் விழுந்து விட்டதே…! பணம் போய் விட்டது… எண்ணெயும் போய்விட்டது… பாட்டிலும் உடைந்து விட்டது…! என்று அவன் மனம் பதறுகின்றது.

வீட்டிற்குப் போனால் அம்மா என்ன சொல்வார்களோ…? என்ற இந்த அச்சத்தின் நிலைகள் ஓங்கி அதனால் வேதனையான எண்ணங்களைச் சுவாசிக்கும் போது இந்த உடைந்த பாட்டிலை அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றான்.

வீட்டிற்குப் போய் நடந்ததைச் சொன்னதும் அவனுக்கு ஏச்சு… அவனுக்குப் பேச்சு… உதை… அனைத்தும் வருகின்றது. ஆனால் இவனுடைய சந்தர்ப்பம் எதிர்பாராது விழுந்து பாட்டில் உடைந்து விட்டது.

தாய்க்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. சிரமப்பட்டோம்…! ஆனால் இப்படிச் செய்து விட்டானே…! என்று பொருளும் பணமும் போய்விட்டது என்ற வேகத்தின் துடிப்பு வருகின்றது.

இந்த வேகத்தின் துடிப்பு வரும் போது தான் எடுத்துக் கொண்ட காந்தத்தின் புலனின் சக்தி குறைகின்றது.
1.எத்தனையோ கோடி ஆண்டுகள் நாம் ஒவ்வொன்றிலிருந்தும் காத்துக் கொள்வதற்காக
2.நம் உடலின் தன்மை விஷமாக மாற்றி
3.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கச் செய்து மனிதனாக வந்ததுள்ளோம்.
4.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து
5.இந்த உணர்வுடன் கலந்து அந்தக் காந்தப்புலனின் ஆற்றலையும் பெருக்கி வந்த நிலையில்
6.அடுத்தவர்கள் செய்யும் தவறான செயல்களைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரம் அதிகமாகின்றது.
(ஏனென்றால் நம் எண்ணத்தில் கலந்த விஷத்தின் உணர்வு அவ்வாறு துரிதமாக இயக்குகின்றது)

தன் பையன் மேல் ஆத்திரமும் கோபமும் அதிகமானதும் அதைத் தாங்காத நிலை வரும் போது நற்குணங்களைச் சிந்திக்கும் செயல் இழந்து குழந்தை மேல் பாசமாக இருந்தாலும் அது சமயம் இவன் செய்கையைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இயக்கி ஆத்திரத்துடன் அவனைத் தாக்கும் எண்ணங்களே தோன்றுகின்றது.

குழந்தையோ தாயைக் கண்டவுடனே பயத்தாலே தன்னைத் தாக்க வருகின்றது என்று வெறுப்பின் உணர்வுகள் இங்கேயும் தோன்றுகின்றது இங்கேயும் அதை ஜீரணிக்கும் செயல் இழக்கின்றது. தாயின் உடலிலேயும் அதே நிலை ஆகின்றது.

ஆனால் அதே சமயம் முதலில் சொன்ன மாதிரி நான் என்னுடைய தொழிலின் நிமித்தமாக ரோட்டிலே நடந்து செல்கின்றேன். ஆனால் நடுரோட்டிலே இந்த உடைந்த பாட்டில் கூர்மையாகக் கிடைக்கின்றது.

நான் மகிழ்ச்சியோடு போனாலும் வேகமாகக் கால் வைக்கப்படும் போது அதைப் பார்த்து விடுகின்றேன். எதிர்பாராது உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் வருகின்றது.

“அறிவு கெட்டத்தனமாக… இப்படி ரோட்டிலே பாட்டிலைப் போட்டு உடைத்து விட்டுப் போயிருக்கின்றார்கள் பார்…!” என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனால் அந்த எண்ணத்தின் வேகம் வரும் போது நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நல்ல எண்ணத்துடன் தான் சென்றேன். ஆனால்
1.என் காலில் குத்தி இருந்தால் என்ன ஆகும்…? என்ற இந்தப் பயமும் அந்தப் பயத்தின் உணர்வாலே ஆத்திரம் தூண்டும் போது
2.நம்மை அறியாமலே அந்த வேகத்தின் துடிப்பு அதிகமாகி
3.முன் பின் யார் செய்தது என்று நாம் பார்க்கவில்லை என்றாலும்
4.ஆத்திரத்தின் உணர்வின் வேகங்கள் அதிகமாகக் கூடுகின்றது.

