அகஸ்தியன் ஒளியான உணர்வைச் சேர்த்து “நிலைத்த ஒளிச் சரீரம் பெறுங்கள்”

Agastiyar

அகஸ்தியன் ஒளியான உணர்வைச் சேர்த்து “நிலைத்த ஒளிச் சரீரம் பெறுங்கள்”

 
(1).நாம் அனைவருமே தெய்வத்தை எங்கே போய்த் தேடுகின்றோம்?

சாமியாரைப் போல உள்ளவர்களைத் தேடிச் செல்கின்றோம். ஏனென்றால் அவர்களிடம் தெய்வம் அடிமையாக இருக்கிறது என்று செல்கிறோம்.

அவர்களிடம் சென்றால் நமக்கும் “ஏதாவது கிடைக்கும்” என்று செல்கிறோம்?

ஆனால் அந்தத் தெய்வம் எங்கே இருக்கின்றது? நீங்கள் தேடும் அந்தத் தெய்வம் உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றது.

உயர்ந்த எண்ணங்களை எடுத்து நமக்குள் சேர்த்தோம் என்றால் நம் உயிர் என்ன செய்கிறது?
1.“ஓ…” என்று இயக்கச் செய்கிறது.
2.“ம்…” என்று நம் உடலாக்குகிறது.
3.“ஓம் நமச்சிவாய” என்று சிவமாக நம் உடலாகின்றது.
4.அப்பொழுது நம் உடலைச் சிவமாக வணங்க வேண்டும்.

சிவனுக்கு ரோஜாப் பூ மாலை அந்த மாலை எல்லாம் அங்கே கொண்டு போய்ப் போடுவதில்லை. ரோஜாப்பூவின் மணத்தைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது மாதிரித்தான்
1.இந்த உடலான சிவத்திற்கு
2.உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டும்.

மலரைப் போல் மணம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உள்ளுக்குள் எண்ணினோம் என்றால் இந்த வாசனை நம் உடல் முழுவதும் பரவி “ம்…” என்று உடலான சிவனுக்கு அமுதாகச் சேர்கின்றது. “அழகான உடலாக்குகின்றது”.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டினால் “உடலுக்குள் சந்தோஷமாக வரும்.”

அப்பொழுது உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய வாசனை இனிமையானதாக இருக்கும். நம் சொல் யாரிடம் சொன்னாலும் அந்தக் கனிவாகச் சொல்லச் சொல்லும்.

அப்பொழுது அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள்.

(2).குடும்பத்தில் வரும் வேதனைகளை அதிகமாக எண்ணினால் அதனின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும்?

ஒரு வேதனையான உணர்வை எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் உயிருக்குள் பட்டவுடனே அந்த வேதனையை உங்களுக்குள் உருவாக்குகின்றது.

எப்புறம் என்ன சொல்வீர்கள்?

இராத்திரிக்கெல்லாம்…, என் மேல் வலிக்கின்றது என் இடுப்பு வலிக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை. வியாபாரம் சரியில்லை. கொடுத்த பணமெல்லாம் திரும்ப வரவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆண்டவன் இன்னும்… என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்…, என்று சொல்லி வேதனையைத்தான் அதிகமாக எடுக்கின்றோமே தவிர நல்லதை எண்ணுவதில்லை.

1.நமக்கு ஆண்டவன் தான் எல்லாம் செய்து கொடுக்கின்றான் என்று நினைக்கின்றோமே தவிர
2.நம் உயிர் நாம் கொடுப்பதைப் (எண்ணிச் சுவாசிப்பதை) படைக்கின்றான் என்று
3.நாம் மறந்தே போய்விட்டோம்…, மறக்க வைத்துவிட்டார்கள்.

ஆகவே அந்த வேதனைப்படும் உணர்வை எடுத்தவுடன் வேதனையான சொல்களையே நாம் சொல்வோம். அதைக் கேட்பவர்கள் கொஞ்ச நேரம் நம் வேதனைகளைக் கேட்பார்கள். அப்புறம் என்ன ஆகும்?

இவன் எப்பொழுது பார்த்தாலும் வேதனை வேதனை என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றான். நம்மைக் கண்டாலே அவர்கள் வெறுத்துப் போக ஆரம்பிப்பார்கள்.

இந்த வெறுப்பான உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறினால் கடையிலிருந்து சரக்கை எடுத்துக் கொடுக்கும்போது என்ன ஆகும்?

