நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

horoscope-of-rishis

நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்தக் குழந்தை இன்ன நட்சத்திரம் இன்ன இன்ன இராசி என்பார்கள்.

அதன் அடிப்படையிலே வைத்து ஜாதகம் எழுதுவார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஜாதகத்தை எழுதுகிறார்கள். ஜாதகம் எழுதாதவர் பெரும்பகுதி யாரும் இல்லை.

அவ்வாறு எழுதிய ஜாதகத்தின் பிரகாரம் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்திம் கோளுக்கு (இராசிக்கு) இன்ன இன்னது ஆகாது என்ற நிலைகள் ஏற்கனவே எழுதிய குறிப்பை வைத்துக் கொண்டு குழந்தையின் வாழ்க்கை நிலையைக் காட்டுவார்கள்.

ஏனென்றால் விண்வெளியின் இயக்கத்தின் ஆற்றலை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் அங்கே உள்ள மதத்தில் இணைத்து
1.இது தான் கடவுளின் அவதாரம்..! இது கடவுளின் செயல்…! இந்த நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும்…! என்று
2.அவரவர்கள் உணர்வுக்கொப்ப நாடு வேறாக இருந்தாலும் அந்தந்த நாட்டிற்குத் தகுந்தவாறு மதங்களை அமைத்து
4.மதத்திற்குத்தக்க கடவுள்களை அமைத்துள்ளார்கள்.
5.அதன் அடிப்படை ஆச்சாரத்தில் விளைவித்த இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் ஜாதகக் குறிப்புகளை வைத்திருக்கின்றார்கள்.
6.அத்தகைய குறிப்புகள் கொண்டு தான் நம் ஜாதகத்தை உருவாக்கித் தருகின்றார்கள்.

குழந்தை பிறந்த நேரத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரைப் பார்க்கிறோம். இன்ன நட்சத்திரத்தில் இன்ன நிலைகள் பிறந்திருக்கிறது என்பதை அவர்களிடம் போய்க் காட்டும் போது எழுதி வைத்திருக்கும் சட்டத்தை அவர்கள் படிக்கிறார்கள்.

அவ்வாறு எழுதி வைத்ததன்படி இந்த நேரத்தில் கஷ்ட காலம் வருகிறது. நாலாவது மாதம் குழந்தைக்கு “ஏழரை நாட்டான் சனி…!” தொடங்குகிறது என்பார். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி விட்டால் குடும்பத்திற்கு ஆகாது… உங்கள் வியாபாரம் கெடும்… குடும்பத்தில் சிக்கல்கள் வரும்.. நோய்கள் வரும்..! என்று சொல்கின்றார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் தனக்குள் பதிவு செய்ததைத் (OS – OPERATING SYSTEM) திருப்பி எப்படி இயக்குகிறதோ அதைப்போல அவர்கள் சொல்வதை எல்லாம் நமக்குள் கேட்டுக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்ட பின் அந்த பதிவே நம்மை இயக்கத் தொடங்கும்.

பின் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் இந்த ஏழரை நாட்டான் இங்கே இருக்கிறானே… எப்படி வியாபாரம் செய்வது…? என்று அதையே வளர்த்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட எண்ணத்தை நமக்குள் யார் சிருஷ்டித்துக் கொடுக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தை வளர்த்துக் கொள்ள அதன் கீழ் அரசன் வாழ்ந்திட மக்களை ஒன்று சேர்க்க அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு வந்து அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து உருவாக்கி விட்டார்கள்.

உன்னுடைய ஜாதகப்படி பிழை ஏற்பட்டால் அதற்குப் பரிகாரமாக
1.நீ யாகத்தைச் செய்துவிடு…!
2.ஆண்டவனுக்கு நீ இதையெல்லாம் செய்து கொடுத்துவிடு
3.மற்றவர்களை வைத்து அனுஷ்டானங்களையும் மந்திரங்களையும் ஓதச் செய்.
4.அதே சமயத்தில் நீ இன்னென்ன இடத்திற்குச் சென்று (கோவிலே அல்லது ஒரு இடமோ) தியானிக்க வேண்டும் உன் பாவத்தை அங்கே சென்று கழிக்க வேண்டும் என்று
5.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறையைப் பின்பற்றுகின்றன. எல்லா மதங்களும் இப்படித் தான்…!

