சூரியனின் மூத்த மகன் வாலி என்று ஏன் காட்டுகின்றார்கள்…?

polaris-pole-star-sabdharishi

சூரியனின் மூத்த மகன் வாலி என்று (வானரப்படையாக) ஏன் காட்டுகின்றார்கள்…?

 

சீதாவைக் கொண்டு போய் இராவணன் சிறைப்பிடித்துக் கொள்கின்றான் என்று சொல்கின்றார்கள் என்றால் அதனுடைய உட் பொருள் என்ன?
1.நல்ல குணங்களை அடக்கி வைத்துக் கொள்கின்றான்.
2.நல்லதைச் செயல்படவிடாது செய்கின்றான்.
3.அதாவது நான் செய்யும் தவறுக்கு நீ இணங்கி வர வேண்டும்.
4.இல்லை என்றால் உன்னைக் கொன்று தின்று விடுவேன் என்கிறான் இராவணன்.

சந்தர்ப்பவசத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம்மிடம் இருக்கும் நல்லதைச் செயல்பட விடாதபடி எப்படி இயக்குகின்றது என்பதை இராமயாணத்தில் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இராமாயாணக் காவியத்திற்குள் இருக்கும் மூலப்பொருளைப் பார்த்தால் தெரியும். சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து மனிதன் எப்படி விடுபட வேண்டும் என்பதை அதில் தெளிவாக்கியுள்ளார்கள்.

சூரியனின் பிள்ளை வாலி என்று காட்டுகின்றார்கள். கோபம், குரோதம் வெறுப்பு வேதனை நோய் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து கொண்டால் அவைகளை அந்தந்த உணர்வின் அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது (ஒரு வங்கி – பேங்க் போல).

சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் அந்த உணர்வலைகளை ஒரு மனிதன் நுகர்வான் என்றால் அது அவனையும் கோபப்பட வைக்கும்… வெறுப்படைய வைக்கும்.. வேதனைப்பட வைக்கும்… நோய்வாய்ப்பட வைக்கும்…!

அதனால் தான் சூரியனின் மூத்த பிள்ளை “வாலி…!”

மூத்த பிள்ளை என்று சொல்வதற்குக் காரணமே ஆதியில்
1.விஷத்தின் தாக்குதலால் ஏற்பட்டது தான் வெப்பம்.
2.வெப்பத்தின் தணல்களால் ஏற்பட்டது தான் காந்தம்.
3.காந்தத்தால் ஈர்க்கப்பட்டது தான் பல நிலைகள்.

விஷம் தாக்கியவுடன் வெப்பமாகின்றது. வெப்பமாகும் போது நகர்ந்து ஓடுகின்றது. நகர்ந்து ஓடும் போது தான் காந்தமாகின்றது.

ஆக வெப்பம், காந்தம், விஷம் என்று மூன்று நிலைகளில் தான் ஒரு அணுவின் இயக்கம்…
1.ஆதிசக்தி என்பது கடும் விஷம்…
2.ஆதி பராசக்தி எல்லாவற்றையும் உருவாக்கும் சக்தி வெப்பம்.
3.ஆதிலட்சுமி காந்தம் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஞானிகளால் கொடுக்கப்பட்ட இந்த பேருண்மைகளை நாம் புரிந்து கொண்டால் போதும். வாழ்க்கையில் நம்மை எது இயக்குகிறது..? எது நம்மை உருவாக்குகிறது…? எது நம்மை மாற்றுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆதி சக்தி என்ற விஷத்தைக் காட்டுகின்றார்கள். விஷத்தின் தன்மை எதைக் கவர்கின்றதோ அதன் வழி தான் இயக்குகின்றது. அதனால் முதல் மகன் வாலி…! என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. கவர்ந்த உணர்வை யார் நுகர்ந்தாலும் அதனுடைய வலிமை அவர்களிடம் உள்ள நல்லதை அடக்கிவிடும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

சூரியன் கவர்ந்த உணர்வுகள் இந்தக் காற்றிலே (வானிலே) அலைகளாகத்தான் பரவச் செய்து வைத்திருக்கின்றது. அதனால் தான் “வானரப்படை” என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக வேதனைப்படுவோரை நாம் பார்க்கின்றோம். நுகர்ந்த பின் நமது நல்ல குணங்கள் ஒடுங்கி விடுகின்றது. நமது செயலும் தடுமாற்றமாகின்றது.

அதாவது வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெற்றுக் கொள்வான். நல்ல குணங்களை இயங்கவிடாது தடைபடுத்துகின்றான் என்று இராமாணத்தில் தெளிவாக்குகின்றனர்.

அந்த வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேரடியாகத் தாக்கவில்லை.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நேரடியாக நுகரும் பொழுது
1.சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கும்.
2.நல்ல உணர்வை நாம் இயக்க முடியாது என்று காட்டுகின்றார்கள்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற அந்த உணர்வை அங்கே நிறுத்த வேண்டும் என்று காட்டுகின்றனர்.

நம் உயிரிலே வேதனைப்படுத்தும் உணர்வை இயக்கவிடாது அருள் உணர்வை உயிரிலே இணைத்து வேதனையான உணர்வைத் தடைப்படுத்தும் நிலையைத்தான் “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…!” என்று உணர்த்துகின்றார் வான்மீகி மாமகரிஷி…!

Leave a Reply