“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக்

Happiness.jpg

“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம்

நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட “அந்த உணர்வுகளே..,” நம்மை மனிதனாக உருவாக்கியது.

அதாவது சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் சிந்தித்துச் செயல்படும் இந்த உணர்வின் எண்ணமும் அதற்குத்தக்க அங்கங்களும் அமைந்து அந்த உணர்வின் ஆற்றலால் எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.

பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த நாம் இன்று என்ன செய்கின்றோம்?

நாம் எதையெல்லாம் நன்மை என்று எண்ணுகின்றோமோ “அந்த நல்லதை எண்ணி.., நாம் செயல்படும் நிலைகளில்” ஒருவர் தவறு செய்யும் பொழுது நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.

இது நம்முடைய சந்தர்ப்பம்.

பிறர் செய்யும் தவறைப் பார்த்த பின் சலிப்பு, சங்கடம், சஞ்சலம், கோபம் குரோதம், அவசரம், ஆத்திரம், அந்த உணர்வின் நிலைகளை நம் எண்ணத்தால் நமக்குள் சேர்த்துவிடுகின்றோம்.

இவை அனைத்துமே விஷமான உணர்வுகள்.

அதே மாதிரி வீட்டில் எல்லோரும் நல்லதை நினைக்க வேண்டும் என்று நினைப்போம். “அப்படி இருக்க வேண்டும்.., இப்படி இருக்க வேண்டும்..,” என்றெல்லாம் நினைப்போம்.

ஆனால் பையனுக்குக் கல்யாணம் ஆனபின் “பையன்.., இப்படியெல்லாம் செய்கின்றானே…!” என்ற வேதனையை எடுத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். வேதனை என்ற சொல்லுக்குள் “அனைத்துமே விஷம்”. சமையல் செய்யும் பொழுது, பலகாரங்களை நல்ல முறையில் பக்குவமாகச் செய்துவிட்டுக் கடைசியில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் என்னவாகும்…?

சுவை அனைத்தும் மாறிவிடும்.

பையன் செய்யும் தவறைப் பார்த்தபின் நாமும் அதைப் போன்ற நிலையை அடைகின்றோம்.

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் குடும்பத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் அதிகமாக நுகர வேண்டியிருக்கின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம். ஏமாற்றுபவர்களை வேதனைப்படுபவர்களை சங்கடப்படுபவர்களை கோபப்படுபவர்களை நாம் எல்லாவற்றையும் பார்க்க நேர்கிறது.

இந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் ஓம்.., நமச் சிவாய, ஓம்.., நமச் சிவாய என்று சதா சிவமாக நம் உடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

நம் உயிர் உடலுக்குள் அவைகளை உருவாக்கிக் கொண்டேயுள்ளது. அதன் வழியில் நம்முடைய உணர்வையே அது மாற்றி விடுகின்றது. அதை மாற்ற வேண்டுமல்லவா?

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நாம் தீமைகளை மறந்து பேரருளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சிவமாக்கி எல்லோருக்கும் அந்த நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை உடலாக்கினால் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் உணர்வுகள் வரும்.

“நம் எண்ணங்கள்.., ஒன்று சேர்த்தால்..,” என்றைக்குமே சந்தோஷமாக இருக்கும். அதுதான் “கல்யாணராமா..,”

இராமாயணத்தில் ஜனக சக்கரவர்த்தி சீதாவை திருமணம் செய்ய சுயம் வரத்தை ஏற்படுத்துகிறார்.

எல்லோரும் வருகிறார்கள். அவரவர்கள் திறமையைக் காட்டுகிறார்கள். திறமையைக் காட்டினால் சீதாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று காட்டுகிறார்கள்.

அப்பொழுது இராமன் என்ன செய்கிறான்? தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிடுகின்றான்.

ஏனென்றால், நம் உடலில் கெட்டதை ஒடிப்பது என்றால் அவ்வளவு சாமானியமானதல்ல. இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

தீமை செய்யும் தனுசை இராமன் ஒடித்துவிடுகிறான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்.

சீதாவை அரவணைக்கும்போது “கல்யாணராமா”. பிறர் மேல் உள்ள வெறுப்பான குணத்தை நாம் நீக்கிவிட்டால் அந்த வெறுப்பான உணர்வுகள் நீக்கியபின் இரண்டு எண்ணங்களும் ஒன்றாகி விட்டால் கல்யாணராமா.

நம் உடலிலிருக்கும் தீமையை நீக்கி பிறர் மேல் இருக்கும் வெறுப்பான உணர்வை நீக்கிவிட்டு பிறர் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் நம் உடலுக்குள் ஒன்று சேர்த்து வாழும்.

1.நமக்குள் இருக்கும் எண்ணங்களை எப்படி ஒன்று சேர்க்க வேண்டும்?
2.பகைமை உணர்வு வளராதபடி எப்படித் தடுக்க வேண்டும்?
என்று தான் கோவில்களிலே உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால், அந்த ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் இப்படி நினைக்கிறோமா..? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply