குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் உண்மைகளை நாம் மற்றவர்களுக்கு “எப்படித் தெரியப்படுத்த (விளம்பரப்படுத்த) வேண்டும்…?”

Self realization Gnani

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் உண்மைகளை நாம் மற்றவர்களுக்கு “எப்படித் தெரியப்படுத்த (விளம்பரப்படுத்த) வேண்டும்…?”

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் தன்மையில் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குக் உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

இதைப் பற்று உங்களிடம் வந்து சிலர் கேட்டார்கள் என்றால் தாராளமாகச் சொல்லி விடுவீர்கள். இருந்தாலும் இதை எல்லாம் யாருக்குச் சொல்ல வேண்டும்…? என்று இருக்க வேண்டும்.

உண்மையான நிலைகளில் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று நம்மை அணுகி வரக்கூடியவர்களுக்கு இந்த உபதேசங்களைச் சொல்லி அவர்கள் வளர வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அதே சமயத்தில்
1.உபதேசிக்கும் உணர்வின் துணை கொண்டு
2.காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வை இந்தத் தியானத்தின் மூலம் பெறவேண்டும் என்று
3.வேண்டி விரும்பித் தேடி வருபவர்களுக்கு இதைச் சொன்னால் சரியாக இருக்கும்.

அது அல்லாதபடி… அட என்னய்யா…? உங்கள் சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…. என்று எங்களுக்குத் தெரியாதா…? என்று சாதாரணமாகச் சிலர் சொல்லிவிடுவார்கள்…!

அதைக் கேட்ட உடனே அப்படியா..! இரு நான் பார்க்கிறேன்…! என்று சொல்லிவிட்டுக் கட..கட என்று எல்லாப் பாடத்தையும் அவர்களிடம் ஒன்றுவிடாமல் நீங்கள் ஒப்பித்துவிடுவீர்கள்.

அதை எல்லாம் கேட்ட பிற்பாடு அவர்கள் உங்களைப் பைத்தியக்காரராக்கி… நம்மையும் பைத்தியக்காரராக்கி விடுவார்கள். கேட்பவர்களையும் அதைப் போன்ற நிலையாக்கிக் கடைசியில் “பாலுக்குள் விஷத்தைக் கலப்பது போல்…” நிலைமையை உண்டாக்கி விடுவார்கள்.

ஏனென்றால் காற்று மண்டலத்தில் நஞ்சின் தன்மைகள் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. ஆகையினால் நாம் ஒருக்கிணைந்து வலுவான நிலைகளில் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றி யாம் எதை எல்லாம் சொன்னோமோ அதை வளர்க்கக் கூட்டுத் தியானங்களை அமைத்து அந்தக் கூட்டமைப்புக்குள் யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் உடனே எல்லோரும் சேர்ந்து அவர்கள் நலம் பெற மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
2.அந்த அருள் ஒளி அவர்கள் உடலிலே பரவ வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று
5.இப்படி எல்லோரும் சேர்ந்து அதைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.
6.இப்படிச் செய்தால் வலிமை இருக்கும்.

ஆகவே இதைப் போல ஒரு நண்பர் சொன்னால் நான்கு பேர் சேர்ந்து இதைச் செய்தால் போதும். நூறு பேர் வரவேண்டும் என்பதில்லை. இதைப் போன்று நாம் செய்து பழக வேண்டும்.

இதையெல்லாம் நாம் சிறுகச் சிறுகக் கொண்டு வர வேண்டும். இதை நாம் ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்…? எப்படி விளம்பரப்படுத்த வேண்டும்…?

1.அந்த மெய் ஞானிகளின் அருளை நீங்கள் ஏங்கிப் பெறும் போது
2.உங்கள் உள்ளங்களில் அது ஓங்கி வளர்கின்றது.
3.அதன் மூல்ம நீங்கள் எந்த அளவிற்குத் துன்பங்களிலிருந்து விடுபடுகின்றீர்களோ
4.அந்த எண்ணங்கள் உங்கள் சொல்லைக் கேட்போரின் உள்ளங்களிலும் படர்ந்து
5.அவர்கள் துன்பங்களையும் அது போக்கும்.
6.இது தான் விளம்பரம்…! இப்படித்தான் நம் குருநாதர் காட்டிய வழியில் வளர்க்க வேண்டும்.

இப்படிச் செய்யாமல் எங்களிடம் இப்படிப்பட்ட சக்தி இருக்கின்றது… எங்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… மகரிஷிகள் ரொம்பவும் சக்தி வாய்ந்தவர்கள்…! என்று வீணாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இப்படிச் சொன்னீர்கள் என்றால்
1.இவ்வளவும் தூரம் சொல்கிறாய் அல்லவா…!
2.உன்னிடம் என்ன சரக்கு இருக்கின்றது…? என்று கேட்டால்
3.பதில் சொல்ல முடியாது… அப்புறம் தவிக்கத்தான் வேண்டும்.

ஆகவே முதலில் நாம் அதுவாக மாற வேண்டும். அந்த மெய் ஞானிகளின் உணர்வாக நாம் மாற வேண்டும். நமக்குள் மெய் ஞானத்தை வளர்க்க வேண்டும். நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.

நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களை வெறுமனே சொல்லிப் போற்றாதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும். அவர்கள் ஒளி நிலை பெறவேண்டும் பிறவியில்லா நிலை பெறவேண்டும் என்று அவர்களை உந்தி விண் செலுத்த வேண்டும்.

யார் மீதாவது நமக்குப் பகைமை இருந்தால் அந்த உணர்வுகள் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போன்ற பகைமைகளை நீக்க குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

தியான வழியில் இருப்போர் அனைவருமே மற்ற யாரையும் கஷ்டப்படுத்தியோ… கட்டாயப்படுத்தியோ… இதைச் செய்யச் சொல்ல வேண்டாம்…!

அவர்களும் மெய் உணர்வுகள் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று உடலில் பரப்பிக் கொண்டால்
1.இந்த உணர்வுகள் ஓங்கி வளர்ந்த நிலையில்
2.பிறர் மேல் இருக்கும் அந்தக் கசப்பான உணர்வின் நிலைகள் நம்மிடமிருந்து நீங்கும்.

அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி விளையும். இணைந்த நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சம் போன்று நாம் அனைவரும் “ஏகமாக வளர்வதற்கு இது உதவும்…!”

Leave a Reply