வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…?

mentors

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…? 

உடலில் வலியோ அல்லது வயிற்று வலியோ இருந்தால் உடனே ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

எங்கே வலி எடுக்கிறதோ மகரிஷிகளின் அருள் ஒளியாலே அந்த வலி நீங்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். போகிறதா இல்லையா…? என்று பார்க்கலாம். இதெல்லாம் வாக்குகள். உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

யாம் (ஞானகுரு) காட்டுக்குள் சென்றோம். குருநாதர் பல கஷ்டங்களைக் கொடுத்தார். எப்படியெல்லாம் கஷ்டம் உண்டாகின்றது…? அதை எப்படி நீக்குவது…? கஷ்டத்தை நீக்க எந்த மாதிரிச் சக்தியை எடுக்க வேண்டும்…? அதே மாதிரி
1.எல்லோருடைய சந்தர்ப்பம் எப்படி…? என்பதையும்
2.மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெறும் சந்தர்ப்பத்தை “மற்றவர்களுக்கு எப்படி ஊட்டுவது…?” என்பதையும்
3.அனுபவப்பூர்வமாக யாம் உணர்வதற்காக எமக்குப் பல கஷ்டத்தைக் கொடுத்து
4.அதை நீக்கும் முறைகளை குருநாதர் எமக்கு உணர்த்திக் காட்டினார்.

ஆகவே இப்பொழுது என்ன செய்கிறோம்…? நீங்கள் கஷ்டம் என்று வருகின்றீர்கள். அந்தக் கஷ்டமான நேரத்திலே என்ன செய்கிறோம்…? தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை உபதேசிக்கின்றோம்.

உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்காக நீங்கள் இதை எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மிக வேகமாக உங்களுடைய கஷ்டம் நீங்குகிறது…!

உதாரணமாக அன்று அருணகிரிநாதருக்குச் சொத்து சுகம் எல்லாம் இருந்தது. கடைசியிலே அவருக்கு கஷ்டம் வரப்படும் பொழுது உடல் முழுவதும் நோயாகி வேதனைப்பட்டார்.

1.என்ன வாழ்க்கை…? என்று நினைத்தார்
2.இனி என்ன…? சாகப் போகிறோம் இன்றைக்கு
3.இது வரை செய்த… “கெட்டது அனைத்தும் போகட்டும்..!”
4.இனிமேல் அடுத்து நல்ல சரீரம் பெறவேண்டும்…! என்று கோபுரத்தின் மேல் ஏறி விழப்போனார்.
5.அந்த ஏக்கத்திலே இருக்கும் பொழுது அந்த சந்தர்ப்பம் என்ன செய்கின்றது…?
6,ஒரு நிமிடத்திற்குள் உயர்ந்த சக்தி உள்ளே வந்துவிடுகின்றது.
7.கீழே விழுகாமல் காப்பாற்றி உண்மையை உணரும் ஞானியாக ஆனார்.

இதே மாதிரித்தான் இப்பொழுது உடலில் கஷ்டம்… குடும்பத்தில் கஷ்டம்… என்று இப்படி எத்தனையோ கஷ்டத்தில் நீங்கள் வருகிறீர்கள்.

உங்கள் கஷ்டம் நீங்கவேண்டும் என்று யாம் சொல்கிறோம். கஷ்டம் நீங்குவதற்காக வேண்டி நீங்கள் இப்பொழுது வருவது இது ஒரு சந்தர்ப்பம். அந்தக் கஷ்டம் இல்லாமலிருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கவே மாட்டீர்கள்.

இராமலிங்க அடிகளுக்குத் தன் அண்ணியை அண்ணன் உதைக்கிறார் என்று
1.தன்னால் தான் அண்ணிக்கு அடி விழுகிறது… ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று
2.அங்கே ஒரு மூலையில் (பூஜை ரூமில்) உட்கார்ந்து நல்லதுக்காக ஏங்கும் பொழுது
3.ஒரு ஞானியின் அருள் அவருக்குள் வந்து எத்தனையோ ஞானத்தின் சக்திகளைச் சொன்னார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன செய்தார்…? மந்திரக்காரர்கள் காளி கோவிலுக்கு வந்து அடுத்தவர்களுக்கு ஏவல் செய்யும் போது “அடப்பாவிகளா…! காளி கோவிலில் வந்து ஆட்டையும் மாட்டையும் கொல்கிறீர்களே…!” என்று எண்ணுகின்றார்.

1.தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் செய்கிறார்களே…! என்று
2.நல்லதை எண்ணி ஏக்கத்திலே இருக்கும்போது
3.ஒரு நல்ல உணர்வான “ஆத்மா…” இவர் உடலிலே சேர்ந்து
4.அத்தனை பெரிய ஞானத்தைப் பேசினார் – இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தெரியாது.

