பல்லி எச்சம் இட்ட உணவை உண்டால் ஏற்படும் தீமைகள்

Polariss

பல்லி எச்சம் இட்ட உணவை உண்டால் ஏற்படும் தீமைகள்

 

வெளியிலே தொழிலுக்குச் செல்கின்றோம். பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம்.

அதை எல்லாம் நாம் அறிந்து அவர்களுக்கு வேண்டிய பக்குவங்களையும் உபாயங்களையும் சொல்கின்றோம். உதவியும் செய்கின்றோம்.

ஆனால் கேட்டறியும் பொழுது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் தான் அதற்கு வேண்டிய உபாயத்தைச் சொல்லுகின்றோம்.

ஆனால் உபாயத்தைச் சொல்லி விட்டு நாம் வந்தாலும் நம் உடலிலே நாம் நுகர்ந்த அந்தத் தீமைகள் வளருகின்றது.

மற்றவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேட்டவுடனே நான் நியாயத்தைச் சொல்கின்றேன் என்று எல்லாவற்றையும் கேட்பீர்கள்.
1.அவர்கள் கஷ்டங்களையும் குறைகளையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
2.நம்மையும் சோர்வடையச் செய்வார்கள்
3.அதை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவுடனே சரியாகச் சாப்பிட முடியாது.

நாம் குறையாகக் கேட்ட உணர்வுகள் என்ன செய்யும்…? அதே இயக்க அணுவாக இரத்தத்தில் மாறும். இரத்தத்தில் மாறியவுடனே உடல் முழுவதற்கும் பரவுகின்றது. நம் உடலில் கெட்ட அணுக்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.

நாம் எதை நுகர்கின்றோமோ நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும் “ஓம் நமச் சிவாய…! ஓம் நமச் சிவாய…!” என்று நம் உயிர் “ஓ..” என்று பிரணவமாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

“ஓ..ம் நமச் சிவாய… சிவாய நம ஓ…ம்” நம் உடலுக்குள் ஆன பின் அவன் இப்படிப் பேசினான். இப்படி இருந்தது. நான் உதவி செய்தேன். இதெல்லாம் நீங்கள் சொல்வீர்கள்.

1.கஷ்டமான நேரத்தில் எல்லாம் நான் ஓடிப் போய் உதவி செய்தேன்
2.கடைசியில் பார்த்தால் எனக்கே இப்பொழுது கஷ்டம் வந்துவிட்டது…! என்பீர்கள்.
3.இது தான் ஓ…ம் நமச் சிவாய… சிவாய நம ஓ…ம்…!

அதாவது நம் உடலில் அந்தக் கஷ்டங்கள் உருவாகி “சிவாய நம ஓம்…!
1.அவன் உடல் நலிந்தது… நம் உடல் நலிகின்றது…!
2.அவன் குணம் குறைந்தது… நம் குணமும் குறைந்தது…!

இந்த உடலில் இருந்து மற்றவர்கள் சொன்ன அதே கஷ்டமான சொல்லைச் சொல்வோம். அதனின் உணர்வு தான் வளர்கின்றது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்றுத் தீமைகளை நீக்கி இன்று தீமை நீக்கும் சக்திகளை வலுவாகப் பெற்றிருக்கின்றோம்.

சக்தி பெற்ற மனிதன் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகள் இருப்பினும் பிறருடைய துயரங்களைக் கேட்டு அவர்களுக்கு உதவி செய்தாலும்
1.அந்தத் துயரம் உங்களுக்குள் வராது தடுக்க
2.நீங்கள் என்ன வைத்து இருக்கின்றீர்கள்…?

எல்லாம் நல்லவர்கள் தான். பேரன்பு உடையவர்கள் தான். ஆனால் வந்த தீமைகளைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்..?

நல்ல சரக்குகளைப் போட்டுச் சுவையான பதார்த்தத்தைச் செய்து வைத்திருக்கின்றோம். காற்றிலே அந்தப் பக்கம் ஒரு விஷத்தை தூவிக் கொண்டு உள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அது வெளியில் வருகின்றது. காற்றலைகள் இழுத்து வருகின்றது. பதார்த்தத்தை மூடவில்லை என்றால் அந்த விஷம் அதற்குள் பட்டு விடுகின்றது.

நான் நன்றாகத்தான் செய்து வைத்தேன் என்று நினைப்பீர்கள். ஆனால் விஷமான காற்று இதற்குள் போகின்றது என்றால் அதைச் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது…!

அதற்கு என்ன செய்வது…?

சாதாரணமாக வீட்டில் பல்லிகள் நிறைய இருக்கிறது. இந்தப் பல்லி மனிதன் மேலே எச்சம் விட்டால் பட்ட இடங்களில் பொரிப் பொரியாகின்றது. தோல் வெந்துவிடுகின்றது.

அதே பல்லியின் எச்சம் ஒரு குழம்பிலேயோ மற்ற சாப்பிடும் பொருளில் பட்டால் அதை நாம் சாப்பிட்டவுடன் நம் குடலுக்குள் புண்ணாகும்.

அதே சமயம் அது இரத்தத்தில் கலந்து செல்லப்படும் போது சில உறுப்புகளிலும் இந்தப் பொரிப் பொரியாக நோயாக உருவாக ஆரம்பித்துவிடும்.
1.நான் ஒன்றுமே செய்யவில்லை.
2.நான் நன்றாகத் தான் இருந்தேன்.
3.எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று தெரியவில்லையே என்றால்
4.இந்த நிலையை யார் செய்தது…?
5.இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான் காரணம்.

ஆனால் இதைப் போன்ற கொடிய விஷத்தை எல்லாம் வென்றது “துருவ நட்சத்திரம்…!” அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

1.உயிரணுவாகத் தோன்றி மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி
2,இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளான்.
3.துருவ நட்சத்திரம் வான் வெளியில் வரும் நஞ்சை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்தைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகரும் வழியைக் காட்டி என் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி ஒளியின் உணர்வாக என்னைப் பெறச் செய்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நீங்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்குள் அதை இணைத்து சந்தர்ப்பத்தால் வரும் எத்தகைய கொடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்.

Leave a Reply