“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள் விண்ணுலகம் சென்ற நிகழ்வு

Light world.jpg

“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள் விண்ணுலகம் சென்ற நிகழ்வு 

நான் ஏதோ.., “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள்.

இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்

“மனிதனும் தெய்வமாக வேண்டும்.., தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.

1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்.
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்.
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலையை உணர்த்திய இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற இன்றைய நிலையில் எத்தனையோ ஏனைய ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.

இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்?

இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.

அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால், அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.

ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.

சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும் “விண் செல்லும் ஆற்றலை..,” அவர்களும் கற்றுணரவில்லை.

மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும்” என்று யாரும் எண்ணவில்லை.

இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து” என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை” என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.

மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின்  நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.

காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா… இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது” என்றுதான் எண்ணினார்.

அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.

அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.

அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுக போகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.

உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றினர். ஆனால் அந்த மகான்களின் உபதேசங்களை இந்த மனித வாழ்க்கைக்குத்தான் பின்பற்றினார்களே தவிர அவர்கள் காட்டிய அற நெறிகளை யாரும் பின்பற்றவில்லை.

1.இந்த மனித வாழ்க்கையைச் சதம் என்றே எண்ணினார்கள்.
2.சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்.
3.சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு
4.சதமற்றுப் புழுவைப் போல இன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதனின்று மீட்டிட வேண்டும் என்பதற்கே சொல்கிறேன் நான் கொடுத்த அருள் உணர்வின் ஞான வித்தை உன்னுள் வளர்த்து விடு என்றார் குருநாதர்.

பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து” என்றார்.

அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்…, இணைக்கக் கற்றுக் கொடுத்தார்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது? என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.

இராமலிங்க அடிகள், போகர், இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகாநந்தர், இராகவேந்திரர், ஐயப்பன் இவர்களையெல்லாம் விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.

அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.

1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.

இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?

பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.

“அங்கே இணைத்து” உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்” என்றார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply