இறந்த உடலை வைத்து மருத்துவர்கள் (PRACTICE) கற்றுக் கொள்வது போல் என் உடலுக்குள்ளேயே நேரடியாக இயக்கிக் காட்டி “மெய் ஞானத்தைக் கற்றுக் கொடுத்தார் குருநாதர்…!”

Polaris stars - DIVINE.jpg

இறந்த உடலை வைத்து மருத்துவர்கள் (PRACTICE) கற்றுக் கொள்வது போல் என் உடலுக்குள்ளேயே நேரடியாக இயக்கிக் காட்டி “மெய் ஞானத்தைக் கற்றுக் கொடுத்தார் குருநாதர்…!”

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் என்னைப் (ஞானகுரு) பதினான்கு வருடங்கள் பல காடு மேடெல்லாம் அலையச் செய்து என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை ஊட்டி பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அவை எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போல மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்படுவதைக் காணச் செய்தார். அவர்கள் குடும்பங்களில் நடக்கும் நிலைகளையும் நேரடியாகக் காணும்படிச் செய்தார்.

சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலைகள் பேசிக் கொள்வது… சாபமிட்டுக் கொள்வது… போன்று எத்தனையோ பல உணர்வின் தன்மைகளை நுகரும்படிச் செய்தார்.

அதை நுகர்ந்து சுவாசிக்கப்படும் பொழுது என் உயிரிலே மோதி மோதி அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவர்கள் விஷத்தின் தன்மை என் உடலுக்குள் கலந்து
1.என் நல்ல குணத்தை எப்படிச் செயலாக்காதபடி தடுக்கச் செய்கின்றது…?
2.நல்ல எண்ணங்கள் எப்படியெல்லாம் அது மாறுபடுகின்றது…?
3.கவலையையும் சஞ்சலத்தையும் எப்படி உண்டாக்குகின்றது என்று காட்டினார்.

ஏனென்றால் நாம் எவ்வளவோ திடமானவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டு இருக்கும் போது
1.அவர்கள் வெளிப்படும் உணர்வைக் கூர்மையாக கவனிக்கப்படும் போது
2.அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பதிவாகின்றது
3.அந்த அலைகள் நமக்குள் சுழன்று கொண்டு இருக்கும் போது
4.இரவிலே படுத்திருக்கும் போது அந்த உணர்வுகளைச் சுவாசித்து “திடுக்…!” என்று பயப்படச் செய்வதும்
5.நம்மை அறியாமலே தூங்க விடாமல் எப்படி இயக்குகிறது என்று பார்க்கச் செய்கின்றார் குருநாதர்.

இது எல்லோருக்கும் தான் தெரியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் பார்த்த உணர்வு நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது. அதனின் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அதையே இயக்கித் தன்னிச்சையாக வளரச் செய்து விடுகின்றது. “நோயாகின்றது….!”

நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அந்த குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடல்களில் உள்ள உறுப்புகளின் நிலைகள் அமைந்தது.

ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருகுடல் இருதய வால்வுகள் சிறுமூளை பெருமூளை என்று உடலுக்குள் உள்ள உறுப்புகள் அனைத்துமே
1.நாம் எடுக்கும் உணர்வுகளுக்குத் தக்கவாறு
2,எந்தெந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ – “கடினமாகவோ மிருதுவாகவோ”
3.அதற்குத் தக்கவாறு தான் அந்தந்த உறுப்புகளின் செயலும் இயக்கமும் இருக்கின்றது.

உதாரணமாக டாகடருக்குப் படிப்பவர்கள் பயிற்சிக்காக இறந்த உடலை எடுத்து அதைப் பரீட்சித்துப் பார்த்து அந்தப் படிப்பின் மூலமாக உடல் கூறுகளை நேரடியாகத் தெரிந்து கொள்கின்றனர்.

அதைப் போன்று தான் (மூன்று இலட்சம் பேரின் உணர்வை வைத்து) குருநாதர் என்னையும் அறியும்படிச் செய்தார்.

எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப உடலில் உள்ள உறுப்புகள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை “என் உடலுக்குள்ளேயே… பார்க்கச் செய்தார்…!”

1.நீ எத்தகைய உணர்வைச் சுவாசிக்கின்றாய்…?
2.நீ எண்ணி எடுக்கும் எண்ணங்கள் உன்னுடைய உடல் உறுப்புகளை அது எப்படித் தாக்குகின்றது…?
3.சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் வேகத் துடிப்பு உன் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் சுழன்று வரப்படும் போது உறுப்புகளுக்குள் எப்படி எதிர்மாறாகின்றது…?
4.அதனால் அந்த உறுப்புகள் எப்படி எரிச்சலாகின்றது…? எப்படி உனக்கு வேதனையாகின்றது…? என்று குருநாதர் பார்க்கச் செய்தார்.

இன்றைய மருத்துவ முறைகளில் சிறு நீரில் உள்ள சர்க்கரையைப் பரிசோதித்துப் பார்க்கின்றார்கள். சிறு நீரில் எந்தெந்த அளவுக்குச் சர்க்கரை கலந்து இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி பரிசோதனை செய்யும் பொழுது நிறங்களை மாற்றிக் காண்பிக்கின்றது.

