நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும்

Consciousness Creates Reality

நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும் 

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால் அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை.

1.பக்தி மார்க்கத்தில் காட்டிய வழிப்படியோ
2.மதங்கள் காட்டிய முறைப்படியோ
3.தனித்த ஒரு மனிதன் கடும் ஜபம் இருந்தாலும்
4.நிச்சயம் விண்வெளி செல்ல முடியாது.

எடுத்துக் கொண்ட ஜபம் ஓங்கி வளர்ந்திருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த ஜபம் எடுத்தோமோ அதே ஜபத்தை வேறு யாராவது செய்தால் நம் உயிரான்மா அங்கே ஈர்க்கப்பட்டு அவருக்குள் போய்விடுவோம்.

அங்கே சென்றபின் இரண்டு மனிதனாக சக்தி வாய்ந்தவராக ஆகலாம்.  ஆனால் அவ்வாறு சென்றாலும் அதனின் துணை கொண்டு பிறருடைய துயர் துடைக்க உதவும்.

பிறருடைய உடலில் உள்ள துயரங்கள் விளைந்த உணர்வுகளை ஈர்த்து அவர்களுக்குப் பதில் சொல்லவும் முடியும்.

எப்படி அந்த உடலுக்குள் போனோமோ
1.பிறருடைய உடலில் விளையும் தீமைகளைக் கவர்ந்து
2.தீமையான உணர்வுகள் இந்த உடலில் விளைந்து
3.இந்த இரண்டு ஆன்மாக்களும் நஞ்சு கொண்ட நிலையில் மீண்டும் வளர்ந்து பின் மடிந்து விடும்.

பக்தியில் காட்டிய ஜபம் என்பது இன்று நமக்கு எளிதாக இருக்கலாம். அந்த வழியில் செய்து அனுபவித்து வந்தவர்களுக்கு ஏதோ நாம் ஜபம் இருக்கிறோம். ஆன்டவனை அடைய முடியும் என்று இருக்கலாம்.

ஆனால் இது அல்ல முறை.

இன்று சக்தி வாய்ந்த அணு குண்டை வீச பல இயந்திரங்களின் துணை கொண்டு விண்ணில் வீசுகின்றான். தனித்து வீசினான் என்றால் அதில் இயக்கச் சக்தியின் கிளைகள் இல்லை என்றால் அது இயங்காது.

சக்தி வாய்ந்த அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வலுப் பெறச் செய்து விண்ணில் செலுத்துகின்றான். எத்தனையோ செயற்கைக் கோள்களையும் இராக்கெட் மூலம் விண் செலுத்துகின்றார்கள்.

மனிதனான விஞ்ஞானி இவ்வாறு செய்வது போல
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலில் கலந்த நஞ்சினைப் பிளந்து
2.உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணுலகம் செல்லும் மார்க்கங்களைச் செயல்படுத்தினார்கள்.

தன் சீடர்களுக்கு இதையெல்லாம் உபதேசித்து இந்த உடலை விட்டுக் கடந்த பின் அந்த உயிரான்மாவை விண் செலுத்தப் பழக்கிக் கொடுத்துச் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

அரசர்கள் பக்தி என்ற முறைகளில் மதங்கள் என்ற நிலையில் பிரித்து அவர்கள் போதித்த தன்மை கொண்டு மீண்டும் மீண்டும் இது மனிதனுக்குள் சிக்குவதும் மற்ற உடலில் தப்புவதும் இப்படி இன்னொரு உடலுக்குள் (மனித உடலுக்குப் பின் விஷமான உடல்) தான் சென்றடைந்தார்கள்.

கடும் தவம் இருப்பவர்கள் நான்கு ஐந்து உடலுக்குள் செல்லலாம்.

1.இந்த அரசனாக இருப்பவன் கடும் தவங்கள் எடுத்திருப்பான்.
2.பல மந்திர ஒலிகளைத் தனக்குள் சேர்த்திருப்பான்.
3.அந்த அரசனை எண்ணி ஏங்கிய மற்ற மக்களுடைய நிலைகளும்
4.அவன் இறந்த பின் அதே ஜபத்தால் அவனைக் கவர்ந்து கொள்வார்கள்.

அதனின் வலுக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் சாகாக்கலை என்ற நிலைகள் தான் அவர்கள் சென்றார்கள். வேகா நிலைக்குச் செல்லவில்லை.

அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்களும் மதத்தின் அடிப்படையில் விண் செல்வோர்கள் சாகாக்கலையாக இங்கே தான் சுழன்று கொண்டுள்ளார்கள்,

தீயிலே குதித்தால் நம் உயிர் வேகுவதில்லை. விண்ணில் வரும் எத்தகைய நஞ்சும் இதை வேக வைக்க முடியாது. இந்த உயிர் வேகுவதில்லை.

ஆனால் எத்தகைய நஞ்சினையும் ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.
1.வேகா நிலை பெற்றவர்கள் மகரிஷிகள்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்தோம் என்றால்
3.நாமும் வேகா நிலை அடையலாம்.

நமக்குள் வரும் தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதே யாம் சொல்லும் இந்தத் தியானம்,

அந்த ஆற்றலைப் பெறவேண்டும் என்றால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து
1.நம் மூதாதையர்களை அங்கே இணையச் செய்தே ஆக வேண்டும்.
2.நம் தூதுவர்களாக அவர்களை அங்கே முதலில் செலுத்த வேண்டும்.

அவர்கள் துணையால் அங்கு இருக்கும் உணர்வுடன் எளிதில் நாம் தொடர்பு கொள்ள முடியும். சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பெரும் சக்திகளை நாமும் கவர்ந்து என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரமாக அந்த இடத்தில் என்றுமே நிலைத்திருக்கலாம்.

2 thoughts on “நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும்

  1. அந்த மூதாதையரில் ஒருவர் இப்போது நாமாகப் பிறந்திருக்கும் பட்சத்தில் அந்த ஆன்மாவை எப்படி அனுப்புவது? அது நம் உடம்பில் இப்போது அடைபட்டுள்ளதே. நம் ஊழ்வினை முடிந்து நாம் விடுதலைப் பெற்றால்தானே நம்முள் இருக்கும் மூதாதையரும் விடுதலை அடைவார்கள்?

    • நம்மைச் சிரமப்பட்டு உருவாக்கிய முன்னோர்களை மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலையை அடையச் செய்ய வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். மீண்டும் உடல் பெற்று விட்டால் இந்தப் பாக்கியம் கிடைப்பது அரிது தான்…! நம்மை உருவாக்கிய முன்னோர்களை அப்படி விடலாமா…?

Leave a Reply