ஏற்கனவே அவர்கள் குறித்து வைத்ததை… மதத்துடன் இணைக்கப்பட்டதைத்தான்.. நாம் இன்று கடவுளாக வரித்து வைத்திருக்கின்றோம். அதன் படி நாம் எண்ணியதை எல்லாம் நம் உயிர் படைத்து விடுகின்றது. உடலுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்… சகோதரருக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கல் தடையாகும்… எதுவுமே உருப்படியாகாது…! என்று அவர்கள் சொன்னதைப் பதிவு செய்து கொண்ட பின் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வின் அலைகளாக நமக்குய் முன்னடி வந்து கொண்டேயிருக்கும்.

வெளியிலே எங்கே போனாலும் அல்லது எந்த வேலையைச் செய்தாலும் (வியாபாரமோ தொழிலோ) இந்த ஜாதகக் குறிப்பை எண்ணியவுடனே நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் காற்றுக்குள்) இந்த வாசனை வந்து விடும்.

இதே எண்ணத்தில் ஒருவரிடம் வியாபாரம் பேசப் போகும் போது இவர் என்ன சொல்வாரோ…! என்ற இந்தச் சந்தேக உணர்வோடு தான் நாம் போவோம். ஆனாலும் எப்படியாவது நம் பிழைப்புக்குப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பேசப்படும் போது சந்தேக உணர்வு கொண்ட சொல்களாக அவர் காதுகளில் கேட்கின்றது

அதனின் உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வை நாம் எண்ணினோமோ அது அவர் முன்னாடி வந்து நிற்கும்.
1.ஜாதகத்தில் சொல்லப்பட்டதை நுகர்ந்ததும் நமக்குள் எப்படி கலக்கம் ஏற்பட்டதோ
2.அதே இயக்கமாக அவருடைய உணர்வுக்குள்ளும் கலக்கமாகி
3.அடுத்து “சரி… பார்ப்போம்…“ என்று சொல்லத் தொடங்குவார்.
4.முதலில் பணம் கொடுத்து வாங்கலாம் என்று எண்ணியவர் இப்போது என்னிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையே..! என்பார்.
5.ஆகா… ஜாதகம் சொன்னது சரியாகப் போய் விட்டது என்று
6.நமக்குள் பதிவு செய்ததைத் திரும்ப எண்ணி அதை வலுவாக்கி நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
7.இங்கே நாம் எண்ணுவதை நம் உயிர் தான் படைக்கின்றது.
8.நம் உணர்வின் செயலையே அது மாற்றுகின்றது.
9.இப்படி வியாபாரம் மந்தமாகும் போது வேதனைப்படுகின்றோம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று சோர்வடைகின்றோம்.

இத்தகைய சோர்வான உணர்வுகளை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டதும் உயிர் அதைப் படைத்து வியாபாரத்தை மந்தமாக்கி அழகான உடலையும் நோயாக்கி நம்முடைய சுருதியைக் (திறமையைக்) குறைந்து விடுகின்றது.

ஒரு வீணையை வாசிக்க்கின்றார்கள் என்றால் அதில் உள்ள நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தால் இசை “கணீர்…!” என்று வரும்.
1.ஆனால் நரம்புகள் சிறிது தளர்ந்திருந்தாலே போதும்.
2.கணீர்… என்று சப்தித்த அந்த நரம்பு “டொய்ங்… ங்…” என்று இழுக்கும்.

இதைப்போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகளால் நம் நாதங்களின் (சொல்லின்) சுருதிகள் மாறி நம் உடலின் சுருதிகள் மாறி அந்த உணர்வுகள் வெளிப்படும் போது அதைக் கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

1.ஜாதகக் குறிப்பின் பிரகாரம் ஒவ்வொருவரும் நாம் இப்படித்தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்
2.நம்மை அறியாமலேயே நமக்குள் வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம்
3.வாழ்க்கையின் நிலைகளில் (மதத்தின் அடிப்படையில்) நமக்கு நாமே தடைகளைத்தான் விதித்துச் செல்கின்றோம்
4.இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

ஆனால் ஞானிகள் சொன்னது மனிதனாகத் தோன்றிவிட்டாலே அவன் முழு முதற் கடவுள்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்…! என்று ஞானிகள் சொல்லியிருந்தாலும் நாம் நல்லதைச் சிருஷ்டிக்கின்றோமா…?

கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலையில் மனிதனுக்கு ஜாதகம் கிடையாது. நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் படைக்கின்றது… உருவாக்குகின்றது…!

மெய் வழி சென்ற அந்த ஞானிகளின் வழியில் நாம் நடக்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திற்னை வளர்க்க வேண்டும். மெய் ஒளி பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இது தான் நாம் நமக்குள் சிருஷ்டிக்க வேண்டியது…!

Leave a Reply