இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர்

Eswaraya gurudevar.JPG

இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர்

தான் பெற்ற மெய் உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல பேரிடம் எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்?

எனக்குக் காசைக் கொடுத்தால் கோவிலைக் கட்டி நான் எத்தனையோ செய்துவிடுவேன் என்று சொல்கிறார்கள்.

குருநாதர் பல சக்திகளைக் காட்டினார்.., நோய்களைப் போக்கும் பல மூலிகைகளைக் காட்டினார் என்றால் அதை வைத்துச் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் வந்தார்களே தவிர அழியாத சொத்தை அந்த அருள் ஞானப் பொக்கிஷத்தை வாங்க யாரும் வரவில்லை.

சிலருக்குப் பாதரசத்தைச் (இரசமணி) செய்து கொடுத்தார். அதில் என்னவெல்லாம் தெரிகிறது பார்..,! என்று காண்பிப்பார். மேலும் அதில் என்னென்ன தெய்வங்கள் எல்லாம் தெரிகின்றது என்றும் காண்பிப்பார்.

பாதரசத்தால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தெந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றதோ.., அந்த உணர்வின் “ரூபங்கள்” வரும்.

எல்லாம் சேர்த்துச் சூரியனிலிருந்து வரக்கூடிய அந்தப் பாதரசமே எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் வழிகளில் எப்படி இயங்குகின்றது? என்பதனை எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஏனென்றால், இன்று நாம் வெயில் என்று பார்க்கின்றோமே இது சூரியனிலிருந்து வெளி வரும் பாதரசம் தான். சுக்குநூறாகத் தெறித்து ஒளி அலைகளாகத் தெரிகின்றது. இதைச் சூரியனின் வெப்ப காந்த அலைகள் என்பார்கள்.

குருநாதர் செய்து கொடுத்த (இரசமணி) பாதரசத்தில் இந்தச் சாமி தெரிகின்றது அந்தச் சாமி தெரிகின்றது என்று சொல்வார்கள். “காளிதேவி தெரிகின்றது.., மாரியம்மன் தெரிகின்றது..,” இப்படி இவர்கள் எண்ணம் எதுவோ அங்கே அதைப் பிரதிபலிக்கும்.

1.பாதரசத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எதுவோ

2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் “தெய்வமாக” எப்படி இருக்கின்றது?

3.ஆகவே, நம் உயிரை எப்படி மணியாக்க வேண்டும்?

உயிர் ஒளியைப் போன்று ஆனது. இருளை நீக்கி எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தைத்தான் குருநாதர் அந்தப் பாதரசத்தை வைத்து இரசமணியாகக் காட்டினார்.

குருநாதர் பைத்தியக்காரர் போல் இருக்கும் பொழுது அவருடன் பழகியவர்கள் எல்லாம் தங்கம் செய்யும் நிலைகளைப் பாதரசத்தை வைத்துச் சொல்லிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள் என்றெல்லாம் உடல் ஆசை கொண்டு (இன்றும்) சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இரசமணியில் பல சத்துக்களைச் சேர்த்துச் சேர்த்து தங்கத்தைச் செய்துவிட்டால் சிரமமில்லாமல் வாழலாம் அல்லவா. இப்படிப்பட்ட ஆசைகள் வந்துவிடுகின்றது.

நம் வாழ்க்கையில் ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் அதைக் கேட்டவுடன் நம் மனது மங்கிவிடுகின்றது. அந்த மனதை மங்காமல் இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்?

அதற்காக வேண்டித்தான்.., குருநாதர் “மனதைத் தங்கமாக்கும்..,” நிலைகளைச் சொன்னார். எனக்குக் குருநாதர் கொடுத்தது

1.உணர்வை எல்லாம் ஒளியாக்கி

2.ஒளியின் தன்மையாக

3.இந்த இரசமணியாக்க வேண்டும்

4.உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து உங்கள் உயிரை ஒளியாக ஆக்குவது தான் இரசமணி.

அதே சமயத்தில் அழுக்குச் சேராமல் இருப்பது தங்கம். தங்கத்தைப் போல் உன் மனதை எப்படிப் பெறவேண்டும் என்று காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று ஆசைகளை ஊட்டிப் பல நிலைகளையும் பேருண்மைகளையும் உணர்த்தினார்.

அவர் உணர்த்திய அருள் ஞான உணர்வுகளைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் வெளிப்படுத்துகின்றோம்.

Leave a Reply