என்ன சரக்கு… வேண்டும்…? “உஹும்…” என்று சொல்லிச் சங்கட சலிப்பு வெறுப்போடு தான் சரக்கை எடுத்துக் கொடுப்போம்.

ஒரு நாள் பூராம் இப்படிச் சொல்லிக் கொடுத்தால் “இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சலித்துக் கொள்கிறான்” என்று சொல்லிவிட்டு யாரும் வரவில்லை என்றால் அப்புறம் கடையில் வியாபாரமே ஆகவில்லை என்போம்.

வியாபாரம் நல்லாக வேண்டும் என்ற நோக்குடன் கடன் வாங்கியாவது கடையில் நல்ல சரக்காக வாங்கி வைத்திருப்போம்.

இந்தச் சலிப்பான உணர்வுடன் பேசியவுடன் மற்றவர்கள் காதில் பட்டு இந்தச் சலிப்பான உணர்ச்சிகள் மாறி நாம் அடுத்து அவர்களைப் பார்த்தோம் என்றால் கண்களிலிருந்தும் வேதனையான உணர்வுகள் தான் வெளி வரும்.

வேதனை உணர்வுடன் சரக்கைப் பார்த்தால் நல்ல சரக்குகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

(3).வேதனையான உணர்வுடன் கடைக்குச் சென்றால் நல்ல பொருளை நிச்சயம் வாங்க முடியாது

உதாரணமாக துணிக்கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் பையன் வந்து நானும் அங்கே வருவேன் என்று அடம்பிடித்தால் அப்பொழுது சங்கடமாகும்.

அப்பொழுது என்ன எண்ணுவீர்கள்…? பார்…, இந்தப் பையன் இப்படியே பண்ணிக் கொண்டிருக்கின்றான் எங்கேயும் போகவும் முடியவில்லை வரவும் முடியவில்லை என்ற வேதனைப்படுவீர்கள்.

கடைசியில் அந்த வேதனையுடன் தான் கடைக்குச் செல்வீர்கள்.

1.அந்த வேதனைப்படும் உணர்ச்சியுடன் ஜவுளிக் கடைக்குச் சென்று
2.நீங்கள் நல்ல துணி மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்.
3.யாம் உங்களிடம் பந்தயமிடுகின்றோம்.., உங்களால் முடியாது.

வேதனைப்பட்டதற்குத் தகுந்த மாதிரித் துணியைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். கடையில் உள்ளவர்கள் நல்ல துணிகளாக எடுத்துப் போட்டால்… “வேண்டாம்… இது வேண்டாம்…! இது வேண்டாம்…!” என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டேயிருப்பீர்கள்.

எந்த அளவிற்கு வேதனைப்பட்டு வந்தீர்களோ அது இயக்கும். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வேதனைப்பட்ட குணத்திற்குண்டான நிறம் தான் உங்களுக்குப் பிடிக்கும்.

கரு நீலமான நிறம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது விஷம்.

இந்த நிறம் கொண்ட துணியை எடுத்து வந்துவிடுவீர்கள். நீங்கள் “உங்கள் மனதுக்குப் பிடித்தது…” என்று எண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?

“இது என்ன…! இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்…?” என்பார்கள்.

ஏன்…? “இந்தத் துணிக்கு…, என்ன வந்துவிட்டது…!” என்று சொல்லிக் கொண்டு சண்டைக்குப் போவோம்.

மறு நாள் எல்லாம் சாந்தமான பிற்பாடு எடுத்து வந்த துணியைப் பார்த்தால் என்ன நினைப்போம்?

நேற்றுப் போகும் பொழுதே சனியன் மாதிரி வந்து என்னை இப்படித் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லிவிட்டு “எல்லாம் என் நேரம்…” என்று வேதனைப்படுவோம்.

கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்தால்… “வாங்குவானோ இல்லையோ… தெரியவில்லை…!” என்போம். அப்பொழுது தான் கண்ணுக்கே “நல்லதா கெட்டதா” என்று தெரிய வரும்.

(4).நம் குணத்திற்குத் தக்கதான் ருசியும் நம் சொல்லும் வரும்

நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள். கொஞ்சம் காரமானதைக் கொடுத்துச் சாப்பிட்டவுடனே “ஸ்ஸ்… ஆ…கா” என்று கொஞ்சம் உற்சாகமாகச் சாப்பிடுவீர்கள்.

ஆனால் அதே கோபமான நேரத்தின் ஒரு இனிப்பானதைச் சாப்பிடச் சொல்லிப் பாருங்கள்.

