“தீமைகளை வகுந்திட…” நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்

Naranarayanan

“தீமைகளை வகுந்திட…” நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் 

பத்து அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் முக்கியமானது. நாம் இப்போது அந்த நரசிம்ம அவதாரத்தில் இருக்க வேண்டும். அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்குப் பயன் தரும்.

நரசிம்ம அவதாரம் என்றால்
1.அதாவது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.
2.ஆகாசமும் இல்லை பரவெளியும் இல்லை.
3.வாசல்படியில் வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நாம் சுவாசிக்கும் நிலை நம் மூக்கு தான் நமக்கு வாசல்படி. நாம் கோபமான உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த அசுர சக்திகள் நம் சுவாசத்தின் வழியாகப் புகுந்து… உயிரிலே பட்டு பிரணவமாகி (ஜீவன்)… அணுக்களாக விளைந்து… நம் உடலாகின்றது…!

இரண்யன் எப்படிப்பட்ட வரம் கேட்கின்றான்…? எந்தத் திக்கிலிருந்தும் வந்து என்னை யாரும் எதுவும் அழிக்கக் கூடாது…! என்று தான் கேட்கின்றான்.

இரண்யன் என்றால் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்விலும் அந்த விஷங்கள் உண்டு. அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்கத் தான் அந்த உணர்வின் தன்மை (குணம்) நம்மை இயக்கும். அதனால் நம் உடலுக்குள்ளும் மாற்றமாகும்.

பல கோடிச் சரீரங்களில் நாம் நுகர்ந்த அத்தகைய விஷங்களைக் கழித்துக் கழித்துத்தான் அதற்குத் தகுந்த உறுப்புகள் உருவாகி மனித உடலாக இன்று வந்திருக்கின்றோம்.

மனிதனான பின் விஷத்தை ஒளியாக மாற்றும் நிலை இந்த மனித உடலிலிருந்து பெறவேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

அதற்காக வேண்டித் தான் இங்கே வாசற்படியிலே வைத்து… “இரண்யனைப் பிளக்க வேண்டும்…!” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வாசல்படிக்கு மேலாகப் புருவ மத்தியில் தான் நம் உயிர் இருக்கின்றது. ஆக உயிர் – மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.

ஆற்றல் மிக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை உயிரின் நினைவுகள் கொண்டு நுகர்ந்து வாசலில் வைத்து அடைத்து விட்டால் அசுர உணர்வின் சக்திகள் உடலுக்குள் புகாது மாய்க்கப்பட்டு விடுகின்றது.

அப்பொழுது தீமைகளை நாடாது நமக்குள் நல்லதை வளர்க்கும் தன்மை வருகின்றது. ஆகையினாலே மனிதனாகப் பிறந்த நாம்
1.அந்த மெய் ஒளியின் ஆற்றலை எடுத்து
2.உயிரிலே வைத்து நெருப்பாகக் கூட்டும் பொழுது – நர நாராயணனாக ஆகி
3.நம்மை அறியாது நுகரும் விஷத்தின் தன்மைகள் மாய்க்கப்படுகின்றது

ஆகவே வாசற்படியில் வைத்து இரண்யனைப் பிளக்கும் இந்த நிலையைத்தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் சொன்னார்கள். இதை மனிதன் ஒருவன் தான் செய்ய முடியும்.

எந்த அளவிற்கு (எத்தனை தடவை) நாம் மகரிஷிகளின் உணர்வை எண்ணிப் புருவ மத்திக்கு நம் நினைவாற்றலைக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்குப் பலன்களைப் பெறமுடியும்.
1.தீமைகள் நம்மை அணுகாத நிலையும்
2.மெய் ஒளியின் சுடராக நம் உயிராத்மா மாறுவதையும்
3.நிச்சயம் உணர முடியும். காணவும் முடியும்.

Leave a Reply