அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி”

Solar system - sages'

அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி” 

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும் அது எவ்வாறு இயங்குகின்றதென்ற நிலையை இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாம் தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட ஞான ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும் பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும் கவர்வதற்கும் எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதேபோல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்களை வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகி பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப்போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

Leave a Reply