“தூ…” என்று துப்புவீர்கள். அந்த இடத்தில் உமட்டலாக வரும். எதிர்த்து வரும். வாந்தி வருகிற மாதிரித் தெரியும்.

மகிழ்ச்சியாக (இனிப்பாக) இருப்பவர்களுக்கு இந்தக் காரத்தைக் கொடுத்தோம் என்றால் “அப்பப்பா…ப்பப்பா…” என்று சப்தம் போட ஆரம்பிப்பார்கள்.

1.நம் உடலில் இருக்கக்கூடிய குணத்திற்குத் தகுந்த மாதிரித்தான் “ருசியும்” வருகின்றது.
2.நம் குணத்திற்குத் தக்கவாறு தான் “நம் சொல்லும்” வருகின்றது.

நம் சொல் அடுத்தவர்கள் காதில் பட்டவுடனே அதே திருப்பி அந்தப் பதில் திரும்ப வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் ஆன்மாவில் பட்டது இந்த மாதிரி இயக்குகின்றது.

பையன் மீது பிரியமாகத் தான் இருந்தோம். ஆனால் நம் மீது பட்ட அழுக்கைத் துடைக்கத் தெரியவில்லை.

தினசரி உடலில் உள்ள அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கத் துவைத்துக் கொள்கிறோம்.

1.நம் எண்ணத்தால் பட்ட அழுக்கு நமக்குள் போனதே.
2.அந்த அழுக்கைத் துடைக்கின்றோமா? யாரும் காண்பிக்கவில்லை.
3.நாம் துடைக்கவில்லை. துடைக்கத் தெரியவில்லை.

(5).பையனை எண்ணி வேதனைப்பட்டு வெறுப்படைந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குச் செல்லும்போது அவனை எப்படி இயக்குகின்றது?

நம் பையன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இந்த மாதிரிச் சொல்லி ஏதாவது கேட்கவில்லை என்றால் அதே வேதனையான நிலைகளில் அங்கே போய் வேலை பார்ப்பான்.

அந்தச் சங்கடமான நிலைகளில் இருக்கும்போது “ஏனப்பா… இது இந்த மாதிரி இருக்கிறது இதை எடுத்து இந்த மாதிரி வையப்பா…” என்று அங்குள்ளவர்கள் சொன்னால் பையன் என்ன சொல்வான்?

“அ..ஆ…, என்று மறுத்து…” அதெல்லாம் முடியாது…! நீ என்ன சொல்கிறது… நான் என்ன செய்கிறது… “நீயே செய்…! என்று வரும்.

ஏனென்றால் இங்கே வீட்டில் வந்த வெறுக்கும் உணர்வு அங்கே தொழிற்சாலையில் மேலதிகாரி வேலையைச் சொன்னவுடனே

1.“ஜிர்…’ என்று கோபமாகி முறைத்துப் பார்க்கச் சொல்லும்.
2.அங்கே எதிர்ப்பான். நீயே செய் என்பான்.
3.இதைப் பார்க்கலாம் நீங்கள்.

ஏதாவது உங்கள் வீட்டில் சங்கடப்பட்டு வேலைக்குச் சென்றால் உங்கள் மேலதிகாரி வேலை சொன்னால் உங்களுக்கு என்ன எண்ணம் வருகிறது என்று பாருங்கள்…!

உங்களுக்குத் தெரியாமலே அங்கே சண்டை போட வைக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இந்தச் சண்டையை அங்கேயும் மூட்டிவிட்டு யாரிடம் பதில் சொன்னாலும் விடாப்பிடியாக
1.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறார்கள்
2.என்னை அப்படிச் சொல்கிறார்கள் என்று
3.இதைத் தான் சொல்லச் சொல்லும்.

உங்கள் வீட்டில் வந்த இந்தக் குறை அங்கே போய் மோதி உங்கள் தொழிலேயும் இடைஞ்சல் கொடுக்கும்.

இந்த மாதிரி ஆனவுடன் நம் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களுக்கு இதெல்லாம் எதிரியாகிவிடும். உடலுக்குள் வெறுப்பும் வேதனையும் உண்டாகிக் கொண்டேயிருக்கும்.

அதே போல நம் நண்பர்களுக்கும் நம்மைப் பார்க்கும் பொழுது அதே வேதனையும் வெறுப்பும் வந்து கொண்டேயிருக்கும்.

இந்த விஷம் எல்லா இடத்திலும் பரவிவிடுகின்றது. இதே மாதிரித் தொழில் செய்யும் இடங்களில் அவரவர்கள் குடும்பத்திலேயும் இந்த மாதிரி இருக்கின்றது.

