“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

Bhoganathar - kalinanathar

“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

 

ஞானியாக வளர்ந்து வந்தவர்கள் யாருமே பாட நிலைகளில் படித்து அந்த நிலையை அடையவில்லை. இராமலிங்க அடிகளை எடுத்து கொண்டால் அவர் கற்றுணர்ந்து வரவில்லை. அருணகிரிநாதரை எடுத்துக் கொண்டாலும் பல மந்திர தந்திரங்களை அவர் கற்று வரவில்லை.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ வியாசகரோ வான்மீகியோ கொங்கணவரோ இவர்கள் யாருமே பாட நிலையில் கற்று உணர்ந்தவர்கள் அல்ல. இதைப்போல போகரை எடுத்துக் கொண்டாலும் அவரும் பாட நிலையில் கற்றுக் கொண்டவர் அல்ல.

ஒரு சமயம் போகருடைய சிறு வயதில் அவர் தாய் தந்தையை காளிங்கராயன் என்ற நாகம் தீண்டி விடுகின்றது. அதனால் தாய் தந்தையர் இறந்து விடுகின்றனர்.

தாய் தந்தை மீது அதிகமான பாசமாக இருக்கும் போது தாய் தந்தையினுடைய உயிராத்மாக்கள் போகருடைய உடலிலே சேர்ந்து விடுகின்றது.

அப்போது அந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தாய் தந்தையர்களை விஷத்தில் இருந்து மீட்டுக் கொள்வதற்காக பல உணர்வின் தன்மைகளைத் தனக்குள் அது எடுத்து நுகர்ந்தார்.

நாகம் தன் தாயைக் கொன்று விட்டதே…! என்று போகர் அந்தக் குழந்தைப் பருவத்தில் எண்ணி ஏங்கித் தாய் தந்தையரைக் காத்திடும் எண்ணத்தின் நிலைகள் கொண்டு பலவாறு பல நிலைகளிலே தெளிந்து விஷத்தை முறிக்கும் சக்தியாகத் தாவர இன சத்தின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார். அவர் தெரிந்து வரவில்லை குருவாக.

அதாவது காளிங்கராயன் என்பது அந்த விஷத் தன்மையான அந்தப் பாம்பிற்குப் பெயர். அது மிகப் பெரிய பாம்பு. அதனால் தான் போகருக்குக் காளிங்கராயன் குருவாக வந்தது என்று சொன்னது.

1.இத்தகைய கொடிய விஷத்தின் தன்மை வாய்ந்த பாம்பு தாக்கப்படும் போது தான்
2.தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்த அவருடைய எண்ணத்தின் ஈர்ப்பிற்குள்
3.விஷத்தை முறித்திடும் தாவர இனங்களைக் கண்டறியும் அறிவாற்றல் அவருக்குள் வளர்ந்து
4.அகஸ்தியனைப் போன்று எண்ணிலடங்காத தாவர இனச் சத்துகளை இவர் நுகர்ந்தறிந்து
5.சிறுகச் சிறுக அவர் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் ஞானங்கள் கொண்டு
6.தன் உடலைக் காத்திடும் நிலையும் நல்ல குணங்களைக் காத்திடும் தன்மையும் அவர் பெறுகின்றார்.

காரணம் இதற்கு முன் விண் சென்ற துருவ நட்சத்திரமும் (அகஸ்தியர்) அதற்குப் பின் சென்றவருடைய உணர்வலைகளும் போகரின் ஈர்ப்பிற்குள் சிக்கப்படும் போது தான் அந்த அறிவின் ஞானம் வருகின்றது.

தாவர இனங்களின் சத்துகளை அவர் அதிகமாக நுகரும் ஆற்றல் கொண்டு அதை அறிந்திடும் எண்ணம் கொண்டு அவைகளை மோகித்ததால் அவருக்குப் “போகன்…!”” என்று பெயர் வந்தது.

எதையுமே அது நுகர்ந்தறிந்து அந்த உண்மையை அறிந்திடும் எண்ணங்கள் அங்கே பிரதிபலிக்கச் செய்கின்றது. அதன் வழியிலே விண் சென்றவர்கள் தான். எல்லாமே சந்தர்ப்பத்தால் தான்.

இவ்வாறு தெரிந்து கொண்ட உணர்வின் தன்மை அவருக்குள் இருந்தாலும் இந்த உடலைக் காத்திடும் நிலையாகத் தான் ஆரம்பத்திலே அவர் பெற்றது.

தாய் தந்தையை விஷம் தாக்க அந்த விஷத்திலிருந்து உடலைக் காத்திடும் உணர்வின் தன்மை அதிகமாக வளர்ந்ததனால் விஷத்தை முறிக்கும் தாவர இனங்களை நுகர்ந்தறிந்து தன் உடலில் இணைக்கப்படும் போது
1.உடலை அழியா வண்ணம் உருவாக்கி
2.அதற்குள் தன் உணர்வின் சக்தியை எப்படிக் காத்திட வேண்டும் என்ற நிலை தான் போகனால் அறிய முடிந்தது.

தன் உடலைப் பல வருடங்கள் காத்து வைத்திருந்தாலும் “சிறைக்குள் அடைபட்ட உயிரணு போல தேங்கி விடுகின்றது…!” என்ற நிலையை உணர்ந்த பின் பிற்காலங்களில் தான் “உடலை விட்டுப் பிரிந்து விண் செல்ல வேண்டும்…!” என்ற நிலைக்கு வருகின்றார்.

1.அந்த நிலையில் பாமர மக்களை அணுகி அவருடைய நோய்களை நீக்கி
2.அவரிடத்திலிருந்து பேரன்பான மூச்சலைகளை போகர் நுகர்ந்து
3.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கடைசியில் விண் செல்கின்றார் போகர்.

ஏனென்றால் மிகச் சக்தி வாய்ந்த ஒவ்வொரு ஞானிகளும் இப்படித் தான் வந்தார்கள். ஆனால் அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை.

அகஸ்தியன் தான் முதலில் துருவத்தை அறிகின்றான். துருவத்தின் நிலைகள் அறிந்த பின் அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக ஒரு உயிராத்மா அடைகின்றது.

இது பல இலட்சங்களுக்கு முன்பு நடந்தது. இதையெல்லாம் நாம் நுகர முடியாது. ஆனால் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எடுத்துக் கொண்ட அந்த ஆற்றல்மிக்க சக்தியைத் தெளிவாக எனக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

அவர் சொன்னதை எல்லாம் பெறவேண்டும் என்று எனக்குள் அதைப் பதியச் செய்து கொண்டதனால் அவரைப் பின்பற்றி அவர் எண்ண உணர்வை நினைவு கொள்ளும் போது விண் வெளியின் ஆற்றலை நுகர முடிகின்றது.
1.குருவின் வழியில் யாம் (ஞானகுரு) இருந்ததனால்
2.விண் செல்லும் ஆற்றல் மிக்க அந்தச் சக்தியை அவர் உடலிலிருந்து நானும் அதைப் பருக முடிந்தது.
3.இப்பொழுது உங்களுக்கும் அதைப் போதிக்க முடிகின்றது.

Leave a Reply