பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…!

Eaganthanilais

பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…! 

எமது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும் உடலுக்கு அந்த உணர்வைக் கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டவர்.

எத்தகைய நல்ல துணியைக் கொடுத்தாலும் அதைக் கிழித்துவிட்டு பைத்தியக்காரனைப் போன்று காலிலே கட்டிப் போட்டுக் கொள்வார். புதுத் துணிகளை எல்லாம் கிழித்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக் கொள்வார்.

என்ன சாமி… இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! என்று கேட்டேன்.

கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைபடுத்த இந்தப் புதுத் துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன். கட்டாமல் போனால் ஏறி விடுகிறது விஷம்…! என்று இப்படி எல்லாம் உணர்த்தினார்.

அவர் ஒவ்வொரு விஷத்தின் தன்மையான எண்ணங்களுக்கும் ஒவ்வொரு கலரான துணிகளைக் காட்டினார். அதைப் போல அந்த விஷத் தன்மைகளை முறியடிக்கக் கூடிய ஒவ்வொரு தாவர இனச் சத்தின் திறனின் சக்தியையும் என்னை அறியச் செய்தார்.

தாவர இனச் சத்துக்கள் விஷத் தன்மைகளை எப்படி முறியடிக்கிறதென்ற நிலையும் அந்த ஆற்றலைத் தாவர இனங்கள் தனக்குள் எப்படி எல்லாம் கவர்ந்து கொள்கின்றதென்ற நிலையும் அவர் காட்டினார். ஆனால்
1.இதை எல்லாம் நேரடியாகக் காட்டவில்லை
2.பைத்தியம் போன்று அவர் செய்வதைத்தான் என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
3.அவர் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு தான் என்னால் அறிய முடிந்தது.

காலிலே கட்டைப் போட்டு இருக்கும் போது அதை அவரிடம் கேட்டு அறிய முடியாத நிலை இருந்தாலும் அவர் உடலை விட்டுச் சென்ற பின் அவரை நினைவில் கொண்டு ஏன் இதைக் கிழித்துக் கட்டினார்…? என்ற நிலையை மலைக் காடுகள் பக்கம் செல்லப்படும் போது என்னால் (ஞானகுரு) உணர முடிந்தது.

அவர் உடலிலே கட்டிய அந்தக் கிழிந்த ஆடையும் கிழித்துக் கிழித்துக் கட்டிய பல கலரான துணிகளும் அவருடைய நினைவலைகளைச் சுவாசிக்கும் போது அந்த உண்மையின் நிலையை நுகர முடிந்தது.

ஏனென்றால் அவர் எந்தெந்த கலர் துணிகளைக் கட்டியிருந்தாரோ அங்கே மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது அங்கே அதே துணிகள் சில சில பச்சிலை மூலிகைச் செடிகளிலும் மரங்களிலும் கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அவருடைய உருவம் அங்கே தெரிகின்றது. அவர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குப் புரியாத பாஷையில் அன்று சொன்னதெல்லாம் என் நினைவுக்கு வந்து அதைப் புரியும் நிலையாக வந்தது.

அப்பொழுது தீயவினையில் இருந்து விடுபடும் நிலையாக மெய் ஞானி அகஸ்தியனைப் பற்றிக் குருநாதர் எனக்குள் உணர்த்திய உண்மைகளை உணர முடிந்தது

1.அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் தாய் தந்தையரைப் பிரிந்த ஏக்கத்தில் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…?
2.தன் தாய் தந்தையரின் உணர்வுகளின் துணை கொண்டு தீய வினைகளில் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் பய உணர்வுகளிடமிருந்தும் எப்படி அவன் மீண்டான்…?
3.அவ்வாறு அவனின் வளர்ச்சியில் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து எவ்வாறு உணர்வின் தன்மையை ஒளியாக எடுத்தான்…?
4.அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வின் அலைகள் எப்படிப் படர்ந்துள்ளது…?
5.அங்கே செல்லப்படும் போது அதை நுகரும் போது நுகர்வோர் உள்ளங்களில் அது எப்படிச் செயல்படுகிறது…? என்ற
6.இத்தனை நிலைகளையும் உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் அவர் காலிலே பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி சுமார் பன்னிரண்டு வருடம் காடு மேடெல்லாம் நான் அலைந்தேன். தனித்த நிலையில் செல்லப்படும் பொழுது நான் இன்ன நிலையைத் தான் செய்வது என்று அறியாது திகைத்துக் கொண்டு உணவிற்காகவும் தவித்துக் கொண்டு இருந்தேன்.

சரியான உணவே இல்லாமல் காட்டிற்குள் சுற்றிக் கொண்டு இருப்பேன். எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் உணவு சாப்பிட்டுப் பழகியவனுக்கு அந்த நினைவுகள் வரும் போதெல்லாம் துயரங்களையே ஏற்படுத்தும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போது குருவை எண்ணுவேன். அவரை எண்ணும் போது அவர் உணர்வின் தன்மைகளை நான் நுகர நேருகின்றது.
1.நுகரும் போது அந்த மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும்
2.அவன் எடுத்துக் கொண்ட விஷத்தை முறிக்கும் உணர்வுகளையும்
3.அவனால் வெளியிட்ட இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்திருப்பதையும்
4.அந்த அலைகள் பூமிக்குள் (அந்தந்த இடங்களில்) இறுகித் தனக்குள் வளர்ந்திருப்பதும்
5.அந்த அலைகள் பதிந்திருக்கும் இடங்களில் நான் நின்றபின் அகஸ்தியனின் உணர்வலைகள் எப்படி வருகின்றதென்ற நிலையையும்
6.குருவை எண்ணும் போதெல்லாம் உணர முடிந்தது… அறிய முடிந்தது.. காண முடிந்தது….!

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசித்த அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் சென்ற பாதையையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குரு காட்டிய நிலைகள் தான்.

குருநாதர் உடலை விட்டுச் சென்ற பின்
1.அவர் உணர்த்திய நிலைகளை நுகர்ந்தறிந்து
2.நான் அறியக்கூடிய நிலையில் அதைப் பெற்று
3,என்னை அறியாமல் வந்த தீய வினைகளை அடக்கி
4.மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் ஓங்கி வளர்த்துக் கொண்ட
5.அந்த உணர்வின் எண்ண அலைகளே இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது. நானல்ல…!

குருநாதரை நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மைகளைப் போதிக்கும் தன்மை வருகின்றது. இதைப் படித்துணரும் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாகின்றது.

இது உங்களுக்குள் வளர்ந்து அந்த மெய் ஞானியான அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை நீங்கள் அனைவரும் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அவனுடன் ஐக்கியமாகும் நிலையும் உருவாகின்றது…!

Leave a Reply