நல்லது நடக்கவில்லை என்றால் “என் தலைவிதி…!” என்று ஜாதகம் ஜோசியம் பார்க்கின்றோம் – நல்லது வருகின்றதா…?

horoscopes - astro

நல்லது நடக்கவில்லை என்றால் “என் தலைவிதி…!” என்று ஜாதகம் ஜோசியம் பார்க்கின்றோம் – நல்லது வருகின்றதா…? 

இந்த மனித உணர்வில் உணர்வின் இச்சைதான் வருகின்றதே தவிர மனிதன் என்ற நிலையில் ஆறாவது அறிவான கார்த்திகேயா என்ற நிலையை இழந்தே இருக்கின்றோம்.

அதை மாற்றியமைப்பதற்கு அந்த ஞானிகள் கண்ட உண்மையை மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்று காட்டினார்கள்.

கோயிலுக்குப் போய் நாம் என்ன செய்றோம்.?

வாதாபி கணபதி செல்வ இராஜ கணபதி என்ற நிலையைச் சொல்லி அவருக்கு அர்ச்சனை செய்தால் அபிஷேகம் செய்தால் அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று எண்ணுகிறோம்.

அவர் காப்பாற்றவில்லை என்றால் கடைசியில் என்ன சொல்கிறோம்.

1.எல்லா தெய்வத்திற்கும் நான் அர்ச்சனை செய்தேன் அபிஷேகம் செய்தேன்.
2.ஆனால் “என் தலைவிதி… என்னை விடவில்லை…!” என்பார்கள்
3.இப்படி இந்த விதிக்குத்தான் வருகின்றார்கள்.

ஜாதகம் பார்த்து ஜோசியம் பார்த்துக் கல்யாணத்தைச் செய்வார்கள். நல்ல நேரம் எல்லாம் பார்த்துச் செய்து நன்றாக வருவார்கள்.

கல்யாணாமாகி இங்கே வந்தவுடன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதற்கு என்ன சொல்வார்கள். “என் தலைவிதி… இப்படி ஆகி விட்டது…!” என்பார்கள்.

ஜோசியமும் ஜாதகமும் எதற்காகப் பார்க்கிறார்கள்…?

1.தலைவிதிப்படி நல்ல நிலையைக் கொடுக்கட்டும்.
3.நல்ல ஒழுக்கங்களைக் கொடுக்கட்டும்.
4.ஞானிகள் உணர்வுகள் வளரட்டும்.
5.நாங்கள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ வேண்டும்
6.நளாயினி சாவித்திரி போன்று நாங்கள்  வாழ வேண்டும்.
7.எங்கள் அன்னை தந்தை அருள் பெறவேண்டும் என்று
8.காலையில் எழுந்ததும் கணவனும் மனைவியும் இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
9.இந்த ஜாதகம் எப்படித் திரும்புகிறது என்று பார்க்கலாம்.

மாப்பிள்ளை வருவான். பெண் பார்க்கச் சென்றால் செவ்வாய் தோஷம் நாக தோஷம் அந்தத் தோஷம் என்று சொல்லிவிடுவார்கள்.

பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம். மாப்பிள்ளைக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால் தான் இரண்டும் ஒத்துக் கொள்ளும் என்பார்கள்.

இப்படி ஜாதகம் பார்த்து சாஸ்திரம் பார்த்துச் செய்யும் எத்தனை கல்யாணம் சரியாக இருக்கிறது…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

அன்னை தந்தையரின் உணர்வின் தன்மையும் அந்த அகஸ்தியனின் உணர்வுகளும் நமக்குள் இருந்தால் “குரு…” என்ற நிலைகள் வருகின்றது.

நஞ்சை வென்று ஒளி நிலை பெற்றவன் அகஸ்தியன்.  அகஸ்தியன் தான் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணினால்
1.அந்தக் குருவின் பார்வை இருந்தால்
2.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிவிடலாம்.
3.சாஸ்திர விதிப்படி இதைச் சொல்லி இருந்தாலும் இதை எவரும் பின்பற்றுவதில்லை.
மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலுக்கே தான் ஜாதகம் பார்க்கின்றார்கள்.