நாம் என்ன நினைக்கிறோம். நான்  நல்லது தான் நினைக்கின்றேன். ஆனால் என் வீட்டிலும் தொழிலும் இப்படி இருக்கின்றது என்று எண்ணி வேதனைப்படுவோம்.

நம் பையன் மீது பிரியமாக இருக்கும் பொழுது இந்த மாதிரி நடந்தால் “அடப் பாவிகளா.. இந்த மாதிரிச் செய்கிறார்களே…! என்று உணர்ச்சி வசப்படுவோம்.

“பார்த்து வேலை செய்டா” என்று சொல்லிவிட்டு “உனக்கு இப்படித் தொல்லை கொடுக்கின்றார்களே” என்று எண்ணி அதிலும் வேதனை வரும். ஏனென்றால் அங்கே இடைஞ்சல் வரும் போது தாய் என்பதால் பையன் எல்லாவற்றையும் இங்கே வந்து சொல்வான்.

அதே சமயத்தில் நண்பர்களிடம் சொல்லும் போது இப்படிப் பண்ணுகின்றார்கள் பாருங்கள் என்று சொல்வோம். எதற்கெடுத்தாலும் என் பையனுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்று அவர்களிடம் சொல்லி அவர்கள் உடலிலேயும் இந்த வேதனையைச் சேர்ப்போம்.

நாலு தடவை இப்படிச் சொன்னால் ஐந்தாவது தடவை நம் நண்பர்கள் அப்புறம் நம்மைக் கண்டாலே ஒதுங்கிப் போய்விடுவார்கள். இவன் என்னடா எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரிக் குறையையே சொல்லிக் கொண்டுள்ளான் என்று விலகிச் செல்வார்கள்.

இத்தகைய நிலைகள் கடைசியில் பகைமையாகி எதிரியாக்கிவிடும்.

காரணம் என்ன?

(6).நல்லதை எண்ணுவோம் ஆனால் நல்லதைக் காப்பதில்லை உடலிலுள்ள நல்ல குணங்களுக்குத் தேவையான நல்ல சக்திகளை நாம் கொடுப்பதில்லை

நல்ல செடிகள் விளையும் இடத்தில் விஷச் செடிகளை விதைத்தால் நல்ல செடிகளுக்குண்டான சத்தையெல்லாம் அது எடுத்துக் கொண்டு நல்ல செடிகளுக்கு உணவே இல்லாது செய்துவிடும்.

களை அதிகமாகிவிட்டால் நல்ல செடிகள் விளையுமோ?

நல்ல செடிக்கு வரும் சத்தெல்லாம் களை “லபக்..” என்று எடுத்து அது நன்றாக வளரும். ஏனென்றால் அது விஷம். இதே மாதிரித்தான்
1.நம் நல்ல குணங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்தையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும்.
2.அப்பொழுது நல்ல குணங்களையே எண்ண முடியாதபடி அது தவிக்கும்.
3.நல்ல குணங்கள் உடலை வளர்த்தது அனைத்தும் சோர்வடையும்.

நல்ல குணங்களை எண்ணவிடவில்லை என்றால் இந்தத் தீமை செய்யும் குணங்கள் “ஆட்சிக்கு” வந்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை பாசத்தினால் இப்படி வந்துவிடுகின்றது.

இந்த மாதிரியெல்லாம் நடந்ததால் பையனுக்கு அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் கெட்ட பேர் வருகின்றது. அவனுக்குள் வெறுப்பாகும் பொழுது அந்த வெறுப்பான நிலைகளிலே அங்கே எதிரியாகின்றது.

அங்கே வேலை செய்ய முடியாது. வீட்டுக்கு வர மாட்டான். ஹோட்டலில் போய்ச் சாப்பிடுவான். காசே பையன் சரியாக வீட்டுக்குத் தர மாட்டேன் என்கிறானே என்று வேதனைப்படுவோம்.

இதெல்லாம் செய்வது யார்?
1.நம் உயிர் தான்.
2.நம் உயிர் தான் நாம் எண்ணிய இவ்வளவையும் இயக்குகின்றது.
3.நாம் எண்ணியது அனைத்தும் தெய்வமாக இருக்கின்றது.
4.அதையும் காட்டுகிறார்கள் ஞானிகள்

(7).காளி – கோபம் – காளிக்கு முன்னாடி புலி

காளி மாரியம்மன் இப்படி எத்தனையோ தெய்வங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். ஆனால் எனக்குப் பிடிக்காததைச் செய்தான் என்றால் “ஜிர்ர்ர்….” என்று கோபம் வந்துவிடுகின்றது.