இப்படிக் கூடிய இந்த ஆத்திரம் கோபம் வேதனை என்ற உணர்வின் சத்துக்கள் உடலுக்குள் சேர்ந்த பின் அந்த உணர்வின் வேக நிலைகள் எனக்குள் கலக்கின்றது.

ஆனால் நமது கண் “இது கெட்டது…!” என்று தான் காட்டுகின்றது. ஆனால் அதை நீக்குவதற்கு நாம் என்ன செய்கின்றோம்…?

நாம் தப்பித்துக் கொண்டோம். முதலில் நாம் பார்க்காமல் இருந்தால் அது நம்மைக் குத்தியிருக்கும். குத்தியிருந்தால் மிகவும் வேதனைப்படுவோம்.

நமது கண்ணோ இது குத்திவிடும் என்று காட்டுகின்றது. ஆனால் அந்த உடைந்த கண்ணாடிப் பாட்டிலை அப்புறப்படுத்த நமக்கு மனம் வருகின்றதா…? இல்லை…!
1.உடைந்ததை அப்புறப்படுத்த நமக்கு மனம் வரவில்லை.
2.உடலுக்குள் சேர்ந்ததை (ஆத்திரம் கோபம் வேதனை) நாம் எப்போது அப்புறப்படுத்துவது…?
3.ஆக நம் உடலுக்குள் எதைச் சேர்த்துக் கொள்கின்றோம்…? சிந்தித்துப் பாருங்கள்.

நம் கண் அதைக் காட்டும் போது இந்தப் பாட்டிலை அப்புறப்படுத்த வேண்டும். பிறருக்குக் குத்தக் கூடாது. பிறருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற இந்த எண்ணத்தை ஏற்றுத் தீயதை நீக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

இதைத்தான் கம்சன் என்ற துஷ்டனை சம்ஹாரம் செய்யக் கண்ணன் சிறையிலே பிறந்தான் என்று வியாசகர் சொன்னது. அதாவது
1.ஒரு தீய பொருளை நம் கண் பார்த்தவுடனே
2.அதை அப்புறப்படுத்த எண்ணினால் அந்தத் தீயது நமக்குள் சேர்வதில்லை.

ஆனால் அப்புறப்படுத்தாதபடி இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற எண்ணங்கள் வரப்படும் போது நமக்குள் தீய சக்திகள் கூடி நாம் வெறுக்கும் நிலையும் ஆத்திரப்படும் நிலையும் தான் வருகின்றது… தீமைகளே நமக்குள் வளர்கின்றது.

அந்தத் தீமையான பொருளை அப்புறப்படுத்தாமல் அதற்கு மாறாக மற்றவர்களை ஏசும் நிலையும் தீமையைப் பார்த்து வேதனையான உணர்வுகளையும் தான் நாம் சுவாசித்து நம் நல்ல குணத்திற்குள் அதைக் கலந்து விடுகின்றோம்.

கண் தெரிந்த பின் இந்தக் கண்ணின் செயலாக்கத்தை எவ்வாறு நீ செயல்படுத்த வேண்டும்..? என்று இந்தப் பேருண்மையைத்தான் “கீதா உபதேசமாக…” வியாசக பகவான் அன்று மகாபாரதத்தில் காட்டியுள்ளார்.

காற்றிலே மிதந்து இருக்கும் நல் உணர்வின் சக்தியைப் புலனறிவான கண்களால் ஈர்த்து நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று உணர்த்தினார்.

1.நுண்ணிய அலைகளைத் தனக்குள் உணர்வாகச் சேர்த்து
2.தன் உடலுக்குள் அதை விளைய வைத்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி
3.பத்தாவது நிலையான ஒளியாக விண்ணிலே சென்றடைந்த அந்த மெய் ஞானிகளின் பால் நம் கண்ணின் நினைவைச் செலுத்க்தி
4.அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசித்து நமக்குள் சேர்த்து
5.நம் உடலுக்குள் வந்த தீய சக்தியினை விலக்கும்படி சொன்னார் வியாசக பகவான்.

ஆகவே வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் சத்து தான் நமக்கு உதவும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply