கந்தர் சஷ்டி – சஷ்டி விரதம் – கந்தவேள்

கந்தர் சஷ்டி – சஷ்டி விரதம் – கந்தவேள்

 

இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

 

1.பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு

2.அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து

3.எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை – அதைத்தான்

4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

 

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

 

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

 

நம் வாழ்க்கையில் யார் எதிரிகளாக இருந்தாலும்

1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் வளம் பெறவேண்டும்

3.அருள் ஞானியின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்

4.அவர்கள் நல்ல ஒழுக்கங்கள் பெறவேண்டும்

5.நல் நிலைகள் அடைய வேண்டும்

6.எங்கள் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்

7.எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்று இந்த உணர்வினை எண்ணி

8.பகைமை உணர்வுகள் எதுவும் நமக்குள் வராதபடி வளராதபடி கந்த சஷ்டி

9.சம்ஹாரம் செய்ய வேண்டும்

 

ஆக அன்றைய நாள் இவ்வாறு எண்ணுவது தான் உண்மையான விரதம்.

 

தீமைகளை எண்ணாது நாம் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அந்த அனைத்துக் குடும்பங்களும் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

இதை ஒவ்வொருவரும் எண்ணும்படி செய்வதற்கே கந்தர் சஷ்டி என்று இத்தகைய விழாக்களை அன்று ஏற்படுத்தினார்கள் ஞானிகள்

 

தீயவன் சாபமிட்டால் உடனடியாக வேலை செய்யும் அதை நாம் நுகராது அருள் சக்திகளைக் கவர்ந்து பாதுகாப்பு அரணாக அமைத்திடல் வேண்டும்

 

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

 

சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

 

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

 

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

 

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

 

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

 

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

 

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

 

இப்படிச் சாபமிடுகிறான்…! அவன் என்ன சொல்கிறான்… எதற்காக அப்படிச் சொல்கிறான்…? என்று அவனைப் பற்றி அவன் உணர்வுகளை நுகரக் கூடாது.

 

1.அவன் சொல்லும் நிலை நமக்குத் தேவையில்லை..,

2.அவன் உண்மையை உணரட்டும்

3.நிச்சயம் உணர்வான் என்று அதை விட்டுவிட வேண்டும்.

 

எது வந்தாலும் உடனடியாக “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

 

இதைச் சேர்க்கச் சேர்க்க மற்ற உணர்வுகள் சிறுத்துவிடும். அதனின் இயக்கமும் செயலிழந்துவிடும். தீமைகளை அகற்றும் பழக்கம் வந்துவிடும்.

 

அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் தீமைகளப் பற்றற்றதாக்கிட முடியும். தீமைகள் அருகில் வராதபடி நம் ஈர்ப்புக்குள் புகாதபடி “பாதுகாப்பு அரணாக” அமைக்க முடியும்.

 

குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து கூட்டாகத் தியானமிருந்து அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்று வலுப்படுத்துதல் வேண்டும்.

 

செய்து பாருங்கள்.

Leave a Reply