ஆஹா…! சாமி (ஞானகுரு) சொல்வது “மிகவும் அற்புதம்” என்று போற்றிவிட்டு யாம் சொன்னதைச் செய்யவில்லை என்றால் எந்தப் பலனும் இல்லை

wisdom world

ஆஹா…! சாமி (ஞானகுரு) சொல்வது “மிகவும் அற்புதம்” என்று போற்றிவிட்டு யாம் சொன்னதைச் செய்யவில்லை என்றால் எந்தப் பலனும் இல்லை

 

ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல கோணங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றோம். ஆனால் உபதேசத்தைக் கேட்கும் சிலர்
1.சாமி (ஞானகுரு) சொன்னார்… கேட்டோம்
2.நல்ல விஷயங்களைச் சொன்னார்…! என்று அந்த அளவில் நிறுத்தி விடுகிறார்கள்.

நெற் பயிரை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த இந்த உரங்கள் இட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் வேளையில் இந்தெந்தக் காலங்களில் இதை இதைச் செய்ய வேண்டும் என்று சொன்ன பிற்பாடு…
1.“ஆஹா… பிரமாதமாகச் சொல்லி விட்டார்…!” என்று
2.அதைப் புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்…?

நெல் விளைவதற்கு இன்னென்ன உரம் இட்டால் அது நலமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு
1.“ஆஹா…! எப்படிச் சொன்னார் தெரியுமா…?” என்று மனதில் மட்டும் வைத்து விட்டு…
2.நெல்லுக்கு வேண்டிய உரத்தை இடாது…
3.அந்தந்தக் காலத்திற்கு நீரை விடாது…
4.அந்தந்தக் காலத்தில் களையை நீக்காது விட்டு விட்டால்…
5.நெல் எப்படி வரும்…?

தியானத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்வோர் பலருடைய நிலைகள் இதில் தான் உள்ளது. என்னைப் புகழ்ந்து பேச வேண்டும் என்ற நிலையில்
1.ஆஹா… எங்கள் சாமி அற்புதமாகச் சொல்லுகின்றார்…!
2.அவர் சொல்வதை நான் என்னவென்று சொல்வேன்…!
3.என்ன அழகாகச் சொல்கிறார் என்று போற்றுவார்கள்… புகழ் பாடுவார்கள்…!
4.சாமியை யாராவது தவறாகச் சொன்னால் அவர்களுக்குக் கோபமும் வரும்…!
5.சாமி இப்படித்தான் சொன்னார்… உனக்கென்ன தெரியும்…! என்று சண்டையும் போடுவார்கள்…!

ஆனால் யாம் கொடுக்கும் உபதேசத்திற்குள் இருக்கும் மெய்ப் பொருளைக் காணாத நிலையில் நமக்கு நாமே நல்ல உணர்வின் தன்மையை மறைத்து விடுகின்றோம்.

இது தான் உண்மை.

மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் பேரானந்த நிலை பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் 20 வருடம் தவம் இருந்து அந்த உண்மையை உணர்ந்து கொண்டோம்.

மகரிஷிகள் கண்டுணர்ந்த அந்த மெய்ப் பொருளை நீங்கள் காணும் வண்ணம் அதனை விளைவித்து அருள் ஞான வித்தாக ஒவ்வொரு கால கட்டத்திலும் விதைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அந்தக் காலமறிந்து பருவமறிந்து வரும் தீமைகளை அகற்றி எப்படி வளர வேண்டும் என்ற நிலைகளை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே இருந்தாலும் நீங்கள் எத்தனை பேர் அதைப் பெற்று வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

நமக்குள் கடவுளாக வீற்றிருந்து உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசன்
1.நாம் எண்ணியதை எல்லாம் இறையாக்கி
2.நாம் எண்ணியதை நமக்குள் உருப் பெறச் செய்து
3.எதை இறையாக்கினோமோ அதனின் செயல் தெய்வமாகச் செயலாக்குகின்றது.

எனவே நாம் எதை எண்ண வேண்டும்…? எதனின் உணர்வின் தன்மையை நமக்குள் செயலாக்க வேண்டும்…? என்பதைத் தெளிவுற எடுத்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை அனுபவ ரீதியாகப் யாம் பெற்றுணர்ந்ததை உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்து அதைப் பெறும் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு மகிழ்ச்சி பெறும் நிலைகளாக மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் எண்ணத்தால் உங்களுக்குள் உருப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதன் துணை கொண்டு
1.தீமையான நிலைகளைக் குறைத்து
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் வளர்ந்து
5.மெய் ஞானத்தின் நிலைகள் வளர்ந்து
5.மெய் ஞானிகளுடன் ஒன்றி
6.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
7.பிறவா நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலையை அடைவது தான் அற்புதம்…!

Leave a Reply