பணத்தையோ பொருள்களையோ பற்றி எல்லாக் கணக்குகளையும் பார்க்கின்றோம் – இந்த மனித வாழ்க்கைக்கு நமக்கு வேண்டிய நல்லதைப் பற்றிய கணக்கைக் கொஞ்சமாவது பார்க்கின்றோமா…?
அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் அது நல்லதாக வேண்டும் என்று எத்தனை தடவை எண்ணி அதைச் சுவாசிக்கின்றோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
என் வாழ்க்கையில் எப்பொழுதும் நல்லது நடக்காது என்ற எண்ணத்தில் சில பேர் இருப்பார்கள். காரியத்தைத் தொடங்கும் பொழுதே இது எங்கே நடக்கப் போகிறது என்ற இரண்டு உணர்வாக எண்ணுவார்கள்.
எண்ணியது நடக்கவில்லை. ஆகவே அது நடக்காது என்ற எண்ணத்திலேயே போய்க் கொண்டிருப்பார்கள்.
அதே மாதிரி உடலில் வலியோ அல்லது நோயோ வந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நோய் நீங்க வேண்டும் வலி நீங்க வேண்டும் என்று எத்தனை தடவை எண்ணுகின்றோம்? வலியாக இருக்கிறது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! ஒரே இம்சையாக இருக்கின்றது…! என்று எத்தனை தடவை எண்ணிச் சுவாசிக்கின்றோம்?
இந்தக் கணக்கை நாம் பார்க்கின்றோமா…? பணமோ பொருளோ அதையெல்லாம் நாம் கணக்கு சீராகப் பார்ப்போம்.
ஆனால் நம் ஆன்மாவில் நம் மனதில் நம் உடலில் ஒவ்வொரு நாளும் நல்லதை எத்தனை தடவை எண்ணிச் சுவாசிக்கின்றோம்? கெட்டதை எண்ணி எத்தனை தடவை சுவாசிக்கின்றோம்? இந்தக் கணக்கைப் பார்ப்பதில்லை.
கெட்டது நடந்தாலும் தீமைகள் வந்தாலும் அதைப் பற்றி எண்ணினால் எத்தனை தடவை எண்ணினாலும் அது நன்மை பயக்கப் போவதில்லை.
ஆனால் கெட்டது வந்ததும் அல்லது தீமையானதும் கணக்கை மாற்றி… சரி இந்த மாதிரி ஆகிவிட்டது. அடுத்து
1.இதை எப்படி நல்லதாக்குவது?
2.இது மாதிரித் திரும்ப வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
3.இந்த இழப்பை நல்லபடியாக எப்படிச் சரிக் கட்டலாம்?
4.இதனால் நமக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு.. அதை எப்படியாவது சீராக்க வேண்டும் என்று
5.இந்தச் சிந்தனையை… இந்த எண்ணத்தை… இந்தக் கணக்கைக் கூட்டினால்
6.இது எல்லாமே நல்ல கணக்காக… நல்ல எண்ணமாக… நல்ல செயலாக… நல்ல அனுபவமாக… அமையும்.
இத்தகைய வலுவான எண்ணமும் மன பலமும் கிடைக்க வேண்டும் அதை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்வது.
மகரிஷிகள் என்னிடம் சொன்னது:-
நீ நல்லது நடந்ததை எங்களிடம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் கெட்டது நடந்தால் அடுத்த கணமே அதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.
அப்படி நீ தெரியப்படுத்தினாய் என்றால் அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும்? எப்படி அதை நல்லதாக்க வேண்டும்? சீராக்கும் நிலையாக என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியும் என்ற அத்தனை உபாயங்களையும் ஆற்றல்களையும் சக்திகளையும் நாங்கள் உனக்குக் காட்டுவோம். அதை நீ பெறக் கூடிய தகுதியையும் உருவாக்குவோம்.
உன் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
உன்னுடைய சக்தியும் கூடும் ஞானமும் கூடும் ஆற்றலும் கூடும். விண்ணின் ஆற்றல்களை இந்த மனித உடலில் பெற்று தெளிந்து வாழலாம். வேதனை உனக்கு வராது. என்றென்றும் நீ ஏகாந்தமாக இருப்பாய். மகரிஷிகளுடன் என்றுமே ஒன்றி வாழ முடியும் என்று தெளிவாக்குகின்றார்கள்.
இது என்னுடைய அனுபவம்.
1.நடப்பதெல்லாம் நன்மைக்கே
2.நடப்பது அனைத்தையும் நன்மையாக்க முடியும்
3.இனி எது நடந்தாலும் அதை நல்லதாக்க முடியும்…!
மகரிஷிகள் கொடுக்கும் “அருள் வாக்கு…” இது.