பெரிய பெரிய கோவில்களுக்கு அருகில் சிலர் “ஆண்டவன் எனக்கு நேரடியாகச் சொல்கிறான்…” என்று ஜோதிடம் மந்திரம் யந்திரம் செய்கின்றார்கள் – அதனின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

mantra

பெரிய பெரிய கோவில்களுக்கு அருகில் சிலர் “ஆண்டவன் எனக்கு நேரடியாகச் சொல்கிறான்…” என்று ஜோதிடம் மந்திரம் யந்திரம் செய்கின்றார்கள் – அதனின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

 

 

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான் என்று சொல்வார்கள்.

 

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

 

ஜோசியங்களை சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது. அப்படி நடக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

 

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

 

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது என்று சில வேலைகளைச் செய்வார்.

 

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

 

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

 

காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.

1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.

2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

 

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

 

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

 

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இதே மாதிரி கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

 

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

 

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

 

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

 

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

 

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

 

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

 

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

 

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

 

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்?

 

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

 

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

 

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால்  கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

 

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

 

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால் ஜோசியம் ஜாதகம் மந்திரம், தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று ஏகப்பட்டது இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

 

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

 

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்?

 

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

 

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவம் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

 

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

 

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

 

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி

1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டுத்

2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

 

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி பழனி ஆனாலும் சரி திருப்பதி ஆனாலும் சரி இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

 

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி- அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

 

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று வைத்த சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

 

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

 

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

 

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

 

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

 

1.உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து

2.அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து

3.ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

 

நாம் எந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று அந்த ஆலயத்தில் ஞானிகள் சிலையை வைத்தார்களோ அந்தக் குணத்தை நாம் பெறுவதற்குண்டான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

 

நமது பக்தி எதுவாக இருக்க வேண்டும்?

 

1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்.

2.தெய்வீகப் பண்புகளையும் தெய்வீக அருளையும் நாங்கள் பெற வேண்டும்.

3.இங்கே வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்

4.ஆலயம் வரும் குடும்பங்கள் அனைத்தும் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்ற

5.இந்த எண்ணத்தில் தான் நாம் இருத்தல் வேண்டும்.

Leave a Reply