8.விஷ்ணு தத்துவம்

varaha avatar

8.விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 8. வராகன்

நாம் எல்லோரும், பன்றியை அசுத்தத்தில் உழலும் ஒரு ஜீவனாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஞானிகள் பன்றியின் தலையை மனித உடலில் பொருத்தி கடவுளின் அவதாரங்களில் வராக அவதாரம் என்றுரைத்து நம்மை வணங்கச் செய்தனர்

  1. உணர்வின்இயக்கங்கள்

ஒரு முறை குருநாதர் எனக்குக் காபி அவருக்கு டீ வாங்கி வரச் செய்து இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி” என்கிறார்.

யாம் இதைப் பார்த்து, “நாம் வசமாகச் சிக்கிக் கொண்டோம்” என்று எண்ணி சாலையில் செல்கின்ற ஆட்களைப் பார்க்கின்றோம். அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது?

இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன் ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.

ஆக இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை.

எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அப்பொழுதுதான் உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

எதை  எண்ணினோமோ அதே இனம் நமக்குள் நின்று அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

அப்பொழுது அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன் முடியவில்லை.

“சரி நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா” என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள்.

டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

அப்பொழுது நீ வரும் பொழுது கொஞ்சம் முறுக்கு கடலைப் பருப்பு பொட்டுக் கடலை வாங்கி வா என்றார் குருநாதர்.

மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடை அருகில் ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார்.

முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

  1. நாற்றத்தைப் பிளந்து நல்லதைப் பிரித்து எடுக்கின்றது பன்றி

அங்கிருந்து பன்றி வருகின்றது. வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து, முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் போகின்றது.  அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத் தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை, நீ எதை எடுக்கின்றாய்? என்றார்.

காபி இருக்கின்றது. நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை. உன் உடல் நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்துவிடுகின்றது.

உன் உடலிலிருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர்.

நான் என்ன பதில் சொல்வது?

இந்த உணர்வின் இயக்கங்கள் நீ சாப்பிடும் ஆகாரம் ருசியாகச் சாப்பிடுகின்றாய். அதிலே இருக்கக் கூடிய நஞ்சு அதில் இருக்கக்கூடிய நாற்றத்தையெல்லாம் மலமாக மாற்றிவிடுகின்றது  உன் உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு.

  1. அவனன்றி ஒரு அணுவும் அசையாது

பன்றியின் உயிர் தீமைகளைப் பிளந்து தீமைகளை அகற்றிடும் உணர்வினை நுகர்ந்து அதனில் விளைந்த உணர்வின் சத்தால்தான் இன்று மனித உடலைப் பெற்றிருக்கின்றது.

நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்லதை நுகரும் ஆற்றாலால்தான் நஞ்சைப் பிரிக்கும் உடல் உறுப்புகள் உருப்பெற்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

வராகன் என்றால் மிகவும் வலிமைமிக்கது. தீமைகளைப் பிளக்கும் சக்தி வாய்ந்த உணர்வை எடுத்துத்தான் மனிதனானோம்.

ஆகவே உயிர்தான் கடவுள். உனக்குள் நின்று

1.எண்ணியதை உருவாக்குவதும்,

2.எண்ணியதை ஜீவனாக்குவதும்,

3.எண்ணியதைச் செயலாக்குவதும் உயிரே.

4.அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

நீ எதை எதை எண்ணுகின்றாயோ அது உன்னுள் அணுவாக மாறி அணுவின் இயக்கமாகத்தான் உன் உடலின் இயக்கமும் உன் சொல் செயல் எல்லாமும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

மனிதனாக உருவாகக் காரணமாக இருந்ததே உனது உயிர்தான் என்று எமக்கு உபதேசித்தார் குருநாதர்.

Leave a Reply