சூரியனுக்கு உண்டு ஜாதகம். சனிக்கு உண்டு ஜாதகம். எல்லாக் கோள்களுக்கும் உண்டு. தாவர இனங்களுக்கு உண்டு. மிருகங்களுக்கு உண்டு.

ஆனால் மனிதனுக்கு ஜாதகம் இல்லை. உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றிக் கொள்ளும் நிலை பெற்றவன் மனிதன்.

அப்படி ஒளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

ஜாதக விதிப்படி நாம் என்ன செய்கின்றோம்.  எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ
1.நோய் வரப்படும் பொழுது
2.இன்ன வக்ரமத்தில் இருந்ததால் இந்த மாதிரி வருகிறது என்பார்கள்.
3.ஜாதகப் பிரகாரம் வக்ரபுத்தி வரப்படும் பொழுது பையன் இப்படித் தான் நடந்து கொள்வான் என்பார்கள்.
4.அதன் உணர்வே இங்கே நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

வரும் தீமைகளை நீக்க அந்த ஞானிகள் காட்டிய வழிப்படி அகஸ்தியனின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொள்ளாமல் தவறைத்தான் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆசை என்று வரும் பொழுது எது வளர்கின்றதோ அதைத்தான் நாம் தேடிக் கொண்டுள்ளோம். ஜோசியரிடம் போகும் பொழுது அதை எண்ணித்தான் கேட்போம்.

அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்.

உங்களுக்கு அந்தத் தெய்வத்தின் குறை இருக்கிறது. இந்தத் தெய்வத்தின் குறை இருக்கிறது என்று சொல்வார்கள். பரிகாரம் செய்தால் தான் சரியாகும் என்பார்கள்.

சாந்தி செய்வதற்கு இவ்வளவு பணம் செலவாகும் என்பார்கள். செய்ததும் நிவர்த்தியாகின்றது. மறுபடியும் அவர்களைத் தேடிச் செல்லும் பொழுது என்ன சொல்கிறார்கள்?

உங்களுக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்கள் தோஷம் செய்து விட்டார்கள். அந்தத் தோஷத்தையெல்லாம் கழிக்க வேண்டும். அதற்கு இவ்வளவு செலவாகும் என்று காசை வாங்கிக் கொள்வார்கள்.

தோஷம் நீங்குகின்து.

வாழ்க்கையில் வரும் சிக்கல்களை அவர்கள் தோஷம் என்று சொல்லி அதை ஒட்ட வைத்துவிடுகின்றார்கள். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவான பின் நாம் என்ன நினைக்கின்றோம்?

ஜோசியக்காரன் தோஷம் இருக்கின்றது என்று மிகவும் சரியாகச் சொன்னான். தெய்வக் குறை இருக்கிறது என்று அதையும் சொன்னான் இதைத்தான் வளர்க்க முடிகின்றது.

மறுபடியும் அதையெல்லாம் நிவர்த்திப்பதற்காகச் சாந்தி செய்து விடு என்று சொல்கின்றான். இப்படித்தான் சொல்லிக் கொண்டே இருப்போம்

ஆக நல்லது தேடி வருகின்றதா…?

கோயிலுக்குச் சென்றும் நாம் எப்படி வணங்க வேண்டும் என்ற நிலை ஞானிகளால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்மைச் சுத்தப்படுத்தும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள்.