விவேகானந்தர் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று பிடியாகப் பிடித்தார். அவர் தான் படித்த நிலைகள் கொண்டு அரசியல் பண்பைத் தெரிந்தார். உலகத்தையே அறிந்தார்.

தான் அறிய வேண்டும் என்ற வேட்கையிலே படிப்பறிவு இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்திலே வந்தவுடன் என்னவாயிற்று…?
1.வந்தவுடனே அவர் தொட்டவுடனே ஒரு கரண்ட் ஷாக்…! போன்று அவருக்குள் பாய்கின்றது
2.ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்ற நிலைகள் உண்மையை உணர்கின்றார்.

இவருடைய படித்த அறிவின் தன்மையை மற்றவர்களுடன் இணைக்கும் தன்மை வருகின்றது. ஆனால் இணைக்கும் தன்மை வந்தாலும் சக்தியின் தன்மையை அவர் காட்டிய அந்தப் படித்த வர்க்கத்தின் நிலைகள் கொண்டு பிராணாயமத்தினுடைய தத்துவத்தை அரசர்கள் காட்டிய நெறியில் உட்புகுந்துதான பாட நிலைகளில்தான் வந்தார்.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ கோவில் பூசாரியாக இருந்தாலும் பாட நிலையற்ற நிலைகள் கொண்டு
1.பூஜை என்பது மெய் ஒளியைத் தனக்குள் சுவாசித்து
2.நம் உயிரான ஈசனிடத்திலே நாம் பாய்ச்சும் இந்த ஆராதனைதான்…! என்று
3.இராமகிருஷ்ண பரமஹம்சர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

அதே போன்று ஆதிசங்கர் வெளிப்படுத்தியது, காற்றிலிருக்கக்கூடிய சக்தியை நீ சுவாசிக்கும் பொழுது உனக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு இந்தச் சுவாசமே அபிஷேகமாகின்றது.

நீ எந்த குணத்தை எண்ணுகின்றாயோ அந்த குணத்தின் தன்மை உயிரான நிலைகளில் அபிஷேகம் ஆகின்றது.
1.பாலைப் போன்ற மணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது உன் உடலுக்குள் மகிழ்ச்சியாகின்றது.
2.தேனைப் போன்ற சுவையான நிலைகள் பெற வேண்டும் என்று சுவாசிக்கும்போது உன் உடலிலுள்ள அணுக்கள் இனிமை நிறைந்ததாக மலர்கின்றது என்ற தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.

ஒரு ரோஜா மலர் என்றால் அதன் மணத்தின் தன்மையை எடுத்துத்தான் மலரின் தன்மை வருகின்றது. அந்த ரோஜா மலரை நாம் பார்த்து அந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்தால் அந்த மணம் நமக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு செருகேருகின்றது.

ஆகவே துவைதம் என்பது அந்தப் பொருளை எண்ணி எடுப்பதே தவிர யாகங்களைச் செய்து வேள்விகளைச் செய்து மந்திரத்தினாலே எடுப்பது அல்ல…! அன்று அரசன் காட்டிய அந்த நிலைகள் கொண்டு அதிலிருந்து விடுபடும் நிலையே இல்லாது இன்றும் நாம் இருக்கின்றோம்.

வேள்விகள் செய்தால்தான் நம் பாவம் போகும் என்றும் வேள்விகள் செய்தால்தான் அம்மா அப்பா மோட்சம் போக முடியும் என்ற நிலைகளில்தான் இருக்கின்றோம்.

ஆனால் அதைச் செய்யவில்லை என்றால் பிழை வந்துவிடுமோ என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் அந்த அளவுக்கு விஷத்தை நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

இவையெல்லாம் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் நெறிகள். இங்கே இதை உபதேசிப்பது நான் அல்ல….! மெய்யை உணர்ந்த பல மகரிஷிகளின் உணர்வலைகள் அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவர்களின் உணர்வலைகள்தான் உணர்த்தியது.

1.நீங்கள் இப்பொழுது கேட்பது சுவாசித்தது அனைத்துமே அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைத்தான்.
2.அந்த உணர்வலைகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.
3.அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆதிசங்கரர் சொன்னது போல்
4.காற்றிலிருக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எங்கிருந்தும் நீங்கள் பெறமுடியும்.
5.அதே சமயத்தில் விண்ணின் ஆற்றலையும், இந்தப் புவிக்குள் இருக்கும் சக்தியையும் நீங்கள் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

Leave a Reply