பல புத்தகங்களைப் படித்தவர்கள் எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

Saamigal upadesam

“பல புத்தகங்களைப் படித்தவர்கள்” எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

உபதேசத்தைப் படித்துவிட்டு எனக்கு அர்த்தம் தெரியவில்லையே என்று இருக்கவே வேண்டாம். என்ன சொல்கிறோம் என்று அந்த உணர்வை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே இருந்தால் போதும்.

டேப்பிற்கு (TAPE) ஒன்றுமே தெரியாது. அந்த நாடாவில் முலாம் தான் பூசி இருக்கிறார்கள். நாம் பேசுவதையெல்லாம் பதிவாக்கி விடுகின்றது. ஏனென்றால் அதற்கு வேறு எண்ணம் இல்லை.

வயதில் சிறிய குழந்தைகளுக்கு அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.

ஒரு டேப்பில் பாடல் பாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதை அந்தக் குழந்தைகள் சும்மா கவனித்துக் கொண்டிருந்தால் போதும். அந்தப் பாட்டைக் கவனித்த பின் அதே பாட்டை அதே மெட்டில் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

பெரியவர்கள் ஆயிரம் தரம் கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டில் பாடத் தெரியுமா…? என்றால் தெரியாது…!
1.நாம் பல எண்ணங்களில் இருப்போம்…..
2.கூர்ந்து பதிவாக்கிக் கொள்வதில்லை அது தான் காரணம்…!

அதைப்போல நாம் குழந்தை உள்ளங்களாக இருந்து மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் நமக்குள் அது பதிவாகும்.

பல ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்வது அர்த்தமில்லை என்று எண்ணி
1.படித்த புத்தகங்களில் உள்ள நிலைக்கு ஒப்பிட்டுப் (TALLY பண்ணி) பார்த்தால்
2.யாம் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் இவை எல்லாம் எல்லாவற்றையும் சொல்வார்கள்.

ஆனால் மெய் ஞானத்தின் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஒரு சில விஷயங்களை முழுமையாகவும் சொல்கிறேன்.

இராமாயணமோ மகாபாரதமோ ஏதோ ஒரு பாஷையில் தான் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்.
1.எல்லாவற்றையும் “பாடல்களாகத் தான்” எழுதி வைத்திருக்கிறார்கள்.
2.கதையாக அவர்கள் உரை நடையில் எழுதவில்லை.

“புத்தகத்தைப் படிப்பவர்கள்” அவர்கள் பாடலாகப் பாடியது எல்லாம் தெளிவாக அர்த்தமாகின்றது என்று சொல்கின்றார்களா…? அல்லது அர்த்தமாகவில்லை என்று சொல்கின்றார்களா…! என்று எனக்குத் தெரியவில்லை.

அர்த்தம் தெரிந்து எல்லோரும் வருவதில்லை…..!

ஏனென்றால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பாடம் படிக்கின்றோம் என்றால்
1.நாம் தெரிந்து கொண்டு அங்கே போன பின் நமக்குப் பள்ளியில் அதைச் சொல்லிக் கொடுப்பதில்லை.
2.ஆரம்பப் பள்ளியில் படித்த பிற்பாடு அடுத்த உயர் கல்விக்கு நாம் சென்றாலும்
3.ஆரம்பப் பள்ளியில் படித்த பாடத்தை அங்கே சொல்லிக் கொடுப்பதில்லை.
4.உயர் கல்வியாக இத்தனையும் படித்து முடித்தாலும் அடுத்து…
5.நீ இன்ஜினியருக்குப் படிக்கின்றாயா அல்லது டாக்டருக்குப் போகின்றாயா…? என்று கேட்கின்றார்கள்.
6.படித்ததற்குத் தகுந்த மாதிரி அங்கே தேர்வு வைத்து..
7.நீ இன்ஜினியராகப் போகலாம்… டாக்டராகப் போகலாம்…! என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

அப்படிப் பிரித்த பிற்பாடு மீண்டும் இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர
1.ஏற்கனவே நான் பல புத்தங்களைப் படித்திருக்கிறேன் என்று சொல்லி
2.அதனால் இதை எல்லாம் நான் படிப்பதற்கில்லை என்று இப்படிச் சொன்னால் அந்தப் பாடம் இங்கே ஏறாது.

ஆக படித்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறையப் படித்துவிட்டு வருபவர்கள்…,
1.”என்னமோ…!” இந்தச் சாமி சொல்கிறார்….
2.என்னமோ… “கேட்டுக் கொண்டு போவோம்…! என்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.
3.படித்த நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்படித்தான் வரும்.

தன் வாழ்க்கையில்… இயற்கையில்… அது என்ன நிகழ்கின்றது..? என்ற நிலையைத் தெளிவாகத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் பதிவு செய்து விட்டு அந்த வழியில் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் இருந்தால் இது பதிவாகும். உங்களுக்குள் வளரவும் செய்யும்.

அந்தப் பதிவான நிலைகளை நீங்கள் தியானத்தில் அமர்ந்து எடுத்தால்
1.ஆயிரம் புத்தங்களில் நீங்கள் படித்து விட்டு வந்ததற்கு “விடை…!”
2.உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும். (நிச்சயம் வரும்)

இந்தத் தியானத்தை முறைப்படி எடுத்து நீங்கள் நெறிப்படுத்தி விட்டீர்கள் என்றால் “எல்லாமே அர்த்தம் காண முடியும்…!”

Leave a Reply