நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்

kovil-temple

நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்
ஆலயத்தில் தெய்வக் குணங்களைச் சிலையாக்கி வைரக் கிரீடங்களை வைத்துத் தங்க ஆபரணங்களை அணிந்து மலர் மாலைகளைச் சூடி அதற்கு முன் அமுதுகளை வைக்கின்றார்கள்.

திரையிட்டு மறைக்கின்றார்கள். ஏன்…?

1.நமக்குள் மறைந்துள்ள உணர்வை நாம் அறிந்துணர்ந்து
2.எதனை நாம் கவர வேண்டும்…?
3.எதை நமக்குள் வளர வேண்டும்…? என்ற பொருள் படும்படியாகத்தான்
4.ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள். ஞானிகள் செய்ததில் தவறில்லை.

ஆனால் ஞானிகள் செய்ததை அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்கள் அதாவது “பொருள் ஆசை கொண்டவர்கள்” தவறான வழியில் நம்மை அழைத்துச் சென்று விட்டனர்.

ஆசையைக் கூட்டி “பொருள் கிடைக்கும்…!” என்ற நிலையில் மாற்றிவிட்டார்கள். இந்தச் சாமியாரிடம் சென்றால் ஆயிரம் ரூபாய் உனக்குக் கிடைக்கும்… ஆண்டவன் அவருக்கு நிறையச் சக்தி கொடுத்துள்ளார்…! என்று கேள்விப்பட்டால் போதும்.

ஆலயத்தில் காட்டிய பண்பினை மறந்து விடுகிறார்கள்.

அந்தத் தெய்வத்தை இவன் கைவல்யப்படுத்தியிருக்கிறான் என்ற நிலையில் (தெய்வ வழிபாடு பெற்று இறந்தவனை மந்திரத்தால் கவர்ந்து வைத்திருப்பதால்) அவன் பெரிய கடவுளாகி விடுகின்றான்.

அவனிடம் சென்றபின்
1.நமக்கு முன்னாடியே பல அதிசயங்களைச் செய்வான்.
2.நாம் நினைத்து வந்ததையும் சொல்வான்.
3.உங்களுக்குத் துன்பம் இருக்கிறது… அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்றும் சொல்வான். (ஆஹா… அற்புதம்…! அப்படியே சொல்லிவிட்டாரே என்று எண்ணுவீர்கள்)

ஆனால் நம் துன்பத்தை நுகர்ந்தறிந்து அவன் சொன்னாலும் கடைசியில் அவனைத் துன்பத்திலேயே ஆழ்த்தி விடுகின்றது அவன் உயிர். எவன் ஜோசியம் சொல்லி அருளாடுகின்றானோ அவன் குடும்பமே சின்னா பின்னமாகும்.

ஆனால் அது எதனால் என்று அவனுக்குத் தெரியாது. ஏனென்றால் நுகர்ந்தறிந்த மற்றவர்களின் துன்ப உணர்வுகளே அங்கே வளரும். மற்றவர்கள் அவர்களை நாடிச் சென்றால் ஆசையின் உணர்வுகள் தான் அவர்களுக்குள் அதிகமாக விளைகின்றது.

அந்த ஆசையின் உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அதற்குத்தக்க நம்மிடம் அவர்கள்
1.நான் இந்தத் தெய்வத்தைக் கைவல்யம் செய்துள்ளேன்.
2.மந்திரங்கள் ஓதி யாகங்களைச் செய்தால் உங்கள் பாவத்தை எல்லாம் போக்கி விடலாம் என்பார்கள்.
3.வேண்டிய காசை அவர்கள் நம்மிடம் வாங்கிக் கொள்வார்கள்.

இப்படிக் காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற அஞ்ஞான வாழ்க்கையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர மெய் ஞான வாழ்க்கைக்கு நாம் செல்லவில்லை.

