“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

 

Light world.jpg

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப்  போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.

எப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.

ஆனால்  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.

இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
1.நாம் ஒவ்வொரு நாளும்
2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது
3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
1.உயிரின் துணை கொண்டு  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது
2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.

ஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.

இப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்
1.உயிர் நம்மை உருவாக்கியது என்று
2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது

1.நாம் இந்த உடலை  விட்டு  எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.

ஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.

Leave a Reply