நம் குடும்பத்தைச் சார்ந்தோரின் வேதனை உணர்வு நம்மை எப்படி எல்லாம் இயக்கும்…?

Strength-Courage

நம் குடும்பத்தைச் சார்ந்தோரின் வேதனை உணர்வு நம்மை எப்படி எல்லாம் இயக்கும்…?

ஞானிகள் காட்டிய மெய் உணர்வின் வழியில் நான் (ஞானகுரு) செல்வதற்காக வேண்டி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவபூர்வமாகப் பல உண்மைகளை எனக்குள் உணர்த்தினார்.

தீமைகளை என் உடலிலே புகச் செய்து உன் உடலில் தீய வினைகளாக அது எப்படி உருவாகின்றது…? அதை எந்தெந்த வழிகளில் எப்படி நீக்குவது…? என்று உபதேசித்தார்.

அதன் வழி இருபது வருடம் காடு மேடேல்லாம் அலைந்து நகருக்குள்ளும் சென்று அதை எல்லாம் அறிந்து கொண்டேன்.

ஆனால் என் குடும்பத்தில் குழந்தைகள் எல்லோரும் அப்பாவைக் காணோம் என்று ஏங்குகின்றார்கள். மற்ற குடும்பங்களில் எல்லோரும் மகிழ்ந்து வாழும் போது நம் தந்தையைக் காணோமே…! என்று வேதனையுடன் என்னை எண்ணுகின்றார்கள்.

1.அவ்வாறு அவர்கள் என்னை எண்ணும் போது
2.எனக்கு எப்படிப் பாதிப்பு வருகின்றது…?
3.அதனால் என்னுடைய சிந்தனைகள் எப்படி மாறுகின்றது…?
4.என் மனைவியும் அவ்வாறே கணவனைக் காணோம் என்று எண்ணும் போது எந்த நிலை ஆகின்றது…? என்பதனை
5.அங்கே காட்டிற்குள் வைத்தே உணர்த்துகின்றார்.

நண்பனுக்குள் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகி நம் காரியங்கள் நல்லதாகின்றது. அதே சமயத்தில் துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணினால் புரையேறி விபத்துக்கள் உருவாகக் காரணமாகின்றது. ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இவ்வாறு ஆகின்றது.

அதைப் போன்று தான் உன் மனைவியும் குழந்தைகளும் பாசத்தால்… உன்னைக் காணோமே…! என்று வேதனையுடன் எண்ணும் போது அது உன்னை எப்படிப் பாதிக்கின்றது…!

“நீ எதையோ பெற வேண்டும்…!” என்று உன்னை நான் அழைத்து வந்தேன். இருந்தாலும் உன்னைச் சார்புடையோரும் உன் மீது உள்ள பாசத்தால் இப்படி மனைவியையும் மக்களையும் விட்டு விட்டு “இப்படி அலைகின்றானே…” என்று உன்னை எண்ணும் போது எல்லோருடைய சாப அலைகளும் உன் உடலை எப்படி இயக்குகின்றது…?

அவர்கள் சாபம் இடும் நிலைகள் எதனால் வந்தது…? மனைவி மக்கள் எப்படி எண்ணுகின்றனர்…? இதை நீக்குவது எப்படி…? நீ எப்படி மாற்றப் போகின்றாய்…? என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இருபது வருடம் வெளியிலே சுற்றினாலும் சரியான சாப்பாடு இல்லை. தண்ணீரும் இல்லை. காட்டுக்குள் சென்றால் குருநாதர் சொன்ன வழியில் பேரீச்சம்பழம் தான் உணவு. சில நேரங்களில் வெறும் பச்சிலைகள் தான் உணவு.

ஊருக்குள் வந்தால் தான சாப்பிட முடியும். ஏதாவது பிரியப்பட்டுச் சாப்பிட வேண்டும் என்றாலும் கூட ஒரு இட்லிக்கு மேலே சாப்பிட முடியாது.

சுற்றுப் பிரயாணம் எல்லாம் முடிந்த பிற்பாடு அந்த ஒரு இட்லியை இரண்டு இட்லியாக மாற்றிருக்கிறேன். அவ்வளவு தான். பட்டினியாகவே இருந்ததால் அதை மாற்ற முடியவில்லை.
1.ஆனால் மெய் ஞானத்தை அதிகமாகச் சேர்க்கிறேன்.
2.அந்த நிலை தான் உள்ளது. (இப்படித்தான் நான் கற்றுணர்ந்து வந்தேன்)

ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் இன்று உலகில் மதம் இனம் மொழி என்ற நிலையில் தீவிரவாதங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது.

திடீரென்று இத்தனை கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அதில் இத்தனை பேர் இறந்தனர் என்று இதைப் போன்ற செய்திகளை நீங்கள் டி.வி. மூலம் பார்க்கும் பொழுது எங்கோ நடப்பதை உங்கள் கண்கள் (ANTENNA) கவர்ந்து உடலுக்குள் பதிவாக்குகின்றது.

அதே மாதிரி கொள்ளையர்கள் வீடு புகுந்து அங்கிருப்பவர்களைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று டி.வி. மூலமாகப் பார்த்தால் அதுவும் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் நாளுக்குள் நாள் நமக்குள் பதிவாகி நல்லதைச் சிந்திப்பதற்கு மாறாக பயத்தின் உணர்ச்சிகள் அதிகமாகிச் சிந்தனை இழந்து தவறு செய்வோராக மாறிக் கொண்டே வருகின்றோம். நல்ல சிந்தனை இழந்தபின் உடலிலே நோய்களாக உருவாகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் என்ன செய்வது…?

எத்தனையோ இன்னல்களிலிருந்து மீண்டு மனிதனாக வந்தாலும் சந்தர்ப்பத்தால் சுவாசிக்கும் இத்தகைய தீமையான உணர்வுகளால் நல்ல உடலுக்குள் அசுத்தம் சேர்கின்றது.

அதனால் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்கள் அழிந்து கீழான உயிரினங்களாகப் பிறக்க நேர்கின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர். ஆகவே
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ எண்ணு
2.அவனால் அமைக்கப்பட்ட உடல் கோயில் என்று நீ மதி
3.மனிதனாக உருவாகக் காரணமான நல்ல குணங்களைத் தெய்வமாக நீ மதி என்றார் குருநாதர்.

ஈசனால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாக மெய் ஞானிகளின் உணர்வுகளை அவர்களைப் பெறச் செய். மெய் ஞானிகளின் உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்தால் அவர்கள் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறும். அவர்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் சாப வினை தீய வினை பாவ வினை பூர்வ ஜென்ம வினைகள் எல்லாம் அகலும் என்றார்.

குருநாதர் எமக்கு இட்ட அந்த அருள் பணியைத்தான் இப்பொழுது செய்து கொண்டு வருகின்றோம்.

Leave a Reply