அவன் சொன்ன நிலைகள் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஆண்டவன் காப்பான் என்ற நிலையில் அந்த மந்திரத்தைச் சொல்லி நம் நட்சத்திரத்திற்காக அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பினால் ஆண்டவனையே நீங்கள் அடையலாம் என்று அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

காசைக் கொடுத்த பின் அவன் சொல்லும் மந்திரத்தைச் செவி கொண்டு கேட்டோம் என்றால் அதனால் ஆண்டவன் நமக்குச் செய்வான் என்ற எண்ணங்கள் தான் வருகின்றது. ஆனால்
1.அங்கே நாம் நற்குணங்களைப் பெறும் தன்மை தடைப்படுகின்றது.
2.நல் உணர்வுகளை நமக்குள் உருவாக்கும் நிலையும் மறந்து விடுகின்றது.
3.ஆசையைத் தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆகவே ஆலயப் பண்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

விநாயகரை வணங்கும் போது அதை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி எண்ண வேண்டும்.

நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும். இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும். எங்கள் பார்வையில் தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும். மலரைப் போல மணம் பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் நான் வாழ வேண்டும் என்ற உணர்வை நமக்குள் அணுக்களாக உருவாக்க வேண்டும்.

இப்படி நாம் எண்ணும் பொழுது
1.நாம் எண்ணிய உணர்வுகள் “ஓ…!” பிரணவம். “ம்…!” பிரம்மம்.
2.அதாவது எண்ணியது அனைத்தும் ஜீவன் பெற்று நமக்குள் சிருஷ்டியாகின்றது. உடலுக்குள் உருவாகின்றது.
3.இதைத் தான் ஓ…ம் நமச்சிவாய…! என்று சொல்வது.
4.வெறுமனே ஓ…ம் நமச்சிவாய… என்று சொல்வதால் பலன் இல்லை.

ஆகவே எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் அங்கே தீப ஆராதனை காட்டும் போது அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அப்போது நீங்கள் எண்ண வேண்டியது எது…?

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோர் எல்லோரும் பொருளறிந்து செயல்பட வேண்டும் என்று இதை எண்ணினால் ஓ… பிரணவம் ம்… பிரம்மம் ஓ…ம் நமச்சிவாய…!

பொருளறியும் உணர்வை நமக்குள் எடுக்கும் போது பொருளறியச் செய்யும் அந்த உணர்வின் நினைவை ஊட்டும் அணுவின் தன்மை உங்களுக்குள் உருவாகின்றது.

ஏனென்றால் எந்தக் குணத்தின் தன்மை நுகர்கின்றமோ நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகிறது. நாம் எண்ணியதைச் சிவமாக்குகின்றது (நம் உடலாக ஆக்குகின்றது)
1.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வு அதிகமாக எண்ணுகின்றோமோ
2.அது நம் உடலாகச் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது.

இப்படி நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் ஓ…! என்று ஜீவ அணுவாக நம் உயிர் மாற்றிக் கொண்டு உள்ளது என்பதைத் தெளிவாக கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.

சாஸ்திரங்களைக் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

அவர் பித்தனைப் போன்று இருந்தாலும் பல காலம் காடு மேடெல்லாம் என்னை (ஞானகுரு) அலையச் செய்தார். மெய்யை அறியச் செய்தார். அதை அனுபவபூர்வமாக உணரச் செய்தார். மெய் உணர்வுகளை உருவாக்கினார். அந்த மெய் உணர்வின் வழிகளில் தீமையை அகற்றும் வழியையும் எனக்குள் உருவாக்கினார்.

அவர் காட்டிய வழியில் தீமைகளை அகற்றினேன். தீமையை அகற்றும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் அதை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது உங்கள் செவிப் புலன் வழி இந்த உணர்வை ஊட்டி உங்களை நுகரச் செய்கின்றோம்.

நீங்கள் அதை நுகரும் பொழுது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உங்கள் உடலாக மாற்றும் நிலை வருகின்றது. இதனை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆலயப் பண்புகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞான வழியில் செல்லலாம். அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான உணர்வின் தன்மையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

Leave a Reply