நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி

POLARIS

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி 

நாம் மனிதரான பிற்பாடு பிறர் சொல்லும் கவலைகளையும் சங்கடங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் கவலையையும் சஞ்சலத்தையும் வேதனையையும் உண்டாக்கும் சந்தர்ப்பம் தன்னாலேயே வந்து விடுகின்றது.

ஆகவே கவலை வேதனை போன்ற உணர்வுகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும்”
என்ற இது போன்ற வார்த்தைகளைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

இது போன்ற வார்த்தைகளை அந்தக் கவலையாகச் சொன்னவர்களிடம்… “நீங்கள் கோபமாகச் சொன்னாலும் சரி”.

“இந்த உணர்வின் அழுத்தம்..,” நஞ்சான உணர்வுகள் உங்களிடம் வராது தடுத்துவிடும்.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும், நீங்கள் நலமாக இருப்பீர்கள், உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கோபமான உணர்வுடன் “அழுத்தத்துடன் சொன்னால்” நஞ்சான உணர்வுகள் அவர்களிடமிருந்து விலகும்.

“நம்மிடம் அது வராது…!”

இல்லையென்றால் அவர்களுடைய கவலைகளை சஞ்சலங்களை “உம்… ம்…” என்று நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் உங்களிடம் சோர்வு வந்துவிடும். சிந்தனைத் திறனும் குறையும்.

ஒரு நண்பர் மேல் பாசமாக இருக்கிறோம். திடீரென்று… அந்த நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

“நேற்று வரை நன்மைகள் செய்தாரே…! இன்று விபத்தில் சிக்கி இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணுவோம்.

“ஆத்ம சுத்தி செய்வதை மறந்துவிடுவோம்…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடுவோம்.

அடிபட்ட நண்பரை ஆஸ்பத்திரியில் பார்த்து எப்படி இருந்தவர் “இப்படி இருக்கின்றாரே…” என்று எண்ணினால் இதன் உணர்வுகள்தான் வரும். நமக்குள் அது வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி உடனே நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இருளான உணர்வுகள் நம்மை “இயக்கவிடாதபடி…” தடுத்துவிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பரின் உடல் முழுவதும் படர்ந்து அவருடைய வேதனைகள் நீங்கி நல் உணர்வைப் பெறக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அவர் பூரண குணமடைய வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

“இது சாதாரணமானதல்ல…” நீங்கள் இதன் உணர்வுகளைச் சொல்வதை.. “நண்பர் தம் காதால் கேட்டால்.. அவர் நுகர நேர்ந்தால்..” நீங்கள் எண்ணிய உணர்வுகள் நண்பரிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

சீக்கிரமே நண்பர் நலம் பெறுவார். இது போன்று நீங்கள் செய்து பாருங்கள்.

ஒருவர் எவ்வளவு கடிமான நோயில் இருந்தாலும் கூட நீங்கள் கூடுதலாகச் சில நிமிடம் அவருக்காகத் தியானம் செய்யும்போது அவர் சீக்கிரமே நோயிலிருந்து விடுபட்டு நலம் பெறுவார்.

“உங்களுக்கு… அந்தச் சக்தி உண்டு…!” என்று யாம் கூறுகின்றோம்.

மற்றவர்களுடைய வேதனைகளை நோய்களை உங்களால் நீக்க முடியும். ஆனால், தவறிப் போய் நோயாளியின் வேதனை உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நண்பருடைய உடல் முழுவதும் படரவேண்டும், நண்பருடைய இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், அவர் வேதனையிலிருந்து விடுபட வேண்டும். அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நண்பரையும்.., “இது போன்று எண்ணச் சொல்லுங்கள்”. இதை உங்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், மற்றவர்கள் சொல்கிற கஷ்டங்களை நாம் கேட்கிறோம். கேட்டவுடன் நாம் சோர்வடைகின்றோம்.

ஆத்ம சுத்தியையும் அருள் உணர்வுகளையும் சொல்லும்போது சோர்வை நீக்குகின்றோம்.

“அந்த அருள் சக்தியைத்தான்” யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

Leave a Reply