விநாயக சதுர்த்தி

Ganesa Idol

 

விநாயக சதுர்த்தி

 

வினை என்பது எது? வினைக்கு நாயகனாக எப்படி உருவானது? அதை எப்படி நிறுத்துவது? என்பதுதான் விநாயகர் சதுர்த்தி.

 

ஒரு உயிரணு பிறந்ததிலிருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்தபின் நமக்குள் பாசத்தால், அன்பால், பரிவால் பிறருடைய துன்பங்களைக் கேட்டறியும் பொழுது, நமக்குள் வேதனை என்ற தீயவினைகள் சேருகின்றது.

 

அதை நாம் எப்படித் தடுத்து நிறுத்துவது?

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட்டாலும் வேதனைப்படும் பொழுது தீயவினைகள் சேர்க்கப்படுகின்றது.

 

அதையெல்லாம் நாம் துடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்தான் விநாயக சதுர்த்தி. ஒருவர் மேல் உள்ள பகைமைகளை நிறுத்துவதற்குத்தான் விநாயக சதுர்த்தி என்பது.

 

ஒருவர் என்னை ஏசுகின்றார் என்றால், அந்த ஏசிய உணர்வுகள் எனக்குள் நிலைக்காமல் செய்வதும் அந்த உணர்வு எனக்குள் விளையாமல் தடுப்பதும் “விநாயகர் சதுர்த்தி”.

 

1.நமது வாழ்க்கையில் நாம் யார் யார் மீதெல்லாம்

2.தொழில் முறையிலோ நண்பர் என்ற முறையிலோ கொடுக்கல் வாங்கல் என்ற நிலையிலோ அல்லது

3.ரோட்டில் நடக்கும் பொழுது, இடித்துத் தள்ளிவிட்டால் அவர் மேல் குரோதம் கொண்டோ

4.இப்படிப் பல சமயங்களில் பல சந்தர்ப்பங்களில் வேதனையான எண்ணம் சேர்ந்துவிடும் பொழுது

5.அப்படிச் சேர்ந்த இந்த நிலைகளை நீக்குவதற்குத்தான் விநாயக சதுர்த்தி.

 

ஒருவருக்கொருவர் பகைமைகளை நீக்கி நமக்குள் மெய்ஞானிகளின் உணர்வை வினையாகச் சேர்த்து மனித வாழ்க்கையில் இந்த விநாயக சதுர்த்திக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பொருளறிந்து செயல்படும் தன்மையைப் பெறவேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளை அறியும் பொழுதும் பொருளை அறியாத நிலைகளிலும் அந்த ஞானியரின் அருளை எடுத்துப் பொருளை மறைக்கும் உணர்வின் தன்மையைத் துடைப்பதற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தனர் ஞானியர்.

 

வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி என்று வைத்து நம்மை இயக்கும் நிலைகளை அறியும் வண்ணம் ஞானிகள் செய்தார்கள்.

 

நாம் தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் நாளாக அகஸ்தியன் தனக்குள் தீயவினைகளை அகற்றி மெய் ஒளி பெற்ற நிலையை நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

 

இன்று நாம் எப்படிக் கொண்டாடுகின்றோம்.

 

விநாயகரை எடுத்துக் கொண்டால் புல்லைப் போடுகின்றோம். அடுத்து இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து சாப்பிடுகின்றோம்.

 

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள் சதுர்த்தி.

 

விநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

 

வருடத்திற்கு ஒரு தரம் களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும் மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.

 

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி

1.விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி

2.கெட்டதை நீக்கி அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்

3.இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது?

 

கொழுக்கட்டை அவருக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால் எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான் புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

 

கல்யாணம் ஆகவேண்டும் என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும் அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால் கொடுப்பார் என்பார்கள்.

 

அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? என்ற நிலையையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அதாவது ஸ்தல விருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு அரசும் வேம்பும் விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.

 

இந்த மனித வாழ்க்கையில் நல்லதை நாம் கேட்கிறோம். அதே சமயத்தில் ஒருவர் தன் கஷ்டமான நிலைகளைச் சொல்லப்படும் பொழுது காது கொடுத்துக் கேட்கின்றோம்.

 

அப்பொழுது அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன் என்ன செய்கின்றது?

 

“மாரி…” அவர் கஷ்டப்படும் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்துச் சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

 

அங்கே ஸ்தல விருட்சம் என்ன? கசப்பு. மாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது? அக்கினிச் சட்டி. அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?

 

நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்? அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.

 

அந்த மாரியம்மன் கோவிலில் அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தல விருட்சம் கசப்பு. “நெருப்பிலே போட்டுக் கசப்பை நீக்கு” என்று பொருள்.

 

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்?

 

அதே சமயத்தில் இந்த விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள்? அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள்.

 

கசப்பைச் சிறுத்து அந்த அரசின் நிலைகளில் நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

 

நாம் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்?

 

உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன் நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?

 

பல கோடிச் சரீரங்களில் புல்லைத் தின்றோம் இலை தழைகளையும் செடிகளையும் தின்றோம்.

 

இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து நமக்கு வேண்டியதைப் படைத்து உணவாக உட்கொள்ளும் இந்த மனிதச் சரீரத்தைப் பெற்றோம்.

 

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.

 

கசப்பின் நிலைகளை நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ அதைப் போல மெய்ஞானிகள் இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.

 

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி இந்தக் “கசப்பைச் சிறுக்கச் செய்தல்” வேண்டும்.

 

அந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ அதை ஆட்சி புரிந்த நிலைகளில்,

1.தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”

2.நமக்குள் ஆட்சி புரியும் என்றுதான் இந்த ஸ்தல விருட்சத்தை வைத்தார்கள்.

 

அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகப் பெற்றுத் துருவ நட்சத்திரமாக விண் சென்ற நந்நாளே விநாயகர் சதுர்த்தி.

 

அரசைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அனைவரும் பெறுவோம். மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

Leave a Reply