ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொன்னாலே “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

lord-eswarar

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொன்னாலே… “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரிடம் வேண்டுகின்றோம். நம் குருநாதர் பெயரும் அதுவாகும்.

அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி குருவின் நினைவைக் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெற்றார். ஆகையினால்

1.ஈஸ்வரா குருதேவா என்றால் அவர் பெயரும் “ஈஸ்வரா…” என்று வருகின்றது.
2.எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
3.”ஈஸ்வரா குருதேவா…” என்று என் உயிரை எண்ணினாலும்
4.குருவை எண்ணியது போன்று தான்.

எனக்குள் (அவர்) இருந்து குருவாக இருந்தும் அந்த உணர்வின் தன்மை படைக்கப்படும் போது அந்த (உயிர்) குருவாகின்றது.

“ஈஸ்வரா குருதேவா” என்பது உயிர் ஈசனாக இருந்து இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

1.உருவாக்கும் அந்த ஈசனுடன் ஒன்றி
2.இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று
3.நாம் குருவாக… உலகத்திற்கு வழிகாட்டியாக… வளர வேண்டும்.

நாம் இடும் மூச்சலைகள் பிறருடைய துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாக வரவேண்டும்.

நாம் சொல்லும் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி இன்பமான நிலைகளை உருவாக்கி மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.

1.அவருக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
2.உணர்வின் ஒளிச் சுடராகப் பெறும் அந்த தகுதியை
3.நாம் பெறச் செய்ய வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் எனக்குள் பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அது எனக்குள் சேராதவண்ணம் தடுக்க மெய் ஒளியின் தன்மையை உனக்குள் எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

அந்த உணர்வின் எண்ண அலைகளை எனக்குள் ஆழமாகப் பதியச் செய்தார். அவரைப் பின் தொடர்ந்து பதிவான உணர்வுகளை நான் நினைக்கப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைகின்றது.

அவர் எனக்குள் படைத்த அந்த அருள் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் வித்தாகப் பதிவாக்கவே இதை உபதேசிக்கின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் இனமான சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல யாம் பதிவாக்கும் ஞான வித்துக்களை வளர்த்து அந்த மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த அருள் ஞான வித்தால் நாம் எல்லோரும் அந்த நிலைகள் பெறுவோமேயானால் விஞ்ஞான அறிவின் அழிவிலிருந்து நாம் மீண்டு மெய் ஞானியின் நிலைகளுக்கு நாம் செல்வோம்.

எதுவாக இருந்தாலும் இயற்கையினுடைய நிலைகள் இனம் இனத்துடன் தான் சேரும்.

1.மெய்ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும்போது
2.அந்த இனத்துடன் இணைந்து அந்த ஆற்றலைப் பெற்று வளர்ந்து
3.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.
4.அந்த நிலையில் செல்வதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

குருநாதர் அருளிய ஆற்றல் மிக்க அந்த சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. “நம் அனைவருக்குமே சொந்தம்…” ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஒன்றுடன் ஒன்று ஒன்றித்தான் இணைந்து செயல்படுகின்றது.

சிறு துளியாக மழை பெய்தால் பூமிக்குள் அது ஈர்க்கப்படுகின்றது. மறைந்துவிடுகின்றது.

ஆனால் பெருந்துளியாக மழை பெய்யும்போது என்ன செய்கின்றது? அங்கு இருக்கக்கூடிய நிலைகள் பெரும் வெள்ளமாகப் பெருகி வலுக் கொண்டதாகி எல்லாவற்றையும் இழுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

இதைப் போல நாம் அனைவரும் மெய் வழியில் ஒரே உணர்வாக ஆற்றல் மிக்க மெய் ஞானியின் உணர்வை “ஓ…ம் ஈஸ்வரா…” என்று எண்ணி நமக்குள் எடுக்கும்போது பெரும் வெள்ளமாகத் திகழ்கின்றது.

நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் துன்பங்களையும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளையும் மாய்த்து மெய் ஞானியின் அருள் ஒளியில் அருள் வெள்ளமாக நாம் சென்றடைய முடியும்.

மெய் வழியில் மெய் ஒளியின் தன்மை பெறும்
1.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற முடியும்.
2.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
3.நமக்குள் அத்தகைய ஆற்றல்கள் உண்டு.

அந்தச் சக்தியின் துணை கொண்டு இந்த மனித உடலிலிருந்து தான் இந்த மகா ஞானிகள் உணர்த்திய உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

இது எல்லோருக்கும் சாத்தியமானது தான்.

Leave a Reply