இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

Ultimate destination

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

நமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது…?

உதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாகப் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத் தான் இருக்கும்.

முதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.

அதைக் கவனிடா…! என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டுக்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.

காலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.

அந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா…! என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.

அப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது…! என்ன செய்கிறது…! என்று பார்த்தேன்.

அது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்… என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்…!” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.

அது எப்படி எவ்வளவு அழகாகப் பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்..! என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.

இப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.

அப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..?” என்று நினைக்கின்றீர்கள்.

தேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது…!” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி…? என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.

நம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன…?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

காரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
1.பாசத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை
2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ
3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)
4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.
5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி…
6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு
7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி…
8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.
9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.
1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.
2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.
3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.
4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே…!” என்கிறான்.

துன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).

அதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

இரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே
1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.
2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்
3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்
4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது
5.ஆக அந்த எரிச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி
6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும
7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.

எந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.

இதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.

ஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.
2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…?
3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்…?
4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…! பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.

Leave a Reply