அந்தத் தத்துவப் பிரகாரம் அன்னை தந்தை அருளை நாங்கள் பெறவேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் இந்த ஆலயம் வருவோர் குடும்பம் எல்லாம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடுத்தபடியாக காலையிலிருந்து எத்தனை பேரைச் சந்தித்தோமோ
1.அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று
2.அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்களுக்குள் ஒன்று பட்டு வாழும் தன்மை பெறவேண்டும்.
4.உலக மக்கள் எல்லோருமே அருள் வழி வாழவேண்டும் என்று
5.எல்லோரும் அந்த ஆலயத்தில் சொன்னால் எப்படி இருக்கும்.

எல்லோருடைய பகைமையையும் மறக்கச் செய்கின்றது. இதன் வழி செய்து வந்தால் நாம் தெய்வமாகின்றோம்.

நாம் நல்ல மனம் கொண்டு இருந்தாலும் ஒருவர் நம்மை வேதனைப்படச் செய்தால் வேதனையான உணர்வுகள் வளரப்படும் பொழுது
1.உடலில் நோயாகின்றது.
2.உடலில் நல்ல உறுப்புகளை மாற்றுகின்றது.
3.நல்ல செயல்களைச் செய்யும் அந்தத் தெய்வ குணம் அழிந்து விடுகின்றது.

இந்தத் தெய்வத்தைக் காக்க… “நீ என்ன செய்யப் போகின்றாய்…?” என்று காட்டுவதற்காகத்தான் கோயிலில் நல்ல தெய்வச் சிலைகளை வைத்துள்ளார்கள்.

தெய்வத்திற்கு வைர கிரீடம் தங்க ஆபரணங்கள் மலர் மாலைகள் கனிகள் எல்லாமே போட்டு வைக்கின்றார்கள். இதையெல்லாம் திரையிட்டு மூடி நம்மை எதைப் பெறச் செய்கின்றனர்?

திரையை நீக்கி தீப ஆராதனை காட்டும்பொழுது தெய்வமும் அங்கிருக்கும் அனைத்துப் பொருள்களும் தெரிகின்றது. தெரியும் பொழுது
1.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் எல்லோரும் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
3.அந்தச் சக்திகளை சுவாசிக்கும்படிச் சொல்கிறார்கள்.

(திடீரென்று) கணவர் ரொம்பத் திட்டுகிறார் என்றால் என் கணவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று மனைவி எண்ண வேண்டும்.

அதே போல் என் மனைவிக்குக் கோபம் வருகிறது. அடிக்கடி என்னிடம் சண்டை போடுகிறது என்று சொல்லுகின்றோம். என் மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். அந்தப் பேரருளைப் பெறவேண்டும். அந்தத் தெய்வீகப் பண்பை நாங்கள் பெறவேண்டும். இந்த மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று மனைவி கணவனுக்காகவும் கணவர் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எண்ண வேண்டும்.

இதைப்போல எடுத்து இந்த ஆலயத்திற்கு வருவோருக்கெல்லாம் எடுத்து எண்ணி இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த வினையை எடுக்கும்படிச் செய்கின்றார்கள் ஞானிகள்.

கோயிலில் போய் நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நானும் சொல்கிறேன். நீங்களும் சொல்லுகின்றீர்கள். இது தான் பக்தி என்பது.

ஆலயத்திற்குச் சென்று இந்தத் தெய்வீக தன்மை பெற வேண்டும்.
தெய்வீகப் பண்பை பெற வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடமெல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி படர வேண்டும். என்னிடம் தொழில் செய்கின்றவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்.

நாங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் நலமாக ஆக வேண்டும். இப்படிச் செய்து வந்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். உங்கள் சொல் செயல் மூச்சு அனைத்தும் புனிதமாகும்.

நாம் யாரிடமும் சென்று ஆலோசனை கேட்கவேண்டியதில்லை. காசு கொடுத்து விலைக்கு வாங்க வேண்டியதில்லை.

நம் எண்ணத்தால் அந்தச் சக்திகளைப் பற்று நமக்கு வரும் தீமைகளை நாமே போக்கிக் கொள்ள முடியும். அதற்குண்டான் இடமாகத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள் ஞானிகள்.

Leave a Reply