விண்ணின் ஆற்றலைக் கற்றுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்

agastiyar
விண்ணின் ஆற்றலைக் கற்றுணர்ந்த “முதல் மனிதன் அகஸ்தியன்”

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைப் பருகக் கற்றுக் கொண்டான். இது அவனின் சந்தர்ப்பம் தான்.

அது எப்படி அவனுக்குக் கிடைத்தது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காடுகளில் விஷத் தன்மை கொண்ட எத்தனையோ உயிர் இனங்கள் அதனதன் வாழ்க்கைக்காக தன் இரையைத் தேடி வருகின்றது.

அதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள்
1.அந்த உயிரினங்களுக்கு எதிர் மறையான பல தாவர இனச் சத்தை அரைத்துத்
2.தங்கள் உடலிலே முலாமாகப் பூசிக் கொண்டார்கள்.
3.மின்னலத் தணியச் செய்யும் வேர்களையும் விழுதுகளையும்
4.தங்களைக் காப்பதற்காக அணிகலன்களாக அணிந்து கொண்டார்கள்.

முலாமகப் பூசிய இவர்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த மணங்களை நுகர்ந்தறியும் புலியோ பாம்போ தேளோ கொசுவோ விஷம் கொண்ட மற்ற உயிர் இனங்களோ எதுவும் இவர்களை அணுகுவதில்லை. விலகிச் சென்று விடுகின்றன.

இப்படித் தனக்குள் பூசிய முலாம்களின் வாசனைகள் தன் உடலில் இருந்து வருவதை அகஸ்தியனுடைய தாயும் சுவாசிக்கின்றது. அப்பொழுது கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு (அகஸ்தியனுக்கும்) இது இரத்தத்தின் வழி கூடி சிறுகச் சிறுக சேர்ந்து விடுகின்றது.

அன்று சூரியனைத் தான் கடவுளாக அவர்கள் வழிபட்டு வந்தனர்.

ஏனென்றால் இருளில் இருந்து ஒளி காட்டி வரும் அந்தச் சூரியனை அடிக்கடி உற்றுப் பார்த்து “கடவுள்…” என்று சூரியனை வணங்கி வந்த காலம் அது.

அப்போது தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏங்கும் பொழுது சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் இவருக்குள் விளைகின்றது.

அதே சமயத்தில் “அல்ட்ரா வயலெட்” என்ற நஞ்சை அது உமிழ்த்தும் போது இவர் உடலிலுள்ள நஞ்சும் இதனுடைய உணர்வின் மணங்களும் கலக்கப்படுகின்றது.

இவ்வாறு சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற இந்த விஷத் தன்மையும் தாய் கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

இது எல்லாம் அகஸ்தியன் உடலிலே இரண்டறக் கலந்து பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்த பின் பாம்பு பயப்படுகின்றது. புலி பயப்படுகின்றது. கொசு மற்ற பூச்சிகள் அனைத்தும் விலகி ஓடுகின்றது.

அப்பொழுது அந்தக் குழந்தையை அவர்கள் தாய் தகப்பனார் இது கடவுள் கொடுத்த பிள்ளை – கடவுளின் அவதாரம் என்று போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

இன்றும் நாம் பாம்பிடம் ஒரு வேரைக் காண்பித்தோம் என்றால் ஓடிப் போய் விடும். சில செடியின் இலைகளைப் போட்டோம் என்றால் கொசுக்கள் வராது.

எரி பூச்சி என்று சொல்வார்கள். அது நம் மேலே பட்டால் சூடு போட்ட மாதிரி ஆகிவிடும். அதற்கு இந்த இலையைப் போட்டோம் என்றால் அது போய்விடும். பார்க்கலாம் நீங்கள்…!

இந்த மாதிரித் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் அன்று நுகர்ந்த உணர்வுகளே
2.கருவிலே இருக்கக்கூடிய அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிட்டது.

ஆகவே அகஸ்தியன் தெரிந்து வரவில்லை.

தாய் கருவிலேயே நஞ்சை அடக்கிடும் ஆற்றல்களைப் பெற்றதால்தான் ஐந்து வயதில் துருவத்தின் வழியாக நம் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்றான்.

அவனின் வளர்ச்சியில் 27 நட்சத்திரங்கள் பிற அண்டங்களிலிருந்து கவரும் ஆற்றல்களைத் தன் கதிரியக்கச் சக்தியால் பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதையெல்லாம் ஆற்றல்மிக்க சக்திகளாக… “விஷத்தை ஒளியாக மாற்றிடும்” அணுக்களாகத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்

தனது பதினாறாவது வயதில் திருமணமாகி தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்து துருவ மகரிஷியானான். துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வட துருவத்தில் எல்லையாக நிலை கொண்டுள்ளான்.

1.தன்னை அறிந்தான்
2.விண்ணை அறிந்தான்
3.விண்ணிலே ஒளி நட்சத்திரமாக என்றும் பதினாறாக ஏகாந்தமாக வாழ்கின்றான்.

ஏனென்றால் ஆதியிலே அந்தச் சந்தர்ப்பம் முதல் மனிதனான அகஸ்தியனுக்கு எப்படியெல்லாம் சக்தி கிடைத்தது என்று தெளிவாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனான நாம் வாழ்க்கையில் வரும் தீமையை அகற்றத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிவரும் உணர்வலைகளை நாம் நுகரப் பழக வேண்டும்.

நம் உடலில் அந்த ஒளியான அணுக்கள் பெருகப் பெருக அகஸ்தியன் நஞ்சை நீக்கி ஒளியாக ஆன அந்த நிலையை நாமும் அடைய முடியும்.

Leave a Reply