அதே மாதிரித்தான் எனக்குள்ளும் காட்டுகின்றார் குருநாதர்.

உடலின் உறுப்புகள் அது எந்த உணர்வின் சத்து கொண்டு உருவானதோ பிறருடைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
1.அந்த உணர்வுகளைச் சுவாசித்து உடலுக்குள் செல்லும்போது
2.இரத்தமாக மாறி உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி
3.ஏற்கனவே உருவானதற்கும் இப்பொழுது சுவாசிப்பதற்கும் எதிர்மறையாகப்படும் போது
4.அந்த உறுப்புகள் செயலிழந்து எப்படிப் பின்னமாகின்றது…?
5.அதனால் உனக்கு வலி எப்படி வருகின்றது…? என்ற நிலையை
6.என்னையே முன் நிறுத்தி என் உடலின் இயக்கத்தை என்னைப் பார்க்கச் சொல்கின்றார்.

உதாரணமாக… “எக்ஸ்ரே” படங்களில் உள் உறுப்புகளைப் பார்ப்பது போலவும்… “கண்ணாடிகளில்” புற நிலைகளைப் பார்ப்பது போலவும்
1.நீ எடுத்துக் கொண்ட உணர்வின் சக்திகள்
2.அது எவ்வாறெல்லாம் உன் உடலிலே விளைகின்றது…? என்ற நிலையை
3.குருநாதர் ஒவ்வொரு நிலையிலும் அப்படியே காட்டுகின்றார்.

தாவர இன சத்துக்கள் காற்றில் இருக்கக்கூடிய சத்துகளை அது எதையெதைக் கவர்ந்ததோ அதனின் உணர்வின் தன்மைக் கொப்ப அந்த இலைகள் ரூபங்கள் அமைகின்றது.

இதைப் போன்றே தான் நாமும் எந்தெந்தத் தாவர இனத்தின் சத்துக்களை உணவாகவும் உணர்வாகவும் எடுத்துக் கொண்டோமோ அதற்குத்தக்க தான் பரிணாம வளர்ச்சியில் உடல் உறுப்புக்கள் உருவாகி (ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருகுடல் இருதய வால்வுகள் சிறுமூளை பெருமூளை) மனிதனாக வந்தோம் என்ற நிலையையும் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி மனிதனாக உருவாகும்போது எண்ணங்கள் நமக்கு எப்படி உருவாகின்றது..?
2.பல எண்ணத்தின் நிலைகள் வரப்படப்போகும் போது அதனால் தீய விளைவுகள் மனித உடலுக்குள் எப்படி வருகின்றது..?
3.அது நம்மை என்ன செய்கின்றது…?
4.தாவர இனங்களைப் புசித்து உடல் பெற்று வந்தாலும் பிறிதொரு மிருகம் தாக்கப்பட்டு உயிராத்மா பிரிந்த பின் அடுத்த உடல் உருவான நிலையில் தாவர இனச் சத்தில்லாத உணர்ச்சிகள் வரும் பொழுது உடலில் எப்படி புதுப் புது நோய்கள் வருகின்றது…?
5.இதிலிருந்து மனிதன் நீ எப்படி மீள வேண்டும்…?
6.அந்த அருள் ஞானிகள் இதையெல்லாம் கண்டுணர்ந்து தீமைகளை நீக்கும் ஆற்றல்மிக்க சக்தியை எப்படிப் பெற்றார்கள்..?
7.தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்கள்…? என்று குருநாதர் ஒவ்வொன்றையும் வழிப்படுத்திக் காட்டுகின்றார்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாவற்றையும் கண்டு… பார்த்து… உணர்ந்த பின் தான்… உங்களுக்கு யாம் சொல்கிறோம்.

சிறு குழந்தைகளாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் குருநாதர் காட்டிய அந்த உணர்வின் சக்திகளை நான் நினைவு கூர்ந்து பதிவு செய்யப்படும் போது உங்களுக்குள் அது ஞான வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவான உணர்வை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் ஞானிகள் பெற்ற சக்தியை நீங்களும் பரிபூரணமாகப் பெற முடியும்.

இன்ஜினியரோ அல்லது டாக்டரோ அல்லது விவசாயமோ இதைப் போன்று எந்தெந்த நிலைகளில் நாம் கூர்மையாகச் செலுத்துகின்றோமோ அந்தப் பாட நிலைகள் பதிவாகின்றது.

அதன் வழியிலே சீராகச் சென்று கூர்மையாகக் கவனித்திருந்தால் அந்த நிலைக்கொப்ப விஞ்ஞானியாகவோ இன்ஜினியராகவோ டாக்டராகவோ நாம் ஆக முடிகின்றது.

இதைப் போன்று தான் பிறவா நிலைகள் அடைந்த அந்த மெய் ஞானிகள் சென்ற வழிகளில் விண்ணுலக ஆற்றலை நாம் நமக்குள் கூர்மையாக எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் மெய் ஞானியாக ஆகின்றோம்.

இது மனிதனால் சாத்தியமாகக் கூடியது தான். உங்களால் முடியும்…!

Leave a Reply