தியானம் செய்வதன் நோக்கம்

Meditation, Healing.jpg

தியானம் செய்வதன் நோக்கம்

1.தியானம்

இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஞானிகள் மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு இன்றும் நமக்கு முன்னால் இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது.

அந்த அருள் சக்திகளை நாம் பெறும் நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து அதைச் சமைத்து விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும் இந்தத் தியானம்தான்.

நம்மிலே பலர் தியானம் என்றாலே மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION). அதெல்லாம் நம்மால் முடியாது.., என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்

1.மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும்

2.அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான்

3.நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும் இந்தத் தியானத்தை நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளைச் சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுதுதான் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்து அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான் இந்தத் தியானம்.

கையில் அழுக்குப்பட்டால் நாம் என்ன செய்கின்றோம். நல்ல நீரை விட்டுத்தான் கழுவுகின்றோம். மறுபடியும் அழுக்காகின்றது. மீண்டும் நல்ல நீரை விட்டுத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இது போன்று தான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம், பார்க்கின்றோம் அவர்கள் நல்லது கெட்டதை நாம் அறிய நேர்கின்றது, சுவாசிக்க நேர்கின்றது.

அதையெல்லாம் நாம் அப்படியே விட்டுவிட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் மற்றவர்கள் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் கலந்து அவைகள் மாசுபடும். நம் நல்ல குணங்களை இயக்க முடியாது.

நம் நல்ல குணங்களைக் காக்க நமக்கு ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதை எண்ணிச் சுவாசித்துப் பெறுவது தான் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமக்குள் சேர்ப்பது தான் தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும்.

நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

2.தியானம் செய்யும் முறை

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்கி தாய் தந்தையரை வணங்கி வழி காட்டும் குருவை எண்ணி அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்துங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்கி, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்துங்கள்.

கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து உயிரில் (புருவ மத்தியில்) அந்த அழுத்தம் பட வைத்து உயிர் வழி நுகருங்கள்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில்

1.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்

2.அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும்

3.அது எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும்.

4.அது எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி

5.நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம் நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கும் பழக்க்ம் தான் இந்தத் தியானம்.

அப்பொழுது எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவதே தியானத்தின் நோக்கம்.

Leave a Reply