இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்…!”

Great sage.jpgஇந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்…!” 

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக” ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது…! என்று சொல்லலாம்.

அகஸ்தியரை… “எல்லாவற்றிலும் வல்லவர்…!” என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்தி விட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்…!” என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளை அரசர் காலத்தில் சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்.

சாங்கியங்களைச் செய்தால் ஆண்டவன் மெச்சி உனக்கு எல்லாம் செய்வான் என்று நம்மைச் சரணாகதித் தத்துவத்தில் திசை திருப்பி விட்டார்கள்.

ஆனாலும் இன்று காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட பின்னும் இப்பொழுது இந்தச் சந்தர்ப்பத்தில் இதை இழந்து விட்டால் அடுத்து நமக்கு விண் செல்லும் மார்க்கம் ஏது?

அந்த மெய் ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று காடு மலை எல்லாம் என்னை (ஞானகுரு) அலைய வைத்தார்.

1.உண்மையை அறிந்து கொள்வதற்கு உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
2.பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்டபின் நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.
3.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் நீ பெறச் செய்.
4.மறைந்த நிலைகளை மீண்டும் மக்களுக்கு எடுத்து ஊட்டு.
5.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

உனக்குள் மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்துக் கொண்டால் அந்த மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது.

அதனால் நீயும் ஒளியாகின்றாய். கேட்போரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய். அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை அமைகின்றது.

1.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு.
2.எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
3.அதுவே உனக்குள் பேரானந்தப் பெரு நிலையாக ஏகாந்த நிலை அடைய உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி கொண்டு தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி உங்கள் நினைவு கொண்டு ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுப்பது.

இருளை அகற்றும் சக்தியாக “அகஸ்தியரைப் போன்ற மகா ஞானியாக நீங்கள் மாறவேண்டும்…!”

 

Leave a Reply