ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!

Jothilinga - divine light

ஆண்டவன் அருள் என்பது “ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!”

காட்சி:-
நிலத்திலிருந்து ஒரு ஆத்ம லிங்கம் வளர்ந்து வருகின்றது. அதுவே ஒரு மகரிஷியாகக் காட்சி அளித்து மேடான இடத்தில் நின்று கொண்டு அவர் கையில் இருக்கும் ஒரு ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றார்.

அவர் நிற்கும் மேடான இடத்திற்குக் கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அந்த ஒளியான லிங்கம் கொடுக்கப்படும் என்று கையேந்தி நிற்கின்றனர்.

ஆனால் அவரோ அந்த ஒளியான லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி அந்த ஒளியைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றார். யாருக்கும் தனித்து அந்த லிங்கத்தைத் தரவில்லை.

1.அவர் உருட்டிய ஒளியான அலைகள் பாயப் பெற்ற அந்த ஒளியை ஈர்த்து
2.தன் ஒளியை அந்த ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம்
3.அந்த ஒளியான லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
4.அந்த மகரிஷியின் கையில் உள்ள ஒளி லிங்கம்
5.முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளியைப் பரப்பிக் கொண்டேயுள்ளது.

அந்த லிங்கமே கையில் கிடைக்கும் கிடைக்கும் என்று கையேந்தி நின்று கொண்டேயிருப்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த மகரிஷியும் தான் பெற்ற அந்த ஒளியான லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

விளக்கம்:-
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாக ஒன்று போல் தான் ஒளி வீசுகின்றான்.

அந்தப் பேரருளை நாம் பெற்று அந்த ஒளியுடன் ஒன்றும் ஒளியாகத்தான் நம் செயல் இருக்க வேண்டுமே தவிர ஆண்டவனே வந்து நமக்களிக்கட்டும்…! என்று ஏங்கிக் கொண்டிருந்தால் காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும்…… அந்த ஒளியை ஆண்டவன் வந்து நமக்கு அருளப் போவதில்லை.

1.அவன் தந்த ஒளியை அவனதாக்கி
2.அவனுடன் ஐக்கியப்படுவது தான்
3.மெய் ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி.
4.அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு ஆண்டவனின் அருளை வேண்டி நிற்காமல் ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை பெற ஒவ்வொருவரும் செயலாக்குங்கள்.

Leave a Reply