உங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்… “தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்…!” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Maharishi worlds

உங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்… “தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்…!” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

நீங்கள் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்திருந்தாலும் அவர்கள் பதிலுக்கு நன்மைகள் செய்யாது இடைஞ்சல் செய்யும் பொழுது அதில் யார் யாரெல்லாம் துன்பத்தை விளைய வைத்தார்களோ அவர்களை எண்ணிச் சங்கடப்படுகின்றீர்கள்… ஆத்திரப்படுகின்றீர்கள்…!

உங்கள் குழந்தைகள் உடம்புக்குச் சரியில்லை இல்லை என்றால் அப்பொழுது குழந்தைகள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். ஒருவர் மீது அதிகப் பற்றும் பாசத்துடனும் இருக்கும் பொழுது அவர் நல்லவராக வர வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.

ஆனால் இவை எல்லாம் நீங்கள் எண்ணியபடி நடக்காமல் தடைப்படும் பொழுது என்ன ஆகின்றது…? நம்மை அறியாமல் வேதனைப்படுகின்றோம். துயரப்படுகின்றோம் துன்பப்படுகின்றோம்.
1.இதைப் போன்ற துன்ப உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கும்
2.ஆயிரெத்தெட்டு நல்ல குணங்களிலும் படிந்து விடுகின்றது.
3.நம் நல்ல குணங்களின் செயலாக்கங்கள் வலு குறைந்துவிடுகின்றது

நடந்த சம்பவங்களையும் இடைஞ்சல்கள் செய்தவர்களையும் நினைவுப்படுத்தும் பொழுது அந்த உணர்வுகள் மீண்டும் நம்மை இயக்கிக் கொண்டேயிருக்கின்றது.

அவ்வாறு அது இயக்குவதை அடக்குவதற்குத்தான் உங்கள் நல்ல குணங்களுக்குள் மாமமகரிஷிகளின் அருள் சக்தியை இந்த உபதேச வாயிலாக இணைத்து இணைத்துக் கொடுக்கின்றோம்.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
2.ஒவ்வொரு மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தியை
(அகஸ்தியர்.. போகர்.. வான்மீகி.. வியாசகர்.. அத்திரி.. கொங்கணவர்.. பிருகு.. கோலமாமகரிஷி.. காளிங்கநாதர்.. ஈஸ்வரபட்டர்..)
3.எல்லோரையும் உங்கள் நினைவிற்குக் கொண்டு வரச் செய்து
4.உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தச் செய்து
5.அவர்கள் அருள் உணர்வை உங்களுக்குள் ஈர்க்கும்படிச் செய்து
6.உங்கள் உடலிலுள்ள ஆயிரெத்தெட்டு நல்ல குணங்களிலேயும் அதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அவ்வாறு பதியச் செய்த பின் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைத்து உங்கள் நல்ல குணங்களுடன் கலந்த தீமையான உணர்வுகளை அடக்கி தெய்வ குணமாக ஓங்கி வளர்க்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா….! என்று உங்கள் உயிரிடம் வேண்டி அந்த உயர்ந்த குணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply