குரு இல்லாத வித்தை வித்தையாகுமா…?

Dhakshinamoorthy

குரு இல்லாத வித்தை வித்தையாகுமா…? 

மெய் ஞானிகளால் வெளியிடப்பட்ட… மாமகரிஷிகள் வெளிப்படுத்திய ஆற்றல்களைச் சக்தி வாய்ந்தவர்கள் அல்லாதபடி “சாதாரண மக்களால்” அதைக் கவர முடியாது.

அத்தகைய சக்தி வாய்ந்த அந்தச் சக்தியை நீங்களும் கவரும் வண்ணம் அதைச் செய்வதற்கே இப்போது இந்த உபதேசம்.

சாதாரண நிலைகளில் ஏட்டுச் சுவடிகளில் படித்தோ புத்தகங்களில் படித்தோ அந்தப் படிப்பின் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் அருளை நீங்கள் பெறும் தகுதி இல்லை.

காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனின் தன்மையை நீங்கள் பெற முடியும்.
1.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
2.அந்தச் சக்திக்கு உண்டான வித்து தேவை.
3.அதற்குத் தான் குரு வேண்டும் என்பது…!
4.குரு தனக்குள் படைத்து அந்த உருவின் தன்மை தனக்குள் இருந்தால் தான் அந்தச் சக்தியை எடுக்கும்.
5.குரு இல்லாத வித்தை வித்தையாகாது.
6.குருவின் பலம் உங்களுக்கு வேண்டும்.

அதனால் தான் மெய் வழியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கும் உங்கள் அனைவருக்குள்ளும் அந்த உணர்ச்சியை உந்தச் செய்து அந்த ஞானிகளின் உணர்வான சத்தைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சியைத் திரும்பத் திரும்பத் தூண்டச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை எமக்கு (ஞானகுரு) ஏற்படுத்தினார். அந்த ஆற்றல் மிக்க சக்தியை எம்மைப் பெறும்படி செய்தார்.

அவர் எனக்குள் எப்படி அதைப் படைத்தாரோ அதே போன்று ஒவ்வொரு நொடியிலும் அந்த ஞானிகளின் நிலைகளை நான் எடுத்துக் கொள்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்கின்றேன்.
1.அந்த உணர்வின் தன்மை எமக்குள் ஈர்க்கப்பட்டு
2.அதே உணர்வின் இயக்கமாகத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்,

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய பல கோடிக் குணங்களுக்குள்ளும் அதை நிகழ்த்தி அதை மாற்றி நல்ல உணர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியும் ஏற்படுத்துகின்றோம்.

ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று யாம் சதா உங்களுக்காகப் பாய்ச்சும் பொழுது நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது.

அதுவே உங்களுக்குள் குருவாக அமைந்து அந்தச் சக்தியைப் பெறும் தகுதியே ஏற்படுத்தும். மேலும் நீங்கள் செல்ல வேண்டிய ஞானப் பாதையையும் குருவாக இருந்து அதுவே வழி காட்டும்.

அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்…!

Leave a Reply