குழந்தையை வைத்துக் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது குடும்பத்தில் ஒற்றுமையை எப்படிக் கொண்டு வருவது…

Eternal Sages world

குழந்தையை வைத்துக் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது குடும்பத்தில் ஒற்றுமையை எப்படிக் கொண்டு வருவது…?

 

வீட்டில் குழந்தைகளை வைத்துப் பரிபாலணம் செய்யும் பொழுது பார்க்கலாம்.

கணவன் வீட்டில் முக்கியமான ஒரு கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளை “நச்…நச்…” என்று அவரிடம் ஏதாவது செய்தால் போதும்.

பிள்ளையை வளர்ப்பதைப் பார்… ஏன்…? பிள்ளையை உனக்கு அடக்கத் தெரியவில்லையா…? என்று மனைவி மீது சடாரென்று கோபம் வந்துவிடும்.

அந்தக் கோபத்தைப் பாய்ச்சினால் குழந்தையின் தாய் என்ன சொல்லும்…?

சனியனே…! இப்படியே செய்கிறாயே… எனக்கு இரண்டு திட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாயே…! என்று குழந்தையைத் திட்டும்.

கணவன் மனைவி இரண்டு பேர் உணர்வும் சேர்ந்து அந்தக் குழந்தை மேலே தான் கோபமாகப் பாயும். இப்படி வெறுப்பானபின் உணர்வைக் குழந்தை மேல் தான் பாய்ச்சுகின்றோம்.

குழந்தை மேலே பாய்ச்சிய பின் இந்த உணர்வு என்ன செய்கின்றது? குழந்தை அதை உற்றுப் பார்க்கின்றது.

உங்கள் குழந்தைகளைத் திட்டிப் பாருங்கள். உடனே முகம் எப்படி மாறுகின்றது என்று… வெறுப்பான நிலைகளில் இருந்து பாருங்கள் எப்படி ஆகிறது என்று…?

குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. இருந்தாலும் அந்த உணர்ச்சிகளை மாற்றும்.

படிக்கப் போக வேண்டும் என்று அனுப்புகின்றோம். படிக்கவில்லை என்றால் இரண்டு பேருமே இப்படித்தான் சொல்வோம்.
1.குழந்தையை ஏதாவது கவனிக்கிறீர்களா…?
2.அது சும்மா சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று
3.கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இந்தச் சங்கடம் வரும்.

இப்படித்தான் நம் வீட்டில் உண்மையின் உணர்வின் தன்மை கருக்களை மாற்றிவிட்டு வெறுப்பு வளர்ந்துவிடுகின்றது.

குழந்தை மேலே பாசம் நிறைய இருக்கும். “பார்… ஏதாவது கவனிக்கின்றாரா பார்…?” என்று ஒருவருக்கொருவர் இந்த உணர்வு வரும்.

குழந்தை மீது பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் கவனிக்க மாட்டேங்கிறார்களே…, என்ற இந்த உணர்வின் வேகங்கள் என்ன செய்கின்றது…? உடனே வெறுப்பாகின்றது.

அப்போது பையனிடம் கணவர் என்ன சொல்வார்…? ஏன்டா அம்மா “இப்படித் திட்டுகிறது…!” நீ இந்த மாதிரிச் செய்து கொண்டே இருக்கிறாயே… என்று இதைப் பேசுவார்.

அப்போது கணவன் மனைவி இரண்டு பேருமே அந்த ஞானத்தை என்ன செய்கிறோம்…? பாழாக்குகின்றோம்.

ஆறாவது அறிவு என்ன செய்கிறது? உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை உடல் மலமாக மாற்றுகின்றது. தீமைகளை நீக்கி வாழ வழி வகுக்கிறது – இது கார்த்திகேயா.

1.சாக்கடை என்றால் “தீமை” என்று தெரிகிறது.
2.தெரிந்தும் மீண்டும் சாக்கடைக்குள் போனால் என்ன ஆகும்…?
3.சட்டையில் அழுக்கு இருக்கின்றது – அதே அழுக்கு தானே.
4.அதை வைத்துச் சாக்கடையைத் துடைத்து விடலாம் என்றால் சாக்கடை நாற்றம் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் நம்மை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பல நல்ல சரக்குகளை வாங்கி காய்கறி எல்லாம் போட்டுச் சமைத்த பின் கடைசியில் உப்பு கொஞ்சம் அதிகமானால் என்ன ஆகும்…? தூக்கி எறியச் செய்யும்.

காரம் போட்டால் நல்ல ருசியைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் காரத்தைம் அதிகமாகப் போட்டால் சாப்பிட முடியுமா…? கண்ணிலேயும் மூக்கிலேயும் தண்ணீர் வரும்.

சீரகம் போட்டால் நல்ல ருசியாகத் தான் இருக்கும் என்று சீரகத்தை ஜாஸ்தி போட்டால் உமட்டல் தான் வரும்.

எந்தெந்தப் பொருளின் தன்மை அதனின் ருசி எப்படி இருக்கின்றது என்று தெரிந்து கொள்கிறோம்.
1.“கெட்டது என்று எதையும் ஒதுக்குகின்றோமா…?”
2.அந்த அளவுகோல்படி போட்டு நாம் சமப்படுத்திச் சுவையாக ஆக்குகின்றோம் அல்லவா…!

அதைப் போல் தான் பையனிடத்தில் குறைகள் வருகின்றது என்றால் அதை எப்படி மாற்ற வேண்டும்..? எப்படி நீக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த அருள் ஞானத்தைக் கொடுப்பது.

கணவன் மனைவி இரண்டு பேரும் மகரிஷிகளின் அருளைப் பெற்று இருள் சூழும் நிலையைத் துடைத்து விட்டு குழந்தைகளுக்கும் அருள் ஞானத்தை ஊட்ட வேண்டும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் ஓ..ம் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் தீமை நமக்குள் பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

பையனுக்குப் படிப்பு வரவில்லை என்று சொன்னால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.முதலில் சிறிதளவு சென்றதைக் குறைக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.

அவன் கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெறக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்ற அருள் உணர்வுகளை அவனுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அவன் மேலே வரக்கூடிய வெறுப்பை இங்கே இப்படி மாற்றி நமக்குள் அடக்கி விடுகிறோம்.
1.நீ தெளிந்தவனாக வருவாய்…
2.உனக்கு அருள் ஞானம் கிடைக்கும்…
3.நீ தெளிவானவனாக வர வேண்டும். “இது தான் என் ஆசை…!” என்று
4.இப்படி உங்கள் ஆசையை மட்டும் சொல்லுங்கள்.

இப்படியே செய்து கொண்டு இருக்கேயடா…! என்று சொன்னால் வெறுப்பு வரும்.
1.நீ உயர்ந்தவனாக வர வேண்டும்
2.அது தான் என்னுடைய ஆசை… அதன் வழி நிச்சயம் வருவாய்..! என்று சொல்லிப் பாருங்கள்.

உங்கள் ஞானக் குழந்தையாக வளர்வான். குடும்பத்தில் ஒற்றுமை வரும். மகிழ்ந்து வாழ முடியும்.

Leave a Reply