நம் சொன்னபடி பையன் கேட்கவில்லை என்றால் காளியாகவே மாறிவிடுகின்றோம்.

காளிக்கு முன்னாடி என்ன வைத்திருக்கின்றார்கள்?

புலியை வைத்துக் காண்பித்துள்ளார்கள். ஏன் வைத்துள்ளார்கள்? எனக்குக் கோபம் வந்துவிட்டால் முன்னாடி நிற்பதைப் பார்க்கின்றேனா?

புலி தன் பசியைத் தீர்க்க மற்றவைகளை அது இரக்கமற்றுக் கொன்று அது சாப்பிடுகின்றது.

அது எவ்வளவு தான் “விர்ர்ரா…விர்ர்ரா” என்று கத்தினாலும் அதைக் கேட்காது தன் பசியினுடைய அந்த ஆவேசத்தில் தான் இருக்கும். கடித்துக் குதறும். உணவாகப் புசிக்கும்.

அதே மாதிரித்தான் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்கிற பொழுது உன்னை அடித்து நொறுக்கினால் தான் உனக்குப் புத்தி வரும் என்று சொல்லி ஆவேசமாக அடிப்பார்கள்.

1.இந்தக் காளி இப்படி நொறுக்கும்.
2.புலி தன் பசியைப் போக்க எப்படி ஆவேசப்படுகின்றதோ அதே ஆவேசம் இங்கே வரும்.
3.அதனால் தான் “காளி – கோபம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இந்த வாழ்க்கையில் கோபமும் கொதிப்பும் அடிக்கடி எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள் என்றால் அடுத்த பிறவி “நிச்சயம் புலி தான்”.

இந்தக் கோபமான எண்ணத்தை எண்ணினால் உயிரான ஈசன் அதைப் படைத்து உடலுக்குள் வினையாகச் சேர்க்கின்றான்.
1.அப்பொழுது இந்த உடல் அது வினைக்கு நாயகனாக விநாயகா
2.அந்தப் புலியின் உடலாகவே மாற்றுகின்றது நம் உயிரான ஈசன்.

இதைக் காண்பிப்பதற்குத்தான் கோவிலில் இப்படி வைத்துள்ளார்கள். ஏனென்றால் இதெல்லாம் நம் உயிரின் இயக்க நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

(8).மற்றவரை ஏமாற்றினாலும் உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

1.நான் உங்களை ஏமாற்றலாம்.
2.யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம்.
3.எனக்குள் இருக்கும் உயிரிடம் நான் ஏமாற்றவே முடியாது.

உங்களை நான் ஏமாற்றுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்துவிடும்.

1.ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்தவுடன்
2.என்னிடம் உள்ள நல்ல குணங்களை எல்லாம்
3.இது ஏமாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஏமாற்றியவுடனே நாம் என்ன செய்வோம்? அதைக் கண்டு நாம் இரசிப்போம். ஆனால் ஏமாற்றப்பட்டவன் வேதனைப்படுவான்.

அவன் வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டு நாம் இரசித்தோம் என்றால் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் ஏமாற்றிவிடும்.

நான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று எண்ணினேன். ஆனால் எனக்குள் வந்து வேதனையாகிவிடுகிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகத்தான் கோவிலைக் கட்டி வைத்து விநாயகரை முன்னாடி நிறுத்தி நம்மை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

(9).அகஸ்தியன் ஒளியானது போல் ஒளியான உணர்வுகளை நாம் வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக நாம் ஒளிச் சரீரம் பெறவேண்டும்

வினைக்கு நாயகனான அமைந்த இந்த மனித உடலை எப்படிப் பெற்றோம்?

முந்தி மிருக நிலையிலிருந்தோம். மிருகமாக இருக்கும்போது சேர்த்துக் கொண்ட நல் வினைகளால் மிருக நிலையிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதாக இருக்கும் நாம் இன்று எந்த வினைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை நீ சிந்தித்துப் பார்…! என்று “கேள்விக் குறியும்” போட்டுப் பச்சையாகவே காட்டுகின்றார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.

1.அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மகள்
2.அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள்
3.இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி
4.அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம்
5.சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

அகஸ்தியாமா மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

ஒளியான அந்த அகஸ்தியனின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

“மனிதனின் கடைசி எல்லை அழியா ஒளிச் சரீரம் தான்”.

Leave a Reply