அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

Abishekam

அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

 

யாகம் செய்யும் பொழுது ரோஜாப் பூவை எடுத்து அந்தத் தீயில் போட்டு ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்று சொன்னால் அது எங்கே போகிறது…?

ஆண்டவன் எங்கேயோ இருக்கிறார் என்று நினைக்கின்றோம். ஆனால் நமக்குள் இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டோம். நம்மை ஆள்பவன் யார்…? நம் உயிர். அப்போது அந்த ஆண்டவனுக்கு எதைக் கொடுக்க வேண்டும்…?

ரோஜாப் பூவினுடைய மணத்தைப் பெற வேண்டும் என்று சுவாசித்தால் நல்ல வாசனை நமக்குள் வரும். அதை எண்ணி உயிருக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுது மகிழ்ச்சி வரும்.

நான் எல்லாச் சாமிகளையும் கும்பிடுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு
1.தவறு செய்பவனைப் பார்த்து
2.இவன் படு அயோக்கியத்தனம் செய்கிறான் என்று நினைத்தால்
3.இந்தக் காரமான உணர்வுகள் என்ன செய்யும்…?
4.உயிரிலே பட்டு எரிச்சலும் கொதிப்பும் தான் வரும்.

பாலிற்குள் பாதாம் இனிப்பு எல்லாம் போட்டு வைத்து விட்டு அதிலே காரத்தைப் போட்டோம் என்றால் என்ன செய்யும்…? நல்ல சுவைக்குக்குள் இந்தக் காரம் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. அப்போது இரண்டும் கலந்தவுடனே என்ன செய்கின்றது,

காரம் காரம் என்று தான் சொல்வோம். நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல சக்திகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

இதே மாதிரி தான் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் (கோபம் ஆத்திரம் வெறுப்பு சங்கடம் வேதனை பயம்) அழுத்தி அழுத்தி எல்லா அணுக்களிலேயும் போய்ச் சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்த நிலைகளுக்கொப்பத்தான் நம்முடைய மன நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்றது. மனது சரியில்லை என்று தான் சொல்வோமே தவிர அது எதனால்…? ஏன்…? எப்படி வந்தது…? என்று சிந்திப்பதில்லை.

இதைப் பிரித்துப் பிரித்துப் பிரித்துப் பிரித்து அவ்வளவு துல்லிதமாக நமக்குள் நடக்கும் நிலைகளை ஆலயங்களில் சிலைகளை அமைத்துக் காட்டியிருக்கின்றார்கள் ஞானிகள்.

அதாவது அங்கிருக்கும் கல் சிலைக்கு அபிஷேகம் தேவை இல்லை. ஒவ்வொருவர் உயிரிலும் படும் அசுத்தங்களை நீக்க நல்ல உணர்வுகளை நீ உன் உயிருக்குள் அபிஷேகிக்க வேண்டும் என்று அங்கே செய்து காட்டுகின்றார்கள்.

1.பாலாபிஷேகம் சாமி மேல் ஊற்றிக் காட்டுகிறார்கள் என்றால் பாலைப் போன்ற எண்ணத்தை எடுத்து இங்கே ஊற்று (புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே)
2.சந்தனாபிஷேகம் ஊற்றுகிறார்கள் என்றால் அதனின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று.
3.தேனை ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த இனிப்பான சுவையைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
4.பன்னீரை சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த நறுமணத்தை எடுத்து உயிரிலே ஊற்று
5.பூக்களை அபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் மலர்களின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
6.கடைசியில் நல்ல நீரைச் சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்தத் தூய்மைப்படுத்தும் உணர்வைச் சுவாசித்து உயிரிலே ஊற்று என்று
7.இப்படித்தான் ஞானிகள் நம்மைச் செய்யச் சொன்னார்கள்.

சாமிக்குப் பொங்கலை வைத்துப் படைத்திருக்கிறார்கள் என்றால் அதில் பல சரக்குகளைப் போட்டுச் சுவையாக்கியது போல
1.சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் பேசுவது செய்வது ஒருமித்த நிலையில் எல்லாமே அப்படிக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படிச் செய்தால் நமக்குள் பேரானந்தமும் பெரு மகிழ்ச்சியும் தேடி வரும். கோவிலுக்குச் சென்று இப்படி நாம் யாரும் நினைக்கிறோமா…?

நான் சாமிக்குக் கொடுத்திருக்கின்றேன் என்று தானே நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்கள்…! சற்று சிந்தியுங்கள்.

உயிரான ஈசனுக்குக் கொதிப்பையும் எரிச்சலையும் அசுத்தமான உணர்வுகளையும் கொடுக்கக் கூடாது என்பதைத்தான் ஆதிசங்கரர் தெளிவாகச் சொன்னார்.
1.மனிதனான நீ யாருக்கோ கொடுக்கின்றதாக நீ இப்படிச் செய்கிறாய்.
2.பல பொருள்களையும் நெருப்புக்குள் போடுகின்றாய்…!
3.ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் இந்த நல்ல வாசனைகளைக் கொடுக்க வேண்டும்
4.உயிரான அந்த நெருப்புக்குள் அதைப் போட்டு அந்த வாசனையை உடலுக்குள் சமைக்க வேண்டும் அல்லவா…!
5.அகத்திற்குள் செய்யச் சொன்னதை நாம் புறத்திலே செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று ஆதிசங்கரர் சாடினார்…!

ஞானிகள் காட்டிய வழிகளை நாம் கடைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

Leave a Reply