மெய் உலகிற்கு வாடா…! என்று கூப்பிட்டார் குருநாதர்

immortal-bliss

மெய் உலகிற்கு வாடா…! என்று கூப்பிட்டார் குருநாதர்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி அவர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த உணர்வுகள் அவர் உடலிலே உருவாக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அத்தகைய நிலை பெற்ற அவர் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
1.அவர் உணர்வினை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வந்த இருளை அவர் அகற்றியது போன்று
3.நாமும் இருளை அகற்றி மெய் உலகை அடையலாம்.
4.மெய் என்றால் நம் உயிர்.
5.அந்த உலகை அடைய வேண்டும்.

இப்போது நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.

சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?

உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!

ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.

சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!

என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.

ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.

எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.

அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார்.
1.இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…?
2.உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…!
3.இந்த உடலையும் அறிந்தாய்…
4.மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?

வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.

இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும்.
1.இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்.
2.அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?

உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.

வியாபாரத்தைச் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம்.

ஆனால் சந்தோஷமாக இருப்பதில் சிறு குறை வந்து விட்டால் போதும் என்ன வாழ்க்கை இது…? என்று வேதனைகள் படுவோம்.

இந்த உடலை பாதுகாக்க எத்தனையோ வகைகளில் சண்டை இடுவோம். எல்லாம் செய்வோம். ஒரு சொல் தாங்க முடியாமல் “என்ன வாழ்க்கை இது…” என்று தற்கொலை செய்யப் போகிறோம்.

இந்த உடலின் தன்மை நாம் எதை எண்ணுகிறோமோ அதை வளர்த்து விடுகிறது.
1.இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் அதன் வழி நீ செய் என்று தான்
2.உயிர் அந்த உணர்ச்சிகளை இயக்கி நம்மை ஆளுகிறது.

முழுமையான இந்த உடலை நாம் வளர்ச்சியற்ற நிலைகளுக்குக் குறைக்கப்படும் போது குறை உணர்வு சில உயிரினங்களாக நம்மை மாற்றி விடுகிறது என்பதைத் தெளிவாக காட்டுகிறார் குருநாதர்.

மெய் என்றால் உயிர். உயிருடன் ஓன்றிய ஒளியின் தன்மை பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்த மெய்யை நாம் அடைதல் வேண்டும். மெய்யை உணர்த்தும் உணர்வுகளைப் பெறும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை இவ்வாறு உணர்த்துவார்.

1.கடவுளின் அவதாரம் பத்து “கல்கி…!”
2.உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் ஒளியாக மாற வேண்டும்.